ADVERTISEMENT

“அவர்கள் வெளியே பார்க்கும் போது மாப்பிள்ளையாக தெரியலாம், ஆனால் சட்டை எங்களுடையது” - அதிமுக வேட்பாளர் சரவணன்

05:56 PM Apr 09, 2024 | mathi23

நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதில், திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை எதிர்த்து மதுரை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க கட்சி சார்பில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் சரவணனன் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நமது நக்கீரனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ADVERTISEMENT

மதுரை மக்களவைத் தொகுதி மக்கள் எதற்காக சரவணனுக்கு வாக்களிக்க வேண்டும்?

ADVERTISEMENT

“அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கைகாட்டிய வேட்பாளர் நான். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி வளர்த்த சின்னமான இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும், இது ஒன்று. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு மருத்துவராக, ஒரு சமூக சேவகராக மக்களுக்கு ஒரு பரிச்சயமான நபர் என்ற அடிப்படையில் என்னால் முடிந்த அளவுக்கு சேவை செய்ய முடியும். என்னுடைய பெற்றோர்கள் கிராமப்புறத்தில் இருந்து வந்ததனால், என்னுடைய மனதில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் எப்போதும் இருக்கிறது. என்னால் பலனடைந்த மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எனக்கு வாக்களிக்கலாம்.

இன்றைய அ.தி.மு.க கூட்டணியில் இருக்கக்கூடிய தே.தி.மு.க தலைவர் மறைந்த விஜயகாந்த் மதுரை மண்ணைச் சார்ந்தவர். அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் சிந்தியது. அவர்கள் எங்களுடன் கூட்டணியில் இருக்கிறார்கள். இன்னும் பல்வேறு அமைப்புகள் எங்களுடன் கூட்டணி இருக்கிறார்கள். இவர்களின் தொண்டர்கள் எனக்கு வாக்களிக்கலாம். தி.மு.க.வின் கடந்த 33 மாத கால ஆட்சியில் மக்களிடம் நிறைய கெட்ட பேர் வாங்கி இருக்கிறார்கள். பொதுவாக ஒரு ஆட்சியில், கடைசி ஒரு வருடத்தில் தான் அந்த கட்சி மீது மக்களிடம் இருந்து அதிருப்தி ஏற்படும். ஆனால், தி.மு.க வந்ததிலிருந்து அதிருப்தி ஏற்படக்கூடிய சூழல் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் கொடுத்த வாக்குறுதி அப்படி. அவர்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியதாக தான் நாங்கள் பார்க்கிறோம்.

ஆட்சியில் வந்த முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று சொன்னார்கள். ஆனால், பெரும்பான்மை உள்ள பாஜக அரசு எந்தச் சட்டத்தையும் அமல்படுத்த முடியும். அந்த வகையில் நீட் தேர்வை அவர்கள் கட்டாயமாக்கி விடுகிறார்கள். இப்படி பல்வேறு வாக்குறுதிகளை அவர்கள் கொடுத்தார்கள். இதையெல்லாம் நம்பி மக்கள் வாக்களித்தார்கள். அதனால் இந்தத் தி.மு.க ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும் என்று நினைக்கும் மக்கள் எனக்கு வாக்களிக்கலாம். மதுரையின் தற்போது எம்.பி.யான சு.வெங்கடேசன் பொதுவுடமை இயக்கமான கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர். பொதுவாக அரசியல் கட்சிகள், வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால், இவர் தனிப்பட்ட முறையில் மக்களுக்கு 44 வாக்குறுதிகளை கொடுத்தார். அதில் ஒரு வாக்குறுதி கூட அவர் நிறைவேற்றவில்லை. அவர் கடந்த நான்கு வருடமாக மதுரை மண்ணிலே இல்லவே இல்லை.

கீழடி, தமிழர் பாரம்பரியத்தைக் காண்பிக்க கூடிய தொன்மையான சின்னம் இது. அந்த விஷயத்தில் கூட அவர் அரசியல் செய்திருக்கிறார். அவர் ஒரு டிவிட்டர் அரசியல்வாதி. தமிழ் வாழ்க, மோடி ஒழிக என இரண்டு மட்டுமே சொல்லிவிட்டு இருப்பார். 1974ன் போது வை.பாலசுப்பிரமணியன் என்ற ஒரு வரலாற்று ஆசிரியர் கீழடி பள்ளியில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அங்கு கிணறு தோண்டும் போது வித்தியாசமான செங்கற்கள் வந்தபோது அங்குள்ள மக்கள் அவரிடம் கொடுக்கிறார்கள். அவரும், அந்தப் பொருட்களை தொழில்துறைக்கு தொல்லியல் துறைக்கு எடுத்துக்கொண்டு விவரம் கேட்டறிந்தார்.

கடைசியாக 2015 ஆம் ஆண்டில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அதற்கான இடத்தை 72 ஏக்கரை ஒதுக்கி, நிதி ஒதுக்கி அகழ்வாராய்ச்சி தொடங்கினோம். அதனால் அந்தப் பெருமை எல்லாம் வை.பாலசுப்ரமணியன் என்ற வரலாற்று ஆசிரியருக்கு தான் போக வேண்டும். அதேபோல் அ.தி.மு.க அரசுக்கு தான் அந்தப் பெருமை போக வேண்டும். அகழ்வராய்ச்சி முடித்து பத்தாவது கட்டத்திற்கு வந்து விட்டோம். இந்த நேரத்தில் தான் அருங்காட்சியத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். அதில் எம்.பி வழக்கம் போல் ட்விட்டரில் கீழடி நாயகன் என்று பிரபலப்படுத்த நினைக்கிறார். அதனால் அவர்கள் வெளியே பார்க்கும் போது மாப்பிள்ளையாக தெரியலாம். ஆனால் சட்டை எங்களுடையது” என்று கூறினார்.

பேட்டி தொடரும்...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT