ADVERTISEMENT

தேர்தல் முடிவு! சசிகலா என்ன செய்யப் போகிறார்?

09:55 AM May 27, 2019 | Anonymous (not verified)

தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கிறபோதே டி.டி.வி. தினகரனின் செல்போனுக்கு அழைப்புகள் சென்றன. "சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அ.ம.மு.க., கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யத்தை விட குறைவான வாக்குகள் பெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் வெற்றிவேல்தான். அவரது அணுகுமுறை சரியில்லை' என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன. தேர்தல் முடிவுகளை பார்த்து அதிர்ந்துபோன நிலையில் இருந்த டி.டி.வி.தினகரன், தன் இயல்புக்கு மாறான குரலில், 'அப்படியா நான் கண்டிக்கிறேன்' என சொல்லியிருக்கிறார்.

ADVERTISEMENT



சென்னை திருவள்ளூர் பகுதி அ.ம.மு.க. பொறுப்பாளர் வெற்றிவேலிடம் நாம் பேசியபோது, எனது பெரம்பூர் தொகுதியில் 29-வது வட்டத்தில் எனக்கு வாக்குச்சாவடி முகவர்களாக பணியாற்றியவர்கள் குடும்பங்களின் ஓட்டே 130 வரும். ஆனால் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் வெறும் 9 ஓட்டுகள் மட்டுமே பரிசுப் பெட்டி சின்னத்தில் பதிவாகியிருந்தது. இப்படி தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக செயல்படும்... சசிகலா குடும்பத்தை ஒழிக்க வேண்டும் என மத்திய அரசே வாக்குப்பதிவு எந்திரங்களில் பரிசுப்பெட்டி சின்னத்திற்கு வாக்குகள் விழக்கூடாது என வாக்கு எந்திரத்தில் சதி செய்துள்ளது. அதனால்தான் அ.ம.மு.க. இந்தத் தேர்தலில் மிகக் குறைவான வாக்குகளை பெற்றது என டெக்னிக்கலாக ஒரு விளக்கம் சொன்னார்.

ADVERTISEMENT



அ.ம.மு.க. பற்றி நம்மிடம் பேசிய அதன் தலைவர்கள், சசிகலா உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. தோற்க வேண்டும் என நினைத்தோம். அதனால் தான் அணிகளை இணைக்க வேண்டும் என எடப்பாடி தரப்பில் இருந்து பேச முன்வந்தபோதெல்லாம் சசிகலா எந்த உறுதியும் அவர்களுக்கு கொடுக்காமல் நழுவிக் கொண்டே இருந்தார். அ.தி.மு.க.வின் தோல்வி அ.ம.மு.க. பெறும் வாக்குகளினால் அமைய வேண்டும். அப்படி அமைந்தால்தான் இணைப்பு பேச்சு வார்த்தையில் சசிகலாவின் கை ஓங்கும். அ.தி.மு.க. கட்சியை மீண்டும் சசிகலா கைப்பற்ற முடியும் என்பதுதான் சசிகலாவின் கணக்கு. ஆனால், சிறை டி.வி.யில் ரிசல்ட் பார்த்த சசிகலா, பெங்களூருக்கு பக்கத்தில் உள்ள தமிழக தொகுதியான ஓசூரில் போட்டியிட்ட புகழேந்தி ஒரு சில நூறு ஓட்டுகள் பெற்று கொண்டிருந்ததை பார்த்து அவர் விரக்தி அடைந்தார். தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட இசக்கி சுப்பையாவையும் சசிக்கு நன்றாக தெரியும். அவர் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட பெண் வேட்பாளரை விட குறைவாக வாக்கு பெற்றிருந்தார். தேனியில் தங்க.தமிழ்ச்செல்வன் மூன்றாவது இடத்திலேயே நின்றிருந்தார். "ஏன் இப்படி நடந்தது என மூவருக்கும் போன் போட்டு கேள்' என்று இளவரசியின் மகன் விவேக் மூலம் கேட்டார். "நாமளும் தானே ஓட்டுக்கு காசு கொடுத்தோம். அதற்குப் பிறகும் இப்படியா?' என சசியும், இளவரசியும் ஆழ்ந்த கவலையில் ஆழ்ந்தார்கள்.



அதற்குப் பிறகு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் அ.ம.மு.க.வுக்கு நல்ல வாக்கு கிடைக்கிறது என சசிக்கு சொல்லப்பட்டாலும், அது இரண்டாவது இடத்திற்குக் கூட கொண்டு வரவில்லை என அப்செட் ஆனார். அ.தி.மு.க.வின் வழக்கமான வாக்கு வங்கியில் பாதிக்கும் மேல் எடப்பாடி வாங்கி விட்டால் அவர் பக்கம்தான் கட்சி போகும். ஜானகி அணி 89-ல் வாங்கிய வாக்குகள் கூட அ.ம.மு.க. வாங்கலையே... இந்த நிலையில் இணைப்பு பேச்சுக்கு என்ன வழி' என சசியும் இளவரசியும் ஆலோசிக்க ஆரம்பித்தார்கள் என பெங்களூரு சிறையில் நடந்த விவரங்களை சொல்கிறார்கள்.


இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிக்க பல வேலைகளை தினகரன் செய்தார். விளாத்திகுளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை அ.தி.மு.க.வை விட்டு தனியாக போட்டியிட வைத்தார் தினகரன். அவர் கணிசமான வாக்குகளை வாங்கினாலும் அ.ம.மு.க. அங்கு வெற்றி பெறவில்லை. ஆர்.கே. நகர் தொகுதி வெற்றி வீரர் என்கிற தினகரனின் இமேஜ் இப்பொழுது உடைந்து தொங்குகிறது. பெங்களூரு புகழேந்தி, தங்க .தமிழ்ச்செல்வன், கதிர்காமு, நிலக்கோட்டை சுந்தரராஜ், பூந்தமல்லி ஏழுமலை என பலர் அ.ம.மு.க.வை விட்டு விலகி, அ.தி.மு.க., தி.மு.க. என கட்சி மாறுவார்கள், அ.ம.மு.க. கரைந்து போகும்'' என்கிறார்கள்.

"இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சசிகலா என்ன செய்வார்' என கேட்டதற்கு, அவர் எடப்பாடியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். ஓ.பி.எஸ்., நரேந்திர மோடி மூலம் கொடநாடு கொலைவழக்கில் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்துவார் என சசிகலாவுக்கு செய்தி வந்துள்ளது. "இது அ.ம.மு.க.வுக்கு பெருந்தோல்வி என்றாலும் அ.தி.மு.க.வும் இந்தத் தேர்தலில் தோற்றுப் போய்விட்டது. ஆனாலும், எடப்பாடியின் முதல்வர் பதவிக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை. இனி அ.தி.மு.க.வினர் அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.வை உயிர் பெறச் செய்வோம்; மீண்டும் பழைய அ.தி.மு.க.வை உருவாக்குவோம்' என சிறையிலிருந்து ஒரு கடிதம் எழுத சசிகலா திட்டமிட்டுள்ளார்'' என்கிறார்கள் மன்னார்குடி சொந்தங்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT