ADVERTISEMENT

கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா? அதிமுகவின் அறிவிப்பால் அரண்டுபோய் நிற்கும் கூட்டணிக் கட்சிகள்

11:03 AM Nov 11, 2019 | rajavel

ADVERTISEMENT

கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணியின் தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்டவை இருந்தன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வேலூர் பாராளுமன்றத் தேர்தலிலும், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு பாமக, தேமுதிக பிரச்சாரத்தில் ஈடுபட்டது. பாஜக இந்த இரு தேர்தல்களிலும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. பாஜக பிரச்சாரத்திற்கு வராமல் இருந்தாலே நல்லது என்று அதிமுகவும் நினைத்திருந்தது.

ADVERTISEMENT


இந்த நிலையில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியானதால், பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு செல்வாக்கான இடங்கள் மற்றும் இத்தனை இடங்களை தங்களுக்கு ஒதுக்கினால் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று பட்டியலை அளித்திருந்தன.

கடந்த 6ஆம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், கூட்டணி கட்சிகளிடம் எப்படி பேச வேண்டும், கூட்டணி கட்சிகளுக்கு எந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் எந்த இடத்தில் அதிமுக போட்டியிடலாம். யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற பட்டியலை தயார் செய்து அனுப்புகள் என்று அறிவுறுத்தி இருந்தனர்.


கூட்டணிக் கட்சிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சி நிர்வாகிகளிடம் சொன்னதை வைத்து, கூட்டணி கட்சியினர் தேர்தலில் இடம் ஒதுக்குவது சம்மந்தமாக குழு அமைக்கப்பட்டு அவர்கள் நம்மிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் திடீரென கடந்த 10ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பெயரில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியானது.


அதில், உள்ளாட்சித் தேர்தலில் மேயர், மாநராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்றத் தலைவர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்றத் தலைவர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு வருகிற 15, 16ம் தேதிகளில் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளனர்.

திடீரென இந்த அறிவிப்பு வெளியானதால் கூட்டணியில் உள்ள கட்சிகள் அரண்டுபோய் உள்ளன. கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய எந்த இடத்தையும் அதிமுக, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க தயாராக இல்லையா? என்று கூட்டணிக் கட்சிகள் கடும் அப்செட்டில் உள்ளன.


அதிமுகவின் மேலிட தலைவர்களை தொடர்புகொண்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பேச்சுவாத்தையை தொடங்கும்போதே வரும் சட்டமன்றத் தேர்தல்வரை இந்த கூட்டணி நீடிக்க வேண்டும் என்று சொன்னீர்கள். அதற்கு நாங்களும் ஒப்புக்கொண்டோம். வேலூர் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்களில் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தோம். உள்ளாட்சித் தேர்தலோடு நமது கூட்டணி முடிந்துவிடப்போவதில்லை. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் உங்களைத்தான் ஆதரிப்போம். கூட்டணி வலிமையாகத்தான் உள்ளது. அப்படியிருக்கும்போது உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பு வராமலேயே, கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய அனைத்து இடங்களுக்கும் விருப்ப மனு வினியோகிக்கப்படுவதாக அறிவித்திருப்பது எங்கள் கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா? என்று தொண்டர்கள் எங்களை கேள்வி எழுப்புகிறார்கள். நீங்கள் எங்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்களை திருப்திப் படுத்தும் வகையில் சில இடங்களை ஒதுக்கினால் நன்றாக இருக்கும்'' என்று சொல்லி வருகிறார்களாம்.

ஓ.பன்னீர்செல்வம் வெளிநாடு சென்றுள்ளார். முதலமைச்சர் அவர் சார்ந்த பணியில் பிஸியாக இருக்கிறார். நீங்கள் உங்கள் பட்டியலை மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்து இறுதி செய்யுங்கள். தேர்தல் தேதி அறிவிக்கட்டும், ஓ.பன்னீர்செல்வமும் வரட்டும் பேசிக்கொள்ளலாம் என்று அதிமுக மேலிட தலைவர்கள் கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT