ADVERTISEMENT

'முதல்வரின் பேரன்கள் எங்கு படிக்கிறார்கள்..? இயக்குநர் அமீர் காட்டம்..!

06:54 PM Jul 23, 2019 | suthakar@nakkh…

புதிய கல்விக்கொள்கை பற்றிய விவாதம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், அதுபற்றி நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். அவரின் கருத்து அரைவேக்காட்டு தனமான ஒன்று என தமிழக அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், சூர்யா வன்முறையை தூண்டி விடுகிறார் என பாஜகவினர் கொதித்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக இயக்குநர் அமீரிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,

புதிய கல்வி கொள்கை தொடர்பாக தமிழகத்தில் நீண்டதொரு விவாதம் நடைபெற்று வருகிறது. இதை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா இதுதொடர்பாக கருத்து தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரின் கருத்துக்கள் வன்முறையை தூண்டும் விதமாக இருக்கிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதை பற்றிய உங்களின் பார்வை என்ன?

இந்த புதிய கல்விக் கொள்கை எந்த வகையில் புதியது என்று மத்திய அரசு தான் அனைவருக்கும் விளக்க வேண்டும். இவர்கள் ஆரம்பித்துள்ள புதிய இந்தியா, டிஜிட்டல் இந்தியா என, 'புதிய' என்ற பெயரில் ஆரம்பிக்கும் அனைத்தும் ஏற்கனவே தொடங்கப்பட்ட ஒன்றுதான். நடைமுறையில், இந்த திட்டங்களில் பின்னால் இருப்பது ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ இயக்கங்களின் கருத்துக்கள் தான். இந்த சனாதன கருத்துக்களை தமிழகத்தில் எந்த வழியிலாவது திணிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அதன் மற்றொரு வடிவம் தான் இந்த புதிய கல்விக்கொள்கை. ராஜாஜி கொண்டு வந்த கல்வி திட்டத்துக்கும், இந்த புதிய கல்விக்கொள்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதனுடைய மறுவடிவமாகவே இதனை நான் பார்க்கிறேன்.

ADVERTISEMENT



ADVERTISEMENT

புதிய கல்விக்கொள்கையின் நோக்கத்தை எப்படி இதனுடன் தொடர்பு படுத்துகிறீர்கள்?

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நம் கல்வி நிலைமை எப்படி இருந்தது. யார் கற்றுக் கொடுப்பவர்களாக இருந்தார்கள். உயர் ஜாதியை சார்ந்தவர்கள், பார்ப்பனர்கள் இவர்கள் தான் கற்றுக்கொடுக்கும் இடத்தில் இருந்தார்கள். நீங்களோ, நானோ அந்த இடத்தில் ஒருபோதும் இருந்ததில்லை. இந்த அவலநிலையை தான் தமிழகத்தை ஆண்ட தலைவர்கள் படிப்படியாக மாற்றினார்கள். அவர்களின் அயராத முற்சியின் காரணமாக வந்தவன் தான் இந்த அமீர். ஆகையால் கல்வி அறிவே மறுக்கப்பட்ட ஒரு சமூகம், தற்போது அதில் இருந்து படிப்படியாக அடுத்தடுத்த நிலைக்கு மாறி வருகிறது. இவ்வாறு, சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, அடிமையாக வைத்துக்கொள்ளப்பட்ட சமூகமக்கள் என, அனைவருக்கும் தமிழகத்தில் தங்கு தடையின்றி கிடைத்த கல்வியின் காரணமாக அவர்கள் ஆசிரியர்களாக, பட்டதாரிகளாக, வழக்கறிஞர்களாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ளனர். இந்த வளர்ச்சியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை, இதனை பார்த்து அவர்கள் அச்சம் கொள்கிறார்கள். இப்போதும் நாம் கற்றுக்கொடுக்க கூடிய இடத்துக்கு வந்துவிட்டோம். இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் கண்களை இந்த முன்னேற்றம் உறுத்துகிறது. முற்படுத்தப்பட்ட பிள்ளைகளுக்கு இணையாக சரிக்கு சரியாக நம் பிள்கைகள் இருக்கிறார்கள். அவர்களை எப்படி பின்னோக்கி இழுக்கலாம் என்று யோசிக்கிறார்கள். அப்படி அவர்கள் நினைத்ததன் விளைவுதான், மாணவர்கள் எளிதில் மருத்துவ படிப்புக்கு செல்லக்கூடாது என்ற நோக்கில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதையும் மாணவர்கள் இப்போது வெற்றிகரமாக தாண்டி வருகிறார்கள். இதனால் தான் இவர்களை 12 வகுப்புக்கு கூட வர விடக்கூடாது என்று, இந்த புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது 3 வகுப்பை கூட தாண்டாமல் குழந்தைகளை பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களின் அப்பா என்ன தொழிலை பார்கிறார்களோ அதில் குழந்தைகளை தள்ளிவிட பார்க்கிறார்கள்.

இது திறனை அறிந்து கொள்வதற்கான தேர்வு என்று கூறுகிறார்களே?

முடி திருத்துதல் ஒரு நல்ல தொழில்தான். அதை அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுப்பார்களா? மலம் அள்ளுதல், குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர் சுத்தம் செய்தல் போன்றவை தற்போது அரசு வேலையாகத்தான் செய்யப்படுகிறது. இந்த தொழிலை எல்லாம் அனைத்து சாதி குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்பார்களா? கடந்த மூன்று தலைமுறைகளாக மட்டுமே நம் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. அதையும் பறிக்கும் முயற்சியாகவே இதனை நான் கருதுகிறேன். இந்த கோபத்தின் வெளிப்பாடாகவே சூர்யா பேசி இருக்கிறார். அவர் பேசியதில் நூறு சதவீதம் உண்மை இருக்கிறது. ஏனெனில் அவருக்கு கல்வி சம்பந்தமான உண்மை நிலவரம் என்னை விட, உங்களையும் தாண்டி அதிகம் தெரியும். அவ்வாறு தெரிந்ததன் காரணமாகவே அந்த மேடையில் அவர் கொதித்துள்ளார். சூர்யா போன்றதொரு நடிகர், பொதுவெளியில் இந்த கல்விக்கொள்கை பற்றி பேசுகிறார் என்றால் அதற்கு பெரிய துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் சூர்யாவுக்கு இருக்கிறது.

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசும் நடிகர் சூர்யா, அவருடைய குழந்தைகளை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் தானே படிக்க வைத்துள்ளார் என்று எதிர்தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்களே?

அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்துள்ளீர்கள், அவர் படிக்க வைக்கிறார். சூர்யா மட்டும் தான் அவருடைய குழந்தையை சிபிஎஸ்சி-யில் படிக்க வைக்கிறாரா? நாட்டில் உள்ள பாஜகவினருடைய குழந்தைகள் எல்லாம் எங்கு படிக்கிறார்கள். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களின் பேரன் பேத்திகள் எங்கு படிக்கிறார்கள் என்று கூறுங்கள். கல்வியை தனியாருக்கு தாரை வார்த்தது யார்? சூர்யா கொடுத்தாரா? நீங்க தானே கொடுத்தீர்கள். இவ்வளவு பேசுகிறீர்கள் நீட் தேர்வை ஏன் கோச்சிங் சென்டரில் சொல்லித் தருகிறீர்கள். பள்ளிகளில் நீட் தேர்வு கோச்சிங் சென்டர் தொடங்க வேண்டியதானே. தனியார் கோச்சிங் சென்டர்களை மூட வேண்டியது தானே. ஏன் செய்ய மறுக்கிறார்கள்.

யார் எதை பற்றி விமர்சனம் செய்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான விமர்சனம் வருகிறதே?

பணமதிப்பிழப்பு சம்பவத்தில் அரசை வாழ்த்தி பேசியபோது சூர்யா எல்லா விவரமும் தெரிந்தவர். அதுவே அரசை பற்றி எதிர்த்து பேசினால் அரைவேக்காட்டுதனம். மாகாபாரதம், கம்ப ராமாயணத்தை வாழ்த்தி பேசினால் நல்லவர், அதுவே அரசை எதிர்த்துக் கேள்வி கேட்டால் கெட்டவர், உங்களுக்கு என்ன தெரியும் என்று அவரை விமர்சனம் செய்வது. மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மக்களிடம் வாக்குகளுக்காக லஞ்சமாக கொடுத்து வெற்றி பெறுவதும், அதே மக்களுக்கு தன் சொந்த பணத்தை கொடுத்து கல்வி உதவி செய்வதும் ஒன்றா? என்பதை அவர்கள்தான் தெளிவுப்படுத்த வேண்டும்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT