ADVERTISEMENT

ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கித்தான் பாருங்களேன்! - வரலாற்றைப் புரட்டி விளக்கம்!

04:10 PM Jun 28, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முக்குலத்தோர் சமுதாய மக்கள் மற்றும் இளைஞரணியினர் என்ற பெயரில் விருதுநகர் மாவட்டம் – சாத்தூர் – ஓ.மேட்டுப்பட்டியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியிருந்தனர். எடப்பாடி பழனிசாமியையும், சி.வி.சண்முகத்தையும் மட்டமான அடைமொழியோடு, அந்தக் கண்டன போஸ்டரில் விமர்சித்திருந்தனர்.

சரி, ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து பெரும்பான்மை எடப்பாடி ஆதரவாளர்களால் நீக்கிவிட முடியுமா? என்ற கேள்விக்கு, ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து விரிவாக விளக்கம் அளிக்கின்றனர்.

'நான் தான்' அதிமுக என எம்.ஜி.ஆர். மனைவி வி.என்.ஜானகியும், ஜெயலலிதாவும் பிரிந்து நடத்திய யுத்தத்தில் இரட்டை இலைச் சின்னம் 1988 இறுதியில் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. 1989 தேர்தலில் ஜானகி அம்மாள் இரட்டைப் புறாவையும், ஜெயலலிதா சேவலையும் சின்னமாகப் பெற்றனர். இரு அணிகளும் மோதின. ஜானகி Vs ஜெயலலிதா என்றிருந்தாலும், அது ஆர்.எம்.வீரப்பன் Vs ஜெயலலிதா என்ற யுத்தமாகவே பார்க்கப்பட்டது. அந்தத் தேர்தலில், 27 எம்.எல்.ஏ.க்களைப் பெற்று 22.37% வாக்குகளை வென்றெடுத்தது ஜெயலலிதா அணி. ஜானகி அணியோ, 9.19% வாக்குகளையும் 2 தொகுதிகளையும் மட்டுமே பெற்றிருந்தது.

அப்போது, அதிமுகவின் 31% வாக்குகள் இரண்டாகப் பிரிந்ததால், திமுக ஆட்சிக்கு வந்தது என்று நம்பப்பட்டது. ஒரு கட்டத்தில் ஜானகி, தான் பெற்ற 9.19% வாக்குகளுக்கான அணியை அப்படியே ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார். ஜெ மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைப்புக்குப் பிறகே, இரட்டை இலைச் சின்னம் மீண்டது. இதுதான் வரலாறு.

இதே நிலை 2017-லும் வந்தது. சசிகலாவையும், டிடிவி தினகரனையும், அவரால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராகவும், ஓபிஎஸ் கிளர்ந்தெழுந்தார். மீண்டும் அதிமுக சின்னம் முடங்கியது.

தான் முதல்வராக வேண்டும் என்று, காலியான ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் இல்லாமல், அதிமுக தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை வந்தது. டிடிவி அணி தொப்பியையும், ஓபிஎஸ் அணி மின்விளக்கையும் பெற்று தேர்தலில் போட்டியிட்டது. இன்று இ.பி.எஸ்ஸோடு உள்ள அனைவரும் அன்று டிடிவியோடு இருந்தார்கள். முதல்வர் இபிஎஸ் கூட டிடிவி-க்காகப் பிரச்சாரம் செய்தார். ஆனால், யாருடைய பலமும் நிரூபிக்கப்படாமல், அந்தத் தேர்தல் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. பின்னாளில், இபிஎஸ் Vs டிடிவி என்றானது. ஓ.பி.எஸ்ஸும், இ.பி.எஸ்ஸும் இணைந்தனர்.

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இணைந்தவுடன், டிடிவி தன் ஆதரவு எம்.எல்.ஏக்களை பிரித்துக்கொண்டு வெளியேறினார். அவர்கள் நீக்கப்பட்டனர். மீண்டும் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைந்ததால், இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட்டது, சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு, இரட்டை இலை – உதயசூரியன் என இரண்டு பெரிய கட்சிகளையும் டிடிவி தினகரன் வென்றார்.

பிறகு 2019-ல், நீக்கப்பட்ட எ.எல்.ஏ.க்களுக்காக இடைத்தேர்தல் நடந்து, அதில் வென்று, அதிமுக ஆட்சியை தக்க வைத்ததை அறிவோம். இதில், ஜெயலலிதா Vs ஜானகிக்கும், ஓபிஎஸ் Vs இபிஎஸ்க்கும் நுட்பமான வேறுபாடு உள்ளது. இரட்டை இலைச் சின்னம் முடங்கி, வேறு சுயேட்சை சின்னங்களில், ஒரு பொதுத்தேர்தலில் இருவரும் போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபித்தவர்கள் ஜெயலலிதாவும், ஜானகியும்.

அதில் ஜெயலலிதாவால்தான் கட்சியை நடத்த முடியும் என்று ஜானகி அணி ஜெயலலிதா அணியோடு இணைந்து இரட்டை இலையைப் பெற்றது. ஆனால், ஒரு தேர்தலில் இபிஎஸ் – ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளும், தங்கள் பலத்தை நிரூபிப்பதற்கு முன்பே, சசிகலா - டிடிவி தலைமைமை ஏற்க விரும்பவில்லை என்ற பொதுப்புள்ளியில் இணைந்தது.

ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்த பிறகு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான அணிக்கு இரட்டை இலையை வழங்கியது தேர்தல் ஆணையம். தன் பலத்தை நிரூபித்து, தன் தலைமையை ஏற்றுக் கொண்டவர்களுடன் ஜெயலலிதா இரட்டை இலையைப் பெற்றதையும், ஓபிஎஸ் பலத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவியை வழங்கி, இபிஎஸ் அணி இரட்டை இலையை மீட்டதையும், ஒரே அளவுகோலாகப் பார்க்கமுடியாது.

2017-ல் மீண்ட இரட்டை இலைச் சின்னத்திற்கு இபிஎஸ் மட்டும் உரிமை கோர முடியாது. யாருடைய பலத்தையும் நிரூபிப்பதற்கு முன்பே, இரட்டை இலையை ஓபிஎஸ் உதவியுடன் மீட்டு, அவரை ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக்கொண்டாகிவிட்டது. நாடாளுமன்றம், இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி, சட்டமன்றம், நகர்ப்புற உள்ளாட்சி என எல்லா தேர்தலுக்கும், இருவரும் கையெழுத்திட்டே இரட்டை இலை சின்னத்தைக் கொடுத்துள்ளனர். அது அறுவடை செய்த அனைத்து வாக்குகளுக்கும், இருவருக்குமே உரிமை கோரும் அதிகாரம் உள்ளது.

அதிமுக சட்டவிதிகளின் படி, பொதுச் செயலாளரை பொதுக்குழுவோ, நிர்வாகிகளோ சேர்ப்பதோ, நீக்குவதோ முடியாது. திமுகவில் கலைஞர் அப்படித்தான், தன்னை எளிமையாக நீக்கிவிட்டாரென யோசித்த எம்.ஜி.ஆர்., அதிமுகவுக்கு சிறப்பான சட்டங்களை வகுத்துள்ளார். பொதுச் செயலாளரையோ அல்லது அதற்கு நிகராக மாற்றப்பட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியையோ பொதுக்குழுவால் நீக்கவோ, நியமிக்கவோ முடியாது. அதேநேரத்தில், நியமிக்கப்பட்ட பொதுச் செயலாளர் சசிகலாவையும், துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனையும் நீக்கியது செல்லுபடியானது.

ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை, சட்டவிதிகளின்படி தேர்தல் முறையில் தேர்ந்தெடுத்துவிட்டனர். அதை பொதுக்குழு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒரு புள்ளி என்றாலும், பொதுக்குழுவே செல்லுமா? செல்லாதா? எனக் கேள்விகள் எழுந்தபிறகு, அவைத்தலைவர் நியமனம் செல்லுமா என்ற குழப்பமும் வந்தபிறகு, தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் என்பதுதான் நிற்கும்.

ஒருவேளை, ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் காலாவதி ஆனது செல்லும் என்றாலும்கூட, அவைத்தலைவர் நியமனமானது கேள்விக்குள்ளாகும். அதிமுக சட்ட விதிகளின்படி, பொதுச் செயலாளர் - துணை பொதுச் செயலாளர், அடுத்து பொருளாளர், அதற்கடுத்து தலைமை நிலையச் செயலாளர் என்பது தான் அதிகாரப் படிநிலை.

ஆகவே, பொதுச் செயலாளர் பதவிக்கு நிகரான ஒருங்கிணைப்பாளர் / இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானாலும் கூட, ஓபிஎஸ்-க்கு அதிமுகவின் மறைந்த பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் அளிக்கப்பட்ட பொருளாளர் பதவியை யாராலும் நீக்க முடியாது. இபிஎஸ் தலைமை நிலையச் செயலாளராக இருந்தாலும், பொருளாளர் பதவிக்கும் பாதி அதிகாரம் போய்விடும். அதை, தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவாலும் நீக்க முடியவில்லை.

திமுக - அதிமுகவில் மிக முக்கியமான அதிகாரப் பதவி பொருளாளர். அதுவும் அதிமுக சட்டவிதிகளின்படி, தலைமைப் பதவியான பொதுச் செயலாளர் / துணை பொதுச் செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர் / இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலி என்றால், அதுவரையிலும் நிர்வாகமானது, பொருளாளர் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் கைக்கு மாறும். அப்படியே பார்த்தாலும், 50/50 கட்சி ஓபிஎஸ் - இபிஎஸ்க்குத்தான். ஓபிஎஸ்ஸை யாராலும் நீக்க முடியாது. நீக்கி அறிவித்தாலும் செல்லாது. ஓ.பி.எஸ். கையெழுத்தில்லாமல், வருகிற ஜூலை 9-ம் தேதி நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் (இடைத்தேர்தல்) இரட்டை இலைச் சின்னத்தை கொடுக்க முடியாது. அதிமுகவினர் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் சூழல் வரும்.


முதல்வர் வேட்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி போல, இதை ஒருக்காலும் விட்டுக்கொடுக்க மாட்டார் ஓபிஎஸ். காரணம், இரட்டை இலைச் சின்னம்தான் வாக்குகளைப் பெற்றது, அந்தச் சின்னத்திற்கு தன்னுடைய கையெழுத்து வேண்டும்; அதை, தான் விட்டுக் கொடுக்காதவரை, யாராலும் பறிக்க முடியாது என்பதைப் புரிந்துள்ளார்.

இறுதியாக, இந்தப் பிரச்சனை ஒரு நிலையை அடையும். அது, முறையாக பொதுச் செயலாளருக்கு தேர்தல் வைப்பது. அல்லது ஒருங்கிணைப்பாளருக்கு தேர்தல் வைத்து தேர்ந்தெடுப்பது. அப்படி நகர்ந்தால், பலர் அந்த தலைமை பதவிக்குப் போட்டி போடலாம். அதில் ஒன்றிய, நகர, மாவட்ட, மாநகர என எல்லா கிளைகளிலும் பெட்டியை வைத்து, மினி தேர்தலையே ஆணையம் நடத்தும். இதில் ஓபிஎஸ் - இபிஎஸ் மட்டுமல்ல, செங்கோட்டையனும் போட்டியிடலாம். இப்படி ஒரு நிலை வருவதற்கு முன்பே ஓபிஎஸ்ஸை நீக்கிவிடலாம் என்று நினைத்தால், அது நடப்பதற்கான சாத்தியம் இல்லை. இவ்வாறு வரலாற்றைப் புரட்டுகிறது ஓ.பி.எஸ். தரப்பு.


இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். மோதலில் நிரந்தரத் தீர்வோ, தீர்ப்போ காலத்தின் கையிலிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT