ADVERTISEMENT

கருகும் காடும்... கார்பரேட் அரசியலும்...

11:45 AM Aug 26, 2019 | kirubahar@nakk…

உலகின் மிகப்பெரிய மழைக்காடு, மூன்று வாரங்களாக தீயினால் கருகி வருகிறது. சுற்றுசூழல் ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் என பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள இந்த விஷயம் சமூகவலைதளங்களில் இளைஞர்களால் அதிகம் பேசப்பட்டும், பகிரப்பட்டு வருகிறது. ஆனால் பிரேசில் நாட்டில் பற்றி எரியும் இந்த தீ, இன்று வரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளின் கவனத்தை பெறாததற்கு காரணமாக பல காரணிகள் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகின் தேவைக்கான 20 சதவீத ஆக்சிஜனை தரும் ஒரு காடு, 1100 நதிகளை கொண்ட ஒரு வனப்பரப்பு, 1 கோடிக்கும் அதிகமான விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூச்சி வகைகளை கொண்ட ஒரு வனம் தீப்பற்றி எரிந்து வருகிறது. ஆனால் உலக நாடுகளை இதனை கண்டுகொள்ளவில்லை என்றால் அதற்கான முக்கிய காரணம், இதற்கு பின்னால் இருக்கும் சில பலம்வாய்ந்த கார்பரேட் நிறுவனங்கள் தான் என்ற கருத்தும் எழாமல் இல்லை.

அப்படி அமேசானை சுற்றி நிகழும் அரசியலை புரிந்துகொள்ள வேண்டுமாயின், அந்த அரசியல் தொடங்கிய காலகட்டமாக 2012 ஆம் ஆண்டு வரை நாம் செல்லவேண்டியுள்ளது. அமேசான் காடுகளின் பரப்பளவில் பெரும்பான்மையை கொண்டுள்ள பிரேசில் நாட்டில், கடந்த 2012 ஆம் ஆண்டு "நிலையான வளர்ச்சி" என்ற நோக்கில் ஐ.நா மாநாடு நடந்தது. இதில் உலக நாடுகள் ஒன்றிணைந்து சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத, இயற்கையை அழிக்காத வழிகளில் உலகத்தை மேம்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்தன.

இந்த முடிவை அடிப்படையாக கொண்டு பிரேசில் நாட்டில் புதிய அனல்மின் நிலையங்கள் தொடங்கப்படுவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. நீர்வளம் அதிகம் உடைய நாடான பிரேசில் தனது மின் தேவையில் 80 சதவீதத்தை அனல்மின் நிலையங்கள் வாயிலாகவே பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில் மேலும் பல புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்கவும், அவற்றை தனியார் வசம் ஒப்படைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்த புதிய மின்நிலையங்கள் பெரும்பாலும் அமேசான் காடுகளில் உற்பத்தியாகும் நதிகளை நம்பியே திட்டமிடப்பட்டன. இந்த அனல்மின் நிலையங்களை கைப்பற்ற அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பல முன்னணி கார்பரேட் நிறுவனங்கள் போட்டியிட்டதாக கூறப்படுகிறது.

அமேசான் காடுகளில் உள்ள நதி பகுதிகளில் அணைக்கட்டுகள் ஏற்படுத்தி நீரை தேக்கி வைத்து, அதன்மூலம் மின்னுற்பத்தி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம். இதற்காக கடந்த 6 ஆண்டுகளாக வனப்பகுதி பெருமளவு அழிக்கப்பட்டு, 40 க்கும் மேற்பட்ட அணைகள் கட்டும் பணியும் நடந்தது. அணைக்கட்டுகள் அமைக்க அமேசான் காடுகளில் வசித்து வரும் பூர்வகுடிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி, வனத்தை அழிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்தன. இந்த திட்டத்தால் ஆயிரக்கணக்கான பூர்வகுடி மக்களும் அப்பகுதியை விட்டு வலுக்கட்டாயமாக இடமாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.

இந்த சூழலில் தான் பிரேசில் நாட்டில் அதிபர் தேர்தல் நெருங்கியது. அப்போது இந்த தேர்தலில் போட்டியிட்ட சயீர் போல்சனார், பிரேசில் நாட்டின் பொருளாதாரத்தை பெருக்குவதற்கான வழியாக, அமேசான் காட்டினை அழித்தல் என்ற முழக்கத்தை முன்வைத்தார். பொருளாதார வளர்ச்சி என்ற ஒற்றை முழக்கத்தை வைத்து மக்களை கவர்ந்த சயீர் போல்சனார், அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து அமேசான் வனப்பகுதியில் ஏற்பட்டு வந்து அழிப்புகள் என்பது இரட்டிப்பானது. மரங்களால் சூழப்பட்ட அமேசான் முழுவதும், கட்டிட தொழில் பணியாளர்களும், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டனர். அந்நாட்டு புதிய அதிபரின் திட்டத்தின்படி, மரங்கள் வெட்டப்பட்டு விற்பனைக்கு தயாரானது, காலியான வனப்பகுதிகள் தொழிற்சாலைகளை தாங்கி நிற்க தயார்படுத்தப்பட்டன.

இப்படி வணிக பூமியாக மாறிப்போன அமேசான் தான் தற்போது கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2018ம் ஆண்டு 7,500 சதுர கிலோமீட்டர் காட்டு பகுதி அழிக்கப்பட்ட நிலையில், புதிய அதிபரின் பொறுப்பேற்புக்கு பின்னர், காடுகள் அழிக்கப்படுவது பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடாக கடந்த மாதம் மட்டும் 2,200 சதுர கிலோமீட்டர் நிலத்தில் காடு அழிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அழிக்கப்பட்டதைவிட இது 280 சதவீதம் அதிகமாகும்.

இயந்திரங்கள் கொண்டு மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்படுவதை போல, காட்டின் பல இடங்களில் காட்டுத்தீ, மனிதர்களால் ஏற்படும் தீ விபத்து காரணமாகவும் வனப்பகுதி அழிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் 75,000 காட்டுத்தீ சம்பவங்கள் அமேசான் வனப்பகுதியில் நிகழ்ந்துள்ளன. இந்த காட்டுத்தீ குறித்து பிரேசில் நாட்டின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி முகாமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்களின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு 85 சதவீதம் அதிகமாக காட்டு தீ ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த ஆண்டு முழுவதும் சேர்த்தே மொத்தம் 40,000 காட்டுத்தீ விபத்துகள்தான் ஏற்பட்டன.

ஆண்டுக்கு சராசரியாக 1800 மில்லிமீட்டர் மழைபொழிவை கொண்ட அமேசான் காடுகளில் ஜூன் முதல் செப்டம்பர் வரை வறட்சிக்காலம் என்பதால், இந்த காலகட்டத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் அதன்பின்னர் இயற்கையாகவே அந்த இடங்களில் தாவரங்கள் தோன்றுவதும் வழக்கம். இப்படிப்பட்ட இயற்கை அதிசயத்தினாலேயே 5.5 கோடி ஆண்டுகளாக இந்த காடு உயிர்ப்புடன் இருந்துவருவதாக கூறப்படுகிறது. ஆனால் இன்றைய சூழலில் அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீக்களில் பல மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்றும், அதற்கு காரணம் புதிய அதிபர் சயீர் போல்சனாரின் திட்டங்கள் தான் என்றும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

லட்சக்கணக்கான விலங்குகள், கோடிக்கணக்கான தாவரங்கள், பறவைகள், பூச்சியினங்கள் அழிக்கப்படும் இந்த காட்டுத்தீக்கு பின்னால், வெறும் அனல்மின்நிலையங்கள் தனியார்மயமாக்கப்படுத்தல் என்ற காரணத்தை கடந்து, சோயா ஏற்றுமதிக்கான வழித்தடங்களை உருவாக்குதல், உணவு தொழிற்சாலைகள் அமைத்தல் போன்ற பல காரணங்கள் மறைந்திருக்கின்றன என்றும் சிலர் கூறுகின்றனர்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சோயா ஏற்றுமதியாளரான பிரேசில், தனது பெரும்பான்மை சோயா உற்பத்தியை அமேசான் பகுதியில் இருந்தே பெறுகின்றன. அவற்றில் பெரும்பான்மை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சோயா ஏற்றுமதிக்கான புதிய வழித்தடத்தை அமேசான் காடுகளை ஒட்டியே அமைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. அதேபோல உலகின் நன்னீரில் 20 சதவீதத்தை தன்னுள் கொண்டுள்ள இந்த அமேசான் வனப்பகுதியில் பல உணவு தயாரிப்பு நிறுவனங்களும், கார் நிறுவனங்களும் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க ஆசைகொண்டிருக்குகின்றன. அந்த வகையில் இந்த வன அழிப்பு என்பதற்கு பின்னால் பல வளர்ந்த நாடுகளை சேர்ந்த, அதிகாரமிக்க நிறுவனங்களின் தொழில் ஆசை ஒளிந்துள்ளது என கூறுகின்றனர் அமேசான் பகுதி பூர்வகுடிகள்.

350 குழுக்களாக அமேசான் முழுவதும் பரவி காணப்படும் இந்த பூர்வகுடிகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த வன அழிப்புக்கு எதிராக போராடி வருகின்றனர். ஒரே ஒரு காடுதானே... அழிந்துவிட்டுப் போகிறது .. அதனால் என்ன..? என்று இருந்த பல மக்களின் மனநிலை கடந்த சில நாட்களாக அமேசானின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது. இதேபோல உலக நாடுகளும், பிரேசில் அரசும் உணர வேண்டும் என்பதே அமேசான் பூர்வகுடிகளின் கனவாக உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT