ADVERTISEMENT

தடையை மீறி ஜெ. நினைவிடத்திற்கு வருவார் சசிகலா - தேனி கர்ணன் தடாலடி!

10:23 AM Feb 05, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தலா 4 வருடம் சிறை தண்டனை விதித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, அவரின் தண்டனை காலத்தை தற்போது நிறைவு செய்துள்ளார். கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தற்போது மருத்துவமனையில் இருந்து பெங்களூரு புறநகரில் இருக்கும் தனியார் விடுதிக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். வரும் 8ம் தேதி சசிகலா தமிழகம் வர உள்ள நிலையில், ஜெயலலிதா சமாதி திடீரென மூடப்பட்டுள்ளது. இதில் அரசியல் காரணங்கள் இருக்கிறதா என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை சசிகலா ஆதரவாளர் தேனி கர்ணனிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் பின்வருமாறு,

திருமதி சசிகலா அதிமுகவில் வர முடியாது என்று அக்கட்சியைச் சேர்ந்த முன்னணியினர் தொடர்ந்து கூறிக்கொண்டு வருகிறார்களே?

அதிமுகவின் பொதுச்செயலாளரே அவர்கள்தான். அவர்களை யார் எதிர்ப்பது? அந்த அதிகாரம் அவர்களுக்கு யார் கொடுத்தது. இந்த ஆட்சி அதிகாரம் இருக்கின்ற வரையில்தான் இந்த நிர்வாகிகள் எல்லாம் எடப்பாடி பக்கத்தில் இருப்பார்கள். ஆட்சி அதிகாரம் முடிந்தால் தானாக அவர்கள் அனைவரும் வெளியேறி விடுவார்கள். கட்சி தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர். அந்த வகையில் தொண்டர்கள் அனைவரும் சசிகலாவின் பக்கம் இருக்கிறார்கள். எனவே அவர்தான் கழகத்தின் பொதுச்செயலாளர். அதை யாராலும் மாற்ற முடியாது.

மருந்துவனையில் இருந்து சசிகலா அவர்கள் வெளியே வரும்போது அதிமுக கொடியைப் பயன்படுத்தியுள்ளார். இது தவறானது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்களே?

என்ன நடவடிக்கை எடுப்பீர்கள், எடுங்கள். என் காரில் அதிமுக கொடியைத்தான் கட்டியுள்ளேன். அவர் அதிமுகவின் உண்மையான பொதுச்செயலாளர். அவர் அதிமுக கொடியைக் கட்டாமல் வேறு எந்த கொடியைக் கட்டுவார்கள். அதிமுக எங்கள் சொத்து. எங்கள் கொடி கட்டக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. கடைக்கோடி தொண்டனுடைய சொத்து. எங்களைக் கொடிகட்ட வேண்டாம் என்று எவன் சொல்லுவான். யாருக்கும் அந்த அதிகாரம் கிடையாது. நாங்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாக அதிமுக, எங்கள் குடும்பம் கட்சிக்காக ரத்தம் சிந்திய குடும்பம். நாங்கள் கொடி கட்டாமல் யார் கட்டுவது.

கட்சி அவர்களிடம் இருக்கிறது, ஆட்சி அவர்களிடம் இருக்கிறது. கட்சியில் எந்தக் குளறுபடியும் இல்லை. அப்படி இருக்கையில் அதிமுகவை எப்படி மீட்டெடுப்பீர்கள்?

இந்த ஆட்சி இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கப் போகிறது. சரியாக இரண்டு மாதங்களுக்கு மேல் இந்த ஆட்சி இருக்காது. எடப்பாடி பழனிசாமி இவ்வளவு துரோகியா என்று அவரின் பக்கத்தில் இருக்கும் அல்லக்கைகளுக்கே மனசு உறுத்திக்கொண்டு இருக்கிறது. கோழி குஞ்சை பாதுகாப்பது போல சட்டமன்ற உறுப்பினர்களைப் பாதுகாத்து, இதோ என் சகோதரர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்தெடுக்கப்படுகிறார் என்று அறிவித்த சசிகலாவுக்கு இன்றைக்கு இவர்கள் அனைவரும் சேர்ந்து துரோகம் செய்துள்ளார்கள். நாங்கள் எதிரியோடு பயணிப்போம். துரோகியோடு பயணிக்க மாட்டோம். அந்த துரோகி யார் என்று உங்களுக்கே தெரியும்.

இந்த விஷயத்தில் சசிகலா அவர்கள்தானே முடிவெடுக்க வேண்டும்?

நிச்சயம் அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் அவர் துரோகியோடு பயணிக்க மாட்டார்கள் என்பது மட்டும் நூறு சதவீதம் உண்மை. தொண்டர்களைப் பாதுகாக்கத்தான் நாங்கள் தனி அணி அமைத்து செயல்பட்டோம். தற்போது அதற்கான தேவை இல்லை. எங்கள் பொதுச்செயலாளர் வந்துவிட்டார். அவர் தொண்டர்களையும் எங்களையும் பார்த்துக்கொள்வார்கள்.

கே.பி முனுசாமி மன்னிப்பு கடிதம் கொடுத்தால் டிடிவி.தினகரனை அதிமுகவில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது சசிகலாவுக்கும் பொருந்துமா?

யாரு, யாருகிட்ட மன்னிப்பு கடிதம் கேட்பது என்ற அறிவு வேண்டாமா? அம்மா அவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்தான் கே.பி முனுசாமி. இரண்டு தேர்தல்களில் தோல்வி அடைந்தார். எதனால் அவர் தோல்வி அடைந்தார். அதிமுக எம்எல்ஏக்கள் போட்ட பிச்சையினால் இன்றைக்கு மாநிலங்களவை எம்பி ஆக உள்ளார். அம்மா இருந்தா இவர் எம்பி ஆக முடியுமா?

திருமதி சசிகலா சென்னை வந்தால் என்ன நடக்கும்?

அதிமுக தொண்டர்களுக்கு நல்லது நடக்கும். கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு நல்லது நடக்கும். இதில் என்ன சந்தேகம் இருக்கு. என்ன தடை போட்டாலும் அம்மா சமாதிக்கு அவர்கள் வருவார்கள், அஞ்சலி செலுத்துவார்கள். அதைப் போல் ராயபேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கும் செல்வார்கள். அவரை முடிந்தால் தடுத்துப் பாருங்கள். 8ம் தேதி பாருங்கள், தமிழகம் ஸ்தம்பித்துப் போகிறதா இல்லையா என்று. கோடிக்கணக்கான தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள், என்ன நடக்க இருக்கிறது என்று. யாராலும் சின்னம்மாவிற்கு அணை போட முடியாது. புயலென அவர்கள் சென்னை வருவார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT