ADVERTISEMENT

ரவுடிகளையும் கொலைகாரர்களையும் பா.ஜ.க.வில் சேர்த்துட்டாங்க! -போட்டுத் தாக்கும் ராமசுப்பிரமணியம்

06:50 PM Jul 03, 2021 | rajavel


ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தீவிர பற்றாளரும், பா.ஜ.க. ஆதர வாளருமான ஊடகப் பிரபலம் இராம சுப்பிரமணியம், பா.ஜ.க.வை ஆதரித்துப் பேசுவதோடு... தவறான செயல்பாடு களை விமர்சிக்கவும் தயங்கியதில்லை. அதேபோல எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், சரியான செயல்களைப் பாராட்டவும் செய்வார். அவரிடம், தமிழக பா.ஜ.க.வின் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள், புதிதாக அமைந்துள்ள தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை முன்வைத்தோம்.

ADVERTISEMENT

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான நீங்கள், தற்போதுள்ள தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகளையும், இவர்கள்மீது பாலியல் புகார் உட்பட பல்வேறு புகார்கள் எழுப்பப்படுவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

ADVERTISEMENT


நான் பா.ஜ.க.வில் தற்போது இல்லா விட்டாலும்கூட அந்த கட்சி நன்றாக வரவேண்டுமென்று விரும்பக்கூடிய ஆள். பல ஆண்டுகளாக அந்த கட்சியில் பயணித்தவன் நான். எனவே அந்த கட்சி இங்கே வளர்ந்ததென்றால் நான் ரொம்பவே சந்தோசப்படுவேன். தற்போது பா.ஜ.க.வில் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காக, அவர்களின் பின்புலம் என்னவென்றே தெரியாமல் அனைவரையும் கட்சியில் சேர்ப்பது கட்சிக்கு நல்ல தல்ல. இதுகுறித்து நான் ரொம்ப நாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதிலும் குறிப்பாக, ரவுடிகளையும், காலிப்பயல்களையும், கொலைகாரர் களையும் அந்த கட்சியில் சேர்த்துட்டாங்க. இது மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கும்னு முன்னயே எனக்குத் தெரியும். இதனை பல்வேறு ஊடகங்களில் விவாதங்களின்போது நான் பதிவு செய்திருக்கிறேன்.

தற்போது தமிழக பா.ஜ.க. மீதான பாலியல் குற்றச்சாட்டெல்லாம் உண்மையா, பொய்யா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் இதெல்லாம் கேட்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. முன்பெல்லாம் பா.ஜ.க.வில் சேருபவர்களின் பின்புலத்தை விசாரித்தபின்னர் தான் சேர்ப்பாங்க. இப்போதெல்லாம் கமலாலயத்தினுள் சேர்ப்பதற்கு இதெல்லாம் விசாரிப்பதேயில்லை. இத்தகைய நடவடிக்கைகள்தான் குற்றச்சாட்டுகள் எழுவதற்கு காரணமாகிறது. இப்படியான நிலை துரதிர்ஷ்டமானது. இதைச் சரிசெய்யாமல் விட்டால் கட்சிக்கு கெட்ட பெயர்தான் வரும்.

நடந்துமுடிந்த தேர்தலில் தமிழக பா.ஜ.க.வில் 4 பேர் வெற்றி பெற்றதற்கு கட்சித்தலைவர் முருகனின் செயல்பாடும், அவர் நடத்திய வேல் யாத்திரையும் காரணமாக இருக்குமா?

தற்போது 4 பேர் வெற்றி பெற்றிருப்பதற்கு அ.தி.மு.க.வின் ஆதரவு மட்டுமே காரணம். தமிழக பா.ஜ.க.வின் பிரமாதமான வளர்ச்சியால்தான் இந்த வெற்றி என்று அவர்கள் நம்பி னார்கள் என்றால், அது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். முருகன் நடத்திய வேல் யாத்திரை, பா.ஜ.க.வுக்கு பெயிலியர் யாத்திரை என்று தொடர்ந்து நான் சொல்லிக்கொண்டே வருகிறேன். இது மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. இதையேதான் உறுதிப் படுத்துவதுபோல, பா.ஜ.க.வின் தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவியும் ஒரு பேட்டியில் "இந்த வேல் யாத்திரை எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை' என்றே கூறியிருந்தார். அந்த கட்சி, மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றை கையிலெடுத்து, அதைச் சரிசெய்யப் போராடினால் தான் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதை விட்டுவிட்டு, குறுக்கு வழியில் நாம பெரியாளாகி விட்டோம் என்று, ஒரு கும்பலைச் சேர்ந்துக்கொண்டு, அந்த கும்பலால் ஜெயித்து விடுவோம் என்று நினைத்தால், ஒரு தோல்விக்குப் பிறகு அனைவருமே காக்கா கூட்டம்போல ஓடி விடுவார்கள். வாஜ்பாய் தலை மையில் 1998-ம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது பலரும் பா.ஜ.க.வில் போட்டிபோட்டுக்கொண்டு இணைந்தார்கள். 2004-ம் ஆண்டு ஆட்சி பறிபோனதும் அனைவரும் அப்படியே விலகிவிட்டார்கள். அதுபோல தேர்தலுக்கு முன்பாக, கட்சிக்கொள்கை என்னவென்றே தெரியாத சினிமாக்காரர்கள் பலரையும் சேர்த்தார்கள். அவர்களெல்லாம் இப்போது என்ன ஆனார்களென்றே யாருக்கும் தெரியவில்லை.

ஹெச்.ராஜா மீது, தேர்தலுக்காகக் கொடுத்த கட்சிப்பணத்தில் 4 கோடி ரூபாயை தனது வீடு கட்டுவதற்காகப் பயன்படுத்திக்கொண்டதாக குற்றச்சாட்டு பா.ஜ.க.வினராலேயே வைக்கப்பட்டு, அவரது தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளார்களே?

இது குறித்தெல்லாம் எனக்கு சரியாகத் தெரியாது சார். ஆனால் தேர்தலுக்காக கட்சி மேலிடத்திலிருந்து பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் 13 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.வீ.சேகர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஹெச்.ராஜா மீது சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டைக் கேட்கும்போது வருத்தமாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை அவர்மீதான குற்றச்சாட்டை நம்ப முடியாது. அவரும், அவரது அப்பாவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலேயே பயணித்தவர்கள். பி.ஜே.பி. மீதும் பற்றுக்கொண்டவர். அவருக்கு சொத்து சுகத்துக்கு குறைவேயில்லை. எனவே அவர்கள் இந்த அளவுக்கு கீழ்த்தரமாகவெல்லாம் செய்யமாட்டார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

தமிழ்நாடு அரசு தற்போது அமைத்துள்ள உயர்மட்ட பொருளாதார ஆலோசனைக்குழு குறித்து உங்களுடைய கருத்து?

இப்படியொரு குழு அமைத்திருப்பது, இந்தியா வுக்கே முன்னோடியான செயல். இந்தியாவையே தமிழ்நாட்டை நோக்கித் திரும்பிப்பார்க்கும் விதமாகத் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கிறார்கள். இந்தக் குழுவின் தலைவரான ரகுராம் ராஜன், நிதியை எப்படிக் கையாளுவது என்பதில் நன்கு அனுபவப்பட்டவர். பொருளாதார ஆலோசகராகவெல்லாம் இருந்திருக் கிறார். வருவாயை எப்படி அதிகப்படுத்துவது, ஒன்றிய அரசிடமிருந்து நமக்கான வருவாயை எந்தெந்த வழிகளிலெல்லாம் அதிகரிக்கலாம் என்பது குறித்தெல்லாம் இவரால் சொல்ல முடியும். அடுத்த உறுப்பினரான அரவிந்த் சுப்பிரமணியமும் இதை யெல்லாம் செய்ய முடியும். அடுத்ததாக, நாராயணன், நிதித்துறையில் இருந்தவர். அவருக்கும் மத்திய மாநில அரசுகள் தொடர்பான அனைத்து நெளிவுசுழிவுகளும் தெரியும். எனவே அவரது நியமனமும் மிகச்சரியானது.

அடுத்ததாக எஸ்தர் டப்லோ என்ற பெண்மணி, ஏழ்மை ஒழிப்பு என்பதில் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து பங்காற்றிவருபவர். பொருளா தாரத்தில் நோபல் பரிசு வென்றவர். அவரும் அவரது கணவர் அபிஜித் பானர்ஜியும் இணைந்து தான், கொரோனா லாக்டௌனால் பாதிக்கப்பட்டவர்களின் கைக்கே பணத்தைச் சென்றடையச் செய்ய வேண்டுமென ஒன்றிய அரசுக்கு ஆலோசனை கூறினார்கள். அது நல்ல யோசனை. வறுமையில் சிக்கியவர்களுக்கு எதையெதையோ கொடுப்பதற்குப் பதில் நேரடி யாகப் பணமாக அளிப்பது பய னுள்ளதாக இருக் கும். இதுபோன்று, அடிமட்ட மக்களுக்காக இறங்கிவந்து குரல் கொடுத்தவர் அவர். ஐந்தாவதாக இடம்பெற்றுள்ள ஜீன் த்ரே, கொரோனாவால் நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின்மூலம் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியவர். காங்கிரஸ் அரசாங்கம் கொண்டுவந்த மிக நல்ல திட்டம் அது. நம்நாட்டில் மிகப்பெரிய வன்முறை, பிரச்சனைகள் இல்லாமல் இருக்கின்றதென்றால் அதற்கான காரணம், அனைவருக்கும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் கிடைப்பதாகும். எனவே, இந்த ஐவர் குழு மிகவும் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. இவர்களுக்கு அடுத்ததாக, பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் தலைமையிலும் ஒரு குழு அமைத்திருக்கிறார்கள். அந்த குழுவோடு இவர்கள் எந்த வகையில் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்பது போகப்போகத் தெரியும்.

-தெ.சு.கவுதமன்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT