ADVERTISEMENT

"மாதம் 65 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? ; இட ஒதுக்கீட்டின் மீது அடிக்கப்பட்ட சாவுமணி..." - வழக்கறிஞர் பாலு பேச்சு

06:26 PM Nov 10, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சமீபத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக வெளியான தீர்ப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்ற நிலையில் இதுதொடர்பாக வழக்கறிஞர் பாலு அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு, " இந்தத் தீர்ப்பின் சாராம்சம் என்னவென்றால் ஒட்டுமொத்த இந்தியாவையும் உடைத்துக்காட்ட வேண்டும் என்று பாரதிய ஜனதா முடிவெடுத்திருக்கின்றது. அதைத் தற்போது அவர்கள் நிறைவேற்றி உள்ளார்கள். அதை நீதிமன்றம் தற்போது வழிமொழிந்திருக்கிறது.

சுதந்திரத்திற்கு முன்பாக இந்தியா 56 சமஸ்தானங்களாக, அதற்கு முன்பாக 500க்கும் மேற்பட்ட குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. அந்த இடத்திற்கு தற்போது அவர்கள் நம்மை எல்லாம் கொண்டு செல்லப் பார்க்கிறார்கள் என்பது மட்டும் நிஜம். 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் பெரும்பான்மை பெற்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்துப் பல குழுக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், இந்தத் தீர்ப்பு தற்போது வெளிவந்திருக்கிறது. இதில் மூன்று நீதிபதிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவாகவும், இரண்டு நீதிபதிகள் இந்த சட்டத்திற்கு எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகளில் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி லலித். அவரும் ரவீந்திர பட் அவர்களும் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சட்டம் தொடர்பாக அவர்களின் பார்வையே வேறாக இருக்கிறது. இதுதொடர்பாக நீதிபதிகள் தங்களுடைய கருத்தைத் தெரிவித்துள்ளனர். இந்திய மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் மீது அடிக்கப்பட்ட சாவுமணி என்று இந்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதுவரை இந்தியாவில் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக மொத்தமாக வைக்கப்பட்ட அநீதியின் வடிவமாக இந்தத் தீர்ப்பு இருக்கிறது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் சாதிய அடிப்படையில் கொடுக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டிற்கு இந்தப் பொருளாதார ரீதியிலாகக் கொடுக்கப்பட இருக்கும் இட ஒதுக்கீடு என்பது அதை அடியோடு சமாதியாக்கும் வகையில் அமைந்துள்ளது. இது படிப்படியாக இட ஒதுக்கீடு எதற்காக இந்த அரசியல் சாசனத்தில் கொண்டு வரப்பட்டதோ அதன் அடிப்படை தத்துவத்தையே அசைத்துப்பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த இரண்டு நீதிபதிகளும் அந்தக் கருத்தையே வலியுறுத்திக் கூறுகிறார்கள். தங்களுடைய தீர்ப்பில் கூட அதை மிகத் தெளிவாக நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள். பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு என்ற நடைமுறையே பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என்ற கருத்தை இருவருமே மிகவும் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக அவர்கள் இருவரும் பயன்படுத்திய வார்த்தைகள் என்பது மிகவும் முக்கியமானது.

மற்ற மூன்று நீதிபதிகள் பொருளாதார ரீதியாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள். இந்தியாவில் 80 சதவீத மக்கள் பொருளாதார ரீதியாகப் பெரிய அளவில் பலமாக இருக்கவில்லை. அப்படி இருக்கையில் உயர் சாதியினருக்கு மட்டும் இந்த இட ஒதுக்கீடு என்பது அவர்களைப் பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றுவிடும். இதைத் தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளும் தங்கள் தீர்ப்புகளில் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். இதை நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது. ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மாதம் 65 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பெறலாம் என்ற தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர்.

இதைப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்ற ஐயம் தீர்ப்பு வழங்கிய அந்த இரண்டு நீதிபதிகளுக்கு இருந்திருக்கிறது. தற்போது பெரும்பான்மை நீதிபதிகள் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். இதுவே தற்போது நடைமுறையில் இருக்கும். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு கூட இதை விசாரிக்க வாய்ப்பு ஏற்படும். அதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்தத் தீர்ப்பு என்பது சமூகநீதியை விரும்பும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT