ADVERTISEMENT

தமிழகத்துக்கு நீங்கள் முதல்வரா... இல்லை ராஜேந்திரபாலாஜியா... கோபத்தில் அதிமுக அமைச்சர்கள்!

09:57 AM Feb 10, 2020 | Anonymous (not verified)

அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்குகின்றனர் அ.தி.மு.க. அமைச்சர்கள். இதனால் இடியாப்பச் சிக்கலில் தவிக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்தநிலையில், அ.தி.மு.க.வில் ’இந்து ராஜேந்திர பாலாஜி பேரவை' என்கிற ஒரு அமைப்பை உருவாக்க திட்டமிட்டிருப்பதால் அதிர்ச்சியடைந் திருக்கிறது அ.தி.மு.க. மேலிடம்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அரசியலில் தங்களுக்குத் தோன்றுகிற கருத்துக்களை சுதந்திரமாகவும் ஆவேசமாகவும் பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார்கள் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சர்கள். இது கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிய செயல் என இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ்.சிடம் சமீபகாலமாக புகார்கள் குவிந்தபடி இருக்கின்றன.

ADVERTISEMENT



இதில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சுக்கள் தான். ஆனால் அவரது எதார்த்தமான பேச்சு மக்களிடம் எடுபடுவதாக எடப்பாடியிடம் ரிப்போர்ட் தருகிறது மாநில உளவுத்துறை. இதனை அமைச்சர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். சமீபத்தில், பத்திரிகை விழா ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், தந்தை பெரியார் தலைமையில் தி.க.நடத்திய பேரணி குறித்து பேசி பரபரப்பை உருவாக்கினார். இதற்குப் பல முனைகளிலிருந்தும் ரஜினிக்கு எதிர்ப்புக்கிளம்ப, துணை முதல்வர் ஓ.பி.எஸ். தொடங்கி அமைச்சர் ஜெயக்குமார் வரை ரஜினியின் பேச்சுக்கு எதிராக வரிந்துகட்டினார்கள். ஆனால், ரஜினிக்கு ஆதரவாகப் பேசினார் ராஜேந்திரபாலாஜி. இது அமைச்சர்களை கடுப்பாக்கியது. தங்களது அதிருப்தியை எடப்பாடியிடம் வெளிப்படுத்தினார்கள். அவர்களை சமாதானப்படுத்தினார் எடப்பாடி.

ADVERTISEMENT



"இது நடந்த ஓரிரு நாளில் தி.மு.க.வை தாக்குவதற்காக இந்துக்களை ஆதரித்தும் இஸ்லாமியர்களை எதிர்த்தும் காட்டமாக பேசினார் ராஜேந்திரபாலாஜி. இது சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் ராஜேந்திரபாலாஜியின் பேச்சு இந்து மக்களிடம் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் தந்திருக்கிறது. இதனையறிந்து, மக்களின் அபிமானத்தை ராஜேந்திரபாலாஜி பெறுவதையும் அதனை முதல்வர் அங்கீகரிப்பதையும் ஜீரணிக்க முடியாத மூத்த அமைச்சர்கள் சிலர், "தமிழகத்துக்கு நீங்கள் முதல்வரா? இல்லை ராஜேந்திரபாலாஜியா? நீங்கள் அட்வைஸ் செய்தும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. கட்சியின் கட்டுப் பாட்டை தொடர்ந்து மீறி வருகிறார். இது, மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு கெட்ட பெயரை உருவாக்குகிறது. அமைச்சரவையிலிருந்து அவரை நீக்கினால்தான் மற்றவர்களுக்கு பயம் வரும்'’ என போட்டுக்கொடுக்க, ’பட்ஜெட்டுக்கு முன்பாக அமைச்சரவையை கூட்டவிருக்கிறேன். அதில் பேசிக்கொள்ளலாம்’ என மீண்டும் சமாதானப் படுத்தியிருந்தார் எடப்பாடி. அதற்கேற்ப அமைச்சரவையில் மோதல் வெடித்திருக்கிறது'' என்கிறார்கள் உளவுத்துறையினர்.


இந்த நிலையில், எடப்பாடி தலைமையில் கடந்த 4-ந்தேதி கோட்டையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. இதற்காக, காலை 10 மணிக்கு கோட்டைக்கு வந்த ராஜேந்திரபாலாஜி, தனது அலுவலக அறைக்கோ, அமைச்சரவை கூட்டம் நடக்கும் கூட்ட அரங்கத்துக்கோ செல்லாமல் தலைமைச்செயலக வளாகத்துக்குள் தனது காரிலேயே காத்திருந்ததை கவனித்த சில அமைச்சர்கள், அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போகிறார் என்கிற ரீதியில் தகவல்களை பரப்பியதால் தலைமைச் செயலகத்தில் ஏகத்துக்கும் பரபரப்பு!


இது குறித்து விசாரித்த போது, "தனது ஆதரவாளரான சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனிடம் சில முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தார் ராஜேந்திரபாலாஜி. அவரிடம் பேசி விட்டு அப்படியே அமைச்சரவை கூட்டத்துக்கு செல்லலாம் என நினைத்து காரிலேயே இருந்தார்'' என்றனர் கோட்டையில் இருந்த பாதுகாப்பு போலீஸார்.

இரண்டரை மணி நேரம் நடந்த அமைச்சரவையில் சில முக்கிய முடிவுகளும், காரசாரமான விவாதங்களும் நடந்திருக்கின்றன. அது குறித்து விசாரித்தபோது, ‘அமைச்சர்களும் முக்கிய துறைகளின் உயரதிகாரிகளும் கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்தும், பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களும் அதற்கான நிதி ஆதாரம் மற்றும் நிதி வரும் வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. சில தொழில் நிறுவனங்களுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.

பட்ஜெட் தாக்கல் மற்றும் அதன் மீதான விவாதங்களை ஒரு வாரத்தில் முடித்துவிட்டு, அதன் பிறகு ஒரு மாதம் இடைவெளிவிட்டு பிறகு துறைவாரியான மானியக்கோரிக்கைகளை நிறைவேற்றும் நடைமுறையை சில வருடங்களாக கடைப்பிடித்து வருகிறது அ.தி.மு.க. அரசு. இந்த முறை பட்ஜெட்டையும் மானியக்கோரிக்கைகளையும் தொடர்ச்சியாக நடத்தி மார்ச்சுக்குள் பட்ஜெட் கூட்டத்தை முடித்துவிடுவது என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, அதிகாரிகளை வெளியே அனுப்பிவைத்துவிட்டு அமைச்சர்களுடன் விவாதித்தார் எடப்பாடி.



அப்போது, நிறுத்திவைக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தலை நடத்துவது எனவும், அதனை இரண்டு கட்டமாக நடத்துவது எனவும் முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பொது வெளியில் அமைச்சர்கள் தங்கள் விருப்பம் போல் பேசக்கூடாது என சொல்லியும், அதனை மீறுவது ஆரோக்கியமானதாக இல்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் மூத்த அமைச்சர்கள் சிலர் பிரச்சனையை எழுப்ப, "என்ன பால்வளம்? அதிகம் பொங்குறீங்களே ? கொதிக்கிறதை அடக்கக்கூடாதா?' என ராஜேந்திரபாலாஜியை பார்த்து எடப்பாடி கேட்க, "நான் பேசியதில் அமைச்சர்கள் என்ன தவறு கண்டார்கள்? அமைச்சர்ங்கிற முறையில் என் கருத்துக்களை சொல்வது எந்தவகையில் தவறானது?' என கேட்டிருக்கிறார்.

அப்போது ஒரு அமைச்சர், "முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவது தேர்தலில் பாதிக்கும்' என சொல்ல, "நீங்க ஓட்டு அரசியலைப் பேசறீங்க. நான் சமூக அவலங்களைப் பேசுறேன். தி.மு.க.வின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டத்தான் பேசினேனே தவிர, முஸ்லிம்களை காயப்படுத்தவில்லை. என் மாவட்டத்தில் இருக்கிற எல்லா பள்ளிவாசல்களுக்கும் மசூதிகளுக்கும் நிறைய உதவி செஞ்சிருக்கேன். முஸ்லிம்களுக்கு நான் செஞ்சது மாதிரி வேறு யாரும் செஞ்சது கிடையாது. ஆனா, லோக்சபா தேர்தல்ல என்ன நடந்துச்சு? 8,500 முஸ்லிம் ஓட்டுகள் இருக்கும் என் சிவகாசி தொகுதியில அ.தி.மு.க.வுக்கு வெறும் 23 ஓட்டுதான் கிடைச்சிது. இதுதான் அவங்க நமக்கு காட்டுற நன்றியா? நீங்க என்ன செஞ்சாலும் முஸ்லிம் ஓட்டு நமக்கு கிடையாது. அவங்க தெளிவா இருக்காங்க. நாமதான் ஏமாந்துக்கிட்டு இருக்கோம்' என ஆவேசம் காட்ட, "அதெல்லாம் சரிதான். அதுக்காக கடுமையா பேசுவதா?' என சக அமைச்சர்கள் மல்லுக்கட்ட, அதற்கு ராஜேந்திரபாலாஜி, "அமைச்சர் என்பதைவிட இந்து என்பதை பெருமையா நினைக்கிறேன்' என சொல்ல, விவாதம் காரசாரமாக போவதையறிந்து எல்லோரையும் அமைதிப்படுத்தினார் எடப்பாடி!''’ என்கிறார்கள் மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள்.

இதுபற்றி ராஜேந்திரபாலாஜியிடம் பேசியபோது, "சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவதும் பெரும்பான்மையினரின் கருத்துக்கள் மதிக்கப்படுவதும்தான் ஜனநாயகம். நான் ஜனநாயகவாதி. அது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. தங்களை யார் ஏமாற்றுகிறார்கள் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்'' என்றார் அழுத்தமாக. தொடர்ந்து சில கேள்விகளை நாம் கேட்க, "இதற்கெல்லாம் என் ஆதரவாளர்களிடம் பேசிக்கொள்ளுங்கள்''’ என்றார்.

இந்தநிலையில், "இந்து ராஜேந்திர பாலாஜி பேரவை' என்கிற ஒரு அமைப்பை அவரது தீவிர ஆதரவாளரான வைத்தியநாதன் தலைமையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன.

இதுகுறித்து வைத்தியநாதனிடம் பேசிய போது, "மத பிரச்சனையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதை அம்பலப்படுத்தத்தான் அமைச்சர் அப்படி பேசினார். இந்தியாவில் இந்துக்களுக்கு ஆதரவாக பேசுவது எப்படி தவறாகும்? சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப் பட்டவர்களுக்கும் குரல் கொடுத்தால்தான் அது ஜனநாயகம், புரட்சி என்றெல்லாம் இங்கு தவறான புரிதலை உருவாக்கி வைத்திருப்பவர்கள், இந்துக்களை எள்ளி நகையாடுவதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்ங்கிறதுதான் அமைச்சரின் எண்ணம். அதேபோல, பா.ஜ.க.வையும் ஆர்.எஸ்.எஸ்.சையும் பார்ப்பன அமைப்பு என விமர்சிக்கிறார்கள். ஆனால், அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மோடியும் அமித்ஷாவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர்தான்.

சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த பேரணி குறித்து ரஜினிகாந்த் பேசியதை கேள்விக்குள்ளாக்கும் அரசியல் கட்சிகள், பேரணிக்கு எதிராக போடப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த ஜட்ஜ்மெண்டும் அமைச்சரிடம் இருக்கிறது. தேவைப்பட்டால் இவற்றை வெளியிடவும் தயாராக இருக்கிறார். இந்தியாவை நேசிப்பதாக சொல்லும் இஸ்லாமியர்கள், பாகிஸ்தானை ஆதரிப்பவர்களாக இருப்பது சரிதானா? அதனால், இந்துக்களை ஒருங்கிணைக்க ஒரு பேரவை அவசியமென்பதால் அதனை செய்து வருகிறோம்''’ என்கிறார் அதிரடியாக. இந்து-முஸ்லிம் விவகாரங்களில் அ.தி.மு.க. அமைச்சர்களிடையே கலகங்கள் உருவாகி விட்டன!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT