Skip to main content

‘போட்டோவா எடுக்கிறான் கொல்லுங்கடா அவன’ அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரத்தை காட்சியாக்கிய நக்கீரன்! 

 

ADMK leader issue in 1990 and now

 

 

இப்போது நடப்பது போலவே அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கான கலாட்டாக்கள் அன்றும் நடந்தன. உயிரைப் பணயம் வைத்து லத்தி அடிபட்டும், காயத்தோடு கேமிராவைப் பறிகொடுத்தும், பிலிம் ரோலை சமயோசிதத்துடன் பாதுகாப்பாக அலுவலகம் அனுப்பி வைத்த நமது பெருமைக்குரிய நிருபர்-கம்-போட்டோ கிராபர் முத்துராமலிங்கன் மட்டுமே இந்தப் படங்களை எடுத்துள்ளார்.

 

இது நக்கீரன் வாசகர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு.

 

தடை செய்யப்பட்ட கலவரப்படங்களுடன் ஸ்பாட் ரிப்போர்ட்!  

 

ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எஸ்.டி.எஸ்., முத்துசாமி, செங்கோட்டையன் உட்பட சில பிரமுகர்கள் சாவகாசமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். அ.தி.மு.க.வில் நடக்கும் சமீபத்திய அடிதடிகளைத் தொடர்ந்து தலைமைக் கழகத்தில் ஓரளவு போலீஸ் பாதுகாப்பு இருந்து வந்தது என்றாலும் அன்று எஸ்.டி.எஸ். கண்ணை உறுத்தும்படி ஒரு காரியம் நடந்துகொண்டே இருந்தது.


காரண காரியமில்லாமல், அது ஒரு ஞாயிற்றுக்கிழமையாக இருந்தும் கூட தலைமைக் கழகத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக போலீஸார் குவிந்து கொண்டே இருந்தனர். ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று அவரது உள் மனசு சொன்னாலும் “திருநாவுக்கரசு, சாத்தூரார் அணியினர்தான் இன்று ராமராஜன் வீட்டுக்கல்லவா போகிறார்கள்” என்று சமாதானப்படுத்திக்கொண்டார். 

 

கே.கே.எஸ்.எஸ்.ஆர். தங்கியிருந்த அசோகா ஓட்டலில் திருநாவுக்கரசு, உக்கம்சந்த், குழந்தைவேலு ஆகியோர் இறங்கி ராமராஜன் வீட்டுக்குப் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் காலை 8.10-க்கு இவர்கள் வரவிருப்பதைப் பற்றி எந்த பரபரப்புமில்லாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார் ராமராஜன். ராமராஜன் வீட்டிற்குப் போவதற்கு தயாராக இருந்த சுமார் 50 வாகனங்களையும் வேன், கார்களில் 'தன்மானத் தளபதி ராமராஜன் வாழ்க' என்ற துண்டு போஸ்டர்களை கட்டாயம் ஒட்டும்படி ஒவ்வொரு நபரையும் பார்த்து உத்தரவிட்டுக்கொண்டிருந்தார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

 

ADMK leader issue in 1990 and now

 

8.25க்கு அசோகா ஓட்டலை விட்டுப் புறப்பட்ட எதிரணியினரின் கார்கள் மவுண்ட ரோடை அடைந்து ராயப்பேட்டையை குறி வைத்து வேகமெடுக்கவே அதுவரை நீடித்த சஸ்பென்ஸ் உடைந்து எல்லோருக்கும் போகிற இடம் புரிந்துபோயிற்று. நமது நக்கீரன் அலுவலக ஆட்டோ இவர்களைப் பின்தொடர, மவுண்ட ரோடை அடைந்ததும் டிராஃபிக் சற்றும் இல்லாததால் திருநாவுக்கரக அணியினரின் கார்களை நமது ஆட்டோ டிரைவர் ஓவர் டேக் செய்ய முற்படவே. காரிலிருந்து வெளியே எட்டிப் பார்த்த ஒரு பிரமுகர். 'தம்பி. கூட்டம் காமிக்கிறதுக்காக டவுனைச் சுற்றி ராமராஜன் வீட்டுக்கு வரப்போறோம். நீங்க நேராவே அங்க வந்துடுங்க' என்றார். ஆனால் நம் உடன்பிறப்பு ‘மிஸ்டர் சந்தேகம்’ அதை நம்ப விடாமல் தடுக்க, நாம் அவர்களை பின்தொடர. இணைக்கப்பட்ட ரயில் பெட்டிகளாய் வரிசையாய்ச் சென்ற கார்கள் வளைவில் திரும்பி இவர்களது கார்களும், நமது ஆட்டோவும் தலைமைக் கழகத்தை அடைந்த நேரம் மணி சரியாக காலை 8.33. 

 

ஞாயிற்றுக்கிழமைச் சூழ்நிலையில் முழுசாய் மூழ்கியிருந்தது. தலைமைக் கழகம். வழக்கமாய் 'தேவுடு' காத்து வந்த சுமார் 50 தொண்டர்களும் அன்று ஆப்ஸெண்ட் ஆகியிருக்க, காரிலிருந்து கேட்டை ஒட்டி இறங்கிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்.. திருநாவுக்கரசு இருவரும் (அக்னி நட்சத்திரம் கார்த்திக். பிரபு போல) ஆக்ரோஷமாய் கேட்டைத் திறந்து, நின்றிருந்த ஒன்றிரண்டு பிரமுகர்களை ஓரங்கட்டி விட்டு உள்ளே நுழைந்தனர். வெளியே கார்களின் சத்தங் கேட்டு, “ஐயய்யோ நான் எற்கனவே சந்தேகப்பட்டது சரியாப்போச்சே” என்றபடி எஸ்.டி.எஸ். வாசலுக்கு ஓடி வர. முத்துசாமி, செங்கோட்டையன், அரங்கநாயகம், மதுசூதனன், தலைமைக் கழகச் செயலாளர் துரை ஆகியோர் அவரைப் பின்தொடர்ந்தனர்.

 

இடையில் ஏற்பட்ட சிறுசிறு தடங்கல்களை அப்புறப்படுத்திவிட்டு கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருநாவுக்காக அணியினர் கேட்டிலிருந்து சுமார் முப்பதடி தூரத்திலுள்ள தலைமைக் கழகப் படியில் கால் வைத்தார்கள்.  

 

ADMK leader issue in 1990 and now

 

“சர்வாதிகாரி ஜெயலலிதா ஒழிக, திருநாவுக்காக. கே.கே.எஸ்.எஸ்.ஆர். வாழ்க” என்றபடி இவர்கள் படியில் ஏற முயற்சிக்க அவர்களைத் துணிந்து முதலில் தடுக்க வந்தவர் திண் தோள்களும், ஜிம்னாஸ்டிக் பாடியும் கொண்ட மாவீரன் எஸ்.டி.எஸ். எனவே, காரணத்தோடு முதன்முதலில் சரமாரியான அடிகள் வாங்கி கழுத்தைப் பிடித்துத் தள்ளப்பட்டு, கண்ணாடி கீழே விழ உருட்டி விடப்பட்டார் அவர். அடுத்த குறி தலைமைக் கழக செயலாளர் துரை. படியில் நின்றிருந்தபோதே, அவரது கழுத்தை நெருக்கிப் பிடித்து பார்க்கிறவர்களுக்கே கன்னம் வலிக்கும்படி ஒரு அறை விட்டார் ஒரு பிரமுகர். அறை வாங்கிய அதிர்ச்சியிலிருந்து அவர் மீள்வதற்குள் கூட்டத்திலிருந்து ஒரு ஓரத்திற்கு நெட்டித் தள்ளப்பட்ட அவரை, அறைவதற்கு நிறையப் பேர் கியூவில் நிற்க ஆரம்பித்தார்கள்.

 

இந்த சந்தர்ப்பத்தில் உதிர்க்கப்பட்ட கெட்ட வார்த்தைகளை மஞ்சள் பத்திரிகைகளில் கூட எழுத முடியாது. துரையபிஷேகம் மட்டுமே சுமார் 2 நிமிடங்களுக்கு மேல் நீடிக்க, பொடிப் பயல்களிடமெல்லாம் அடி வாங்க நேர்ந்த சூழ்நிலையை எண்ணி துரை வாய்விட்டு கதறி அழுதார். நிலைமை மிகவும் கட்டுக்கடங்காமல் போனபோது, “நான் ஒண்ணும் உங்களைத் தடுக்கலையே... என்னை ஏன் இப்படி ஆளுக்கு ஆள் அறையறீங்க?” என்றார் தழுதழுத்த குரலில்.

 

இந்த நேரத்தில் திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். அணியைச் சேர்ந்த பலருக்கும் வெட்டுக் காயங்கள், கம்பால் அடிகள் விழுந்து கொண்டிருக்க, இதிலெல்லாம் சுவாரஸ்யம் காட்டாமல் பரபரப்பாய் ஒரு நபர் அரங்கநாயகத்தைத் தேடிக்கொண்டிருந்தார். கூட்டத்தில் சுற்றி வளைத்துப்போய் அரங்கநாயகத்தைக் கைப்பற்றிய அவர் சாவகாசமாக பக்கத்திலிருந்தவரிடம். “இவனை எவ்வளவு நாளா மண்டைய ஒடைக்கணும்னு நெனச்சிகிட்டிருக்கேன் தெரியுமா? இன்னைக்குத்தான் வசமா மாட்டினான்” என்றபடி செல்லமாய் முதலில் ஒரு குட்டு குட்டிவிட்டு, அடுத்த வினாடியில் ரத்தம் வராதபடிக்கு கவனமாய் ஒரு போடு போட்டார்.

 

ஜெயலலிதாவிடம் சதா காதருகே கிசுகிசுத்துக் கொண்டிருக்கும் அவரது விசுவாசி முத்துசாமி, தான் போட்டிருக்கும் வெள்ளைச் சட்டை சற்றும் கசங்கிவிடாதபடிக்கு அங்கிட்டும் இங்கிட்டுமாக வந்து... சற்று அருகாமையில் போலீஸ் - பிடியில் சிக்கியிருந்த திருநாவுக்கரசு அவ்வளவு டென்ஷனுக் கிடையிலும் முத்துசாமியிடம், “யோவ் முத்துசாமி, வீணா ரிஸ்க் எடுக்காத, பேசாம எங்க பக்கம் வந்து சேர்ந்துடு” என்று தமாஷ் பண்ணினார்.

 

செங்கோட்டையன் சும்மா ஒப்புக்கு கூட்டத்தில் தெரிந்தார். மதுசூதனனும் டிட்டோ. இந்த வகையான ஜனநாயக வழி சண்டைகள் சுமார் அரைமணி நேரம் நீடிக்க, 9 மணி வாக்கில் மீண்டும் புதுத் தெம்பு பெற்ற எஸ்.டி.எஸ். வேகமாக ஓடிப் போய் கேட் வாசலில் தலைக்கு கையை முட்டுக் கொடுத்தபடி ரெண்டு கையையும் கும்பிட்டபடி குப்புற, மல்லாக்க என்று பலவிதமான போஸ்களில், “என் உயிரே போனாலும் தலைமைக் கழகத்தை துரோகிகள் கைப்பற்ற விட மாட்டேன்” என்று மூச்சிரைக்க வசனம் பேசினார்.

 

இப்போது 'ரிலாக்ஸ்' மூடுக்கு வந்திருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். “பாருங்கப்பா, இவ்வளவு பேருக்கு மத்தியில் இந்த மனுஷன் எஸ்.டி.எஸ். ஒருத்தர்தான்யா அம்மாவுக்கு விசுவாசமா இருந்து. நம்மள எதுத்து சண்டை போடுறாரு. வாழ்க வீரன் எஸ்.டி.எஸ்.” என்றார்.

 

இந்த யுத்த நேரத்தில் சில காமெடியான காட்சிகளும் நடந்தன. கே.கே.எஸ்.எஸ்.ஆர். உள்ளே ஆக்ரோஷமாய் நுழைந்த சில நிமிடங்களில் செங்கோட்டையன், எஸ்.ஆர். ராதா உட்பட ஏழெட்டு பிரமுகர்கள் தலைமைக் கழகத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். உள்ளே ஒரே கதறல் சத்தம். இதில் சுவரேறி வெளியே குதித்தவர்களின் பட்டியலும் இருக்கிறது. காலையில் உற்சாகமாக கிளம்பி வந்து தலைமைக் கழகம் வந்தவுடன் கட்சி மாறியதை ஞாபகம் வைத்துக் கொண்டு நமக்கு அடி சற்று அதிகமாக விழக் கூடும் என்ற எண்ணத்தில் பயந்தே உள்ளே நுழைந்த புது எம்.எல்.ஏ.க்களை "டேய், கட்சி மாறுன களவாணிப் பயசு வர்றாங்கடா! அடிங்கடா அவனுங்களை" என்றபடி எதிரணியினர் துள்ள ஒரு எம்.எல்.ஏ. உடனே ஓட்டமெடுத்து சுவரேறிக் குதித்தார். அதைத் தொடர்ந்து சுவரேறி தப்பிப் பிழைத்த இரு அணி வீரர்களின் பட்டியல் இருபதைத் தாண்டும். 

 

ADMK leader issue in 1990 and now

 

ஒவ்வொரு நபராக சமாளித்து முன்னேறிக் கொண்டிருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்., அரங்கநாயகத்தை அடைந்தபோது அவரது சட்டையைப் பிடித்து உலுக்கி, "ஏண்டா, சாத்தூருக்கு வந்து நான் ஜெயிச்சுடுவேன்னு என்கிட்டே பணம் வாங்கிட்டுப் போயி நானூறு ஓட்டு கூட வாங்க துப்பில்லை. என்னை எதிர்த்து டெய்லி அறிக்கை வேற ஒனக்கு ஒரு கேடா... போடா" என்று சொல்லி முடிப்பதற்குள் ரெண்டு மூணு பேர் அவரை அடிக்க, "ஐயா, நீங்கதானே என்னை ஜெயலலிதாகிட்டே கொண்டு வந்துசேத்தீங்க. இப்ப நீங்களே அடிக்கிறீங்களே" என்று பரிதாபமாய்க் கெஞ்சினார். அடுத்து யாரும் அவரை அடிக்கவில்லை.. உடனே வெளிலே வந்து வீங்கிய முகத்துடன் நின்று கொண்டிருந்த எஸ்.ஆர்.ராதாவுடன் அவர் சேர்ந்து கொண்டார்.


தமிழன், தமிழ்நாடு பாரம்பரியம் கெட்டுவிடாதபடி முழுசாய் வேடிக்கை பார்த்துவிட்டு கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் தடியுடன் களம் புகுந்த போலீஸ் இரு தரப்பினரையும் கெஞ்சிக் கூத்தாடி போலீஸ் வேனில் ஏறும்படிக் கேட்டுக்கொண்டார்கள். லோக்கல் போலீஸை. இந்த அணியினர் அவர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டதாகவும், அவர்கள் இவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாகவும்,  மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டிருந்தனர். ஆனால் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸார் மட்டும் அண்ணாச்சி, அத்தாச்சி வித்தியாசமில்லாமல் சகட்டுமேனிக்கு லத்தியால் சாத்தினர்.


“முதல்ல அவங்களை ஏறச் சொல்லுங்க” என்று போலீஸிடம் ஆரம்பித்து, “டே நாயி, நீ முதல்ல ஏறுடா” என்று பெரும்புள்ளிகள் அன்பாக திட்டிக்கொண்டார்கள். இவ்வாறு வேனில் ஏறும் போராட்டமும், தலைமைக் கழகத்துக்கு வெளியே சுமார் 20 நிமிடம் நடக்க, 9.20க்கு மேல் இரு பிரிவினருமே போலீஸ் பிடிக்குக் கொண்டு செல்லப்பட்டு தலைமைக் கழக இரும்புக் கேட்டில் சங்கிலியுடன் கொண்ட ஒரு பூட்டு தொங்கவிடப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு கேட் வழியாக நோட்டமிட்டபோது ஆங்காங்கே அறுந்து கிடந்த செருப்புகள், தடியாகப் பயன்படுத்தப்பட்ட கொடிக் கம்புகள், ரத்தக் கறையுடன் அ.தி.மு.க..கரை போட்ட ஒரு துண்டு, இன்னும் சில பொருட்கள், நடந்து முடிந்த வன்முறைகளுக்கு மெளன சாட்சிகளாய் காட்சி தந்தன.


இந்த சம்பவம் தொடர்பாக நாம் ஜெயலலிதா தரப்பினரையோ, திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். தரப்பினரையோ குறிப்பிட்டு குற்றம் சுமத்துவதற்கில்லை. ஏனென்றால் இவர்கள் எப்போதும் எம்.ஜி.ஆர். வழியில் அதே வழியில் சற்று உணர்ச்சிவசப்பட்டு நடப்பவர்கள். எம்.ஜி.ஆர். தன் கழக உடன்பிறப்புகளை 'ரத்தத்தின் ரத்தங்களே' என்றார். இவர்களும் உடன்பிறப்புகளின் ரத்தங்களை எடுக்கிறார்கள். வாழ்க எம்.ஜி.ஆர், வளர்க அவரது ரத்தத்தின் ரத்தமெடுக்கும் உடன்பிறப்புகள்.


போட்டோவா எடுக்கிறான் கொல்லுடா அவன...! ஒரு த்ரில் அனுபவம்!


இரட்டையர்களின் முன்னாள் புரட்சித் தலைவி இவர்களை டிஸ்மிஸ் செய்த தினத்திலிருந்தே தலைமைக்கழகத்தைக் கைப்பற்றுவது அல்லது அதற்கு சீல் வைப்பதையே தங்கள் தலையாய நோக்கமாய் வைத்திருந்தார்கள். அப்போது, இப்போது என்று அறிவித்துவிட்டு திடீரென்று தலைமைக்கழகத்தை வரும் 20-ம் தேதி சட்டசபை கூட்டத் தொடருக்கு முன் கைப்பற்றப்போவதில்லை என்று அறிவித்து. 


“உற்றார் உறங்கையிலே, ஊராரும் தூங்கையிலே” ஒரு ஞாயிற்றுக் கிழமையாகப் பார்த்து அதுவும். ராமராஜனைப் பார்க்க போவதாக சொல்லி ஏமாற்றியும் நக்கீரன் மட்டும் தலைமைக் கழகத்தில் நடந்த முழுசம்பவத்துக்கும் பார்வையாளராக ஆஜராகியிருந்தார். எப்படி?


கேமிரா பிடுங்கி உடைக்கப்பட்டது. உடைத்த கேமராவும் சுமார் 30 போலீஸ் அதிகாரிகள் கையில் மாறி மாறி காணாமல் போயிருந்தது. சம்பவம் முடிந்த நேரத்தில் ஒரு வழியும் புரியாமல் நாம்... ஆனால், இப்போது வேறேந்த பத்திரிகையிலும் பெறமுடியாத 22 படங்களை பார்க்கிறீர்கள் எப்படி வந்தன இந்தப் படங்கள்? ஒரு பரபரப்பான சினிமாவில் இடம்பெறத்தக்க அத்தனை அம்சங்களும் பொருந்திய அந்த 16 மணி நேரப் போராட்டத்தை... எந்த நேரமும் துப்பாக்கிச்சூடு நடக்கலாம் என்ற சூழ்நிலையில் செய்தி, படங்கள் எடுப்பதற்காக நக்கீரன் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை வாசகர்களுக்கு ‘இஞ்ச் பை இஞ்ச்’ ஆக எழுத இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்கிறோம்.


11.8.90 இரவு 8 மணி.


மறுநாள் நடக்க விருப்பதாக(?) சொல்லப்பட்ட ராமராஜன் ரசிகர் மன்ற மாநாடு பற்றிய விபரங்கள் தெரிந்து(?) கொள்வது தொடர்பாக கே.கே.எஸ்.எஸ்.ஆரை போனில் தொடர் கொண்டபோது அவரது போன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. திருநாவுக்கரசை தொடர்பு கொண்டால் அங்கும் இதே நிலை. அசோகா ஓட்டலுக்கும் திருநாவுக்கரசு வீட்டுக்கும் நேரில் சென்றபோது இருவருமே இல்லை என்பது நம் சந்தேகத்தின் முதல் விதை. அவர்கள் வழக்கமாகக் கூடிப்பேசும் இடத்தை மாற்றிக் கொண்டார்கள். 
ராமராஜன் தரப்பில் தொடர்பு கொண்டபோது அங்கிருந்து எந்த பதிலும் பெற முடியவில்லை. ஆனால் மறுநாள் மாநாட்டுக்கு ஏற்பாடுகள் எதுவும் நடப்பதாவும் தெரியவில்லை..


முன்பு அடிக்கடி சொல்லப்பட்ட தலைமைக்கழக கைப்பற்றல் திட்டம். சமீபத்தில் அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று இரட்டையர்கள் பேட்டிகொடுத்தது, மேற்கண்ட சம்பவங்கள். எல்லாவற்றையும் போட்டு கூட்டி, கழித்து குழம்பியபோது... பளிச்..! மூளையின் ஒரு ஓரத்தில் சின்னதாய் ஒரு மின்னலடித்தது. போர்வையை இழுத்துப் போர்த்தி மதியம் 11 மணி வரை தூங்கும் வழக்கமான ஞாயிறுகளை மறந்து, 12:8.90 ஞாயிறன்று நக்கீரனில் நிர்வாக ஆசிரியர், ஆசிரியர் உட்பட 5 பேர் எழுந்த நேரம் அதிகாலை 5 மணி. நேராய் 3 பேர் தலைமைக் கழகம் செல்ல நாம் நமது ஆட்டோ டிரைவருடன் 5.30 மணிக்கு அசோகா ஓட்டலில் ஆஜரானோம். இரு இடங்களிலும் 2 மணி நேரம் முக்கிய சம்பவங்கள் எதுவும் நடக்காமல் நாம் கொட்டாவி விட்டபடி காத்திருக்க, 7.30 மணியிலிருந்து சம்பவங்கள் குடு பிடிக்க ஆரம்பித்தன.
வழக்கமாக, எதற்கெடுத்தாலும் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுத்தே எம்.எல்.ஏ. மற்றும் இதர பிரமுகர் இணைப்புகளை நடத்தி வந்த இரட்டையர்கள் அன்று புத்திசாலித்தனமாக ஒரு பத்திரிகையாளரையும் அழைத்திருக்கவில்லை.


நாமும் வெளியே காட்டிக் கொள்ளாமல் கேமராவுடன் தலைமைக் கழக கேட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த ஒரு பழைய ஜீப் மீது ஏறிநின்று வன்முறைக் களத்தில் அவ்வப்போது இடி அடிகளுக்கிடையில் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தபோது சம்பவம் ஆரம்பமான 10-வது நிமிடம் 'டேய் யார்ரா நீ இறங்குடா ஜீப்பை விட்டு.... புடுங்குங்கடா அவன் கேமராவை 'வெட்டுங்கடா. 'குத்துங்கடா' என்று பயமுறுத்தும் வார்த்தைகள். 


ஒரு லத்தி நம் காலை பதம் பார்த்தது, தலைமைக் கழக படியில் கட்சிப் பிரமுகர்களை விலக்கி விட்டுக் கொண்டிருந்த போலீஸார், கண்மூடித்தனமாக லத்தியடியில் இறங்கியிருந்த மத்திய ரிசர்வ் போலீஸார், இரு அணி பிரமுகர்கள் என்று சுமார் 30 பேர் சூழ்ந்துகொள்ள கேமராவை கால்களின் நடுவில் பிடித்தபடி 15 நிமிடப் போராட்டம் நடந்தது. முதுகைப் பதம் பார்த்த லத்திகள், தொடையின் மேல் ஏறி நின்ற இந்தி போலீஸ்காரன்., வார் தனியாய் ஃப்ளாஷ் தனியாய் லென்ஸ் தனியாய், பாஸ், அடையாள கார்டு பணம் எல்லாம் சிதறி காணாமல் போய் உடம்பின் பல பாகங்களில் காயமேற்பட ஆரம்பித்த நிலையிலும் கேமராவை பறி கொடுத்துவிடக்கூடாது என்ற வெறி மட்டுமே நெஞ்சில் 'எக்கோ' அடித்துக் கொண்டிருந்தது.


சற்று நேரத்தில் திருப்பம் திருநாவுக்கரசு ரூபத்தில் வந்தது. யாரோ ஒரு போட்டோ கிராபரை ஆளுக்கு ஆள் அடிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்த அவர், உடனே ஓடி வந்து எதிரணியினரின் தொடர்ந்த தாக்குதல்களையும் பொருட்படுத்தாமல் ஏதோ ‘புதை குழியிலிருந்து மீட்பது போல்’ நம்மை மீட்டார். இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட போலீஸார் சிலர் நம் கையில் லத்தியால் அடித்து கேமராவை பறித்துக் கொள்ள, காப்பாற்ற வந்த திருநாவுக்கரசுக்கும் தலையில் பலமான லத்தி அடி இறங்கியது. 


நிர்க்கதியாய் வாசலுக்கு வந்து நின்றபோது, ஏற்கனவே தலைமைக் கழக சம்பவங்களை யாரும் அறியாத இடங்களிலிருந்து 'ரெகார்ட்' பண்ணிக் கொண்டிருந்த நமது நிர்வாக ஆசிரியர், ஆசிரியர் துரை. நிருபர் சன் ஆகியோர் வந்து சேர்ந்துகொள்ள கேமரா போனாலும் பரவாயில்லை... “ஃபிலிம்மை மீட்பது நமது பிரஸ்டீஜ் விசயம்” என்று மனசுக்குள் ஒருத்தர் அறியாமல் ஒருத்தர் சபதம் எடுத்துக் கொண்டோம்.


அதன்படி முதலில், தலைமைக்கழக ஸ்பாட் டூட்டியிலிருந்த டெபுடி கமிஷனர் ராதாகிருஷ்ணனை அணுக “கேமரா திரும்ப தந்துருவோம். ஆனா பிலிம் தரமாட்டோம். ஏன்னா அது போலீஸ் ரெக்கார்ட், நாங்க அடிக்கிற மாதிரி படம் எடுத்தா எப்படி அதைப் போட அனுமதிக்க முடியும். ராயப்பேட்டை ஸ்டேசன்ல வெய்ட் பண்ணுங்க வந்து பேசுவோம்” என்றார். 


ராதா கிருஷ்ணன் நமக்கு அடுத்த பதிலைச் சொல்லும்போது மணி 2. “கேமரா யார் கிட்ட இருக்குன்னே தெரியலை. தேடச் சொல்லிருக்கேன். வந்ததும் சொல்றேன்” இதுதான் அப்போது வந்த பதில். சுமார் 4 மணி நேரமாய் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தின் எதிரில் நமது டிரைவர் மோகன், நிர்வாக ஆசிரியர், நிருபர் பசியுடன் காத்திருக்க 'இந்த பதிலைப் போய்ச் சொல்வதா’ என்று தயக்கம். ஆனால் வேறு வழியில்லை.


அந்த துக்கமான செய்தியை நால்வரும் பகிர்ந்து கொண்டு தொடர்ந்து காத்திருந்தபோது, ஒரு மணி நேரம் கழித்து போலீஸ் ஜீப் ஒன்று நம்மை வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு இட்டுச் சென்று முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் நிறுத்த சில எச்சரிக்கைகள் + அட்வைஸ்களுக்குப்பின் மேலும் சுமார் 20 அதிகாரிகளின் கைகளில் கேமரா போய் மாலை 5 மணி வாக்கில் நம் கைக்கு வந்தது.

 
ஆனால்,  போலீஸாரால் ஃபிலிம் ‘கழட்டப்பட்ட’ வெறும் கேமரா. எந்த ஃபிலிம்முக்காக 5 பேர் நாள் முழுக்க டீ தவிர எதுவும் சாப்பிடாமல் அலைந்தோமோ அந்த ஃபிலிம் நம் கைக்கு வரவில்லை. ஆனால் அந்த' ஃபிலிம் காலை 9.45-க்கு நம் அலுவலகத்திலிருந்தது. அது ஒரு சுவாரசியமான மினி ஃப்ளாஷ்-பேக் கதை.


காலையில் தலைமைக் கழக முற்றுகை நிகழ்ச்சியின் போது தொண்டர்களோடு தொண்டராய் நம்மோடு நுழைந்த நம் டிரைவர் மோகன், ‘முழுப்பார்வையையும் நம் மீது செலுத்தியபடி’ நாலைந்தடிகள் தூரத்தில் நம்மைத் தொடர்ந்து கொண்டே வந்தார். கையிலிருந்த Cut Roll-ஐ காலி பண்ணும் சாக்கில் முறையாக கேமராவைக் கூட செட் செய்யாமல் படபடவென்று 26 படங்களை 5 நிமிடங்களில் சுட்டுத்தள்ளி நாம் முதலில் முடித்த காரியமே அதைக் கழற்றி மோகனுக்கு வீசியெறிந்ததுதான். நடந்த ஆக்ரோஷமான சம்பவங்களின் மும்முரத்தில் யாரும் இதைக் கவனிக்கவில்லை. (ஒரே ஒரு சி.ஐ.டி. அதிகாரியைத் தவிர) அடுத்த முக்கால் மணிநேரத்தில் அது மேலும் 3 கைகள் மாறி நம் அலுவலகத்தை அடைந்தது. அடுத்த ரோலை மாற்றி எஸ்.டி.எஸ். தரையில் படுத்து சத்தியாக்கிரகம் செய்யும் காட்சிகள் உட்பட ஏழெட்டு ஃபிரேம்கள் எடுக்க முயன்ற நிலையில் புதிய ஃபிலிம் ரோல் பறிபோனது. அதற்காக சில பிரம்மபிரயத்தன முயற்சிகள் எடுத்தும் பலனளிக்கவில்லை. இழந்த படங்கள், எடுத்த படங்களில் சில அநாகரீகமான காட்சிகளை தவிர்த்துவிட்டு மீதியை வாசகர்களாகிய உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறோம்.

                 

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் நக்கீரனின் பிரத்யேக படங்கள். இதன் காப்புரிமை நக்கீரனிடன் உள்ளது.