ADVERTISEMENT

பல மடங்கு உயர்ந்த சொத்து மதிப்பு! விஜிலன்ஸ் பொறியில் விழுந்த இளங்கோவன்!

04:40 PM Oct 23, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாகவும், சேலம் மாவட்டத்தில் நிழல் முதல்வர் போலவும் பவனி வந்த ஆத்தூர் இளங்கோவன் வீட்டில் அக். 22ல், தமிழக லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தியது, எதிர்க்கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்த புகாரின்பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தினர். சி.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையின் சூடு அடங்காத நிலையில், எடப்பாடி பழனிசாமியின் நிழலாக பார்க்கப்படும் ஆத்தூர் இளங்கோவன் மீது பாய்ந்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (57). சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர். மேலும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்தப் பதவி, அமைச்சருக்கு இணையான அந்தஸ்து உடையது. 2013ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இந்தப் பதவியில் இருந்து வருகிறார்.

இவருடைய மனைவி பானுரேகா. உள்ளூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். இளங்கோவனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன், பிரவீன்குமார் (27). இவர், திருச்சி மாவட்டம் முசிறியில் எம்ஐடி கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் கல்லூரிகளை நடத்தி வருகிறார். சுவாமி அய்யப்பன் எஜூகேஷனல் டிரஸ்டின் துணைத்தலைவராகவும் உள்ளார்.

இளங்கோவன் 1.4.2014 முதல் 31.3.2020ம் ஆண்டு வரை தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தியும், உயர்மட்ட அரசியல் புள்ளிகளுடன் உள்ள தொடர்புகள் மூலமாகவும் தன் பெயரிலும், பினாமிகள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக 3.78 கோடி ரூபாய் சொத்துகளை குவித்ததாக சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் அக். 21ம் தேதி, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதாவது, 131 சதவீதம் கூடுதலாக சொத்துகளை குவித்துள்ளதாக சொல்கிறது லஞ்ச ஒழிப்புத்துறையின் எப்ஐஆர். அந்த குற்றத்தில் இளங்கோவனின் மகன் பிரவீன்குமாரும் உடந்தையாக இருந்ததாக அவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட மறுநாள் (அக். 22) அதிகாலை 6.15 மணிக்கெல்லாம் புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டு முன்பு திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மதியழகன், ஆய்வாளர் மைதிலி ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிந்தனர்.

அந்த சின்ன தெருவின் நடுப்பகுதி வரை வாசலுக்காக ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது இளங்கோவனின் சொகுசு பங்களா. 2400 சதுரடிக்கும் சற்று அதிகமான பரப்பளவில் மொத்தம் மூன்று தளங்கள் கொண்டிருந்தது. அண்டர்கிரவுண்டிலும் ஒரு ரகசிய அறை இருந்தது. வீட்டைச் சுற்றிலும் நான்கு புறத்திலும், ஒவ்வொரு தளத்திலும் ஹெச்டி தரத்திலான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. பிரதான நுழைவு வாயில் கதவு உள்பட எல்லா கதவுகளும் சென்சார் தொழில்நுட்பத்துடன் இருந்ததால், ரிமோட் கன்ட்ரோல் மூலமே திறக்க முடியும். இந்த வீடு ஓராண்டுக்குள்தான் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் சென்றபோது அங்கு இளங்கோவன் இல்லை என்றும், அவர் சென்னையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்திருக்கும் விவரங்கள் அவருக்கு சொல்லப்பட்டதை அடுத்து, உடனடியாக கார் மூலம் சேலம் புறப்பட்டார். மதியம் 12.15 மணியளவில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார் இளங்கோவன். அதன்பிறகே, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் அவருடைய வீட்டில் சோதனையைத் தொடங்கினர். இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவ, அதிமுக தொண்டர்கள், அவருடைய ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

இது ஒருபுறம் இருக்க, இளங்கோவனின் நெருங்கிய ஆதரவாளர்களான அசோக்குமார் என்பவருக்குச் சொந்தமான ஈஸ்வர் ஜூவல்லர்ஸ் நகைக்கடை, அவருடைய வீடு, வரதராஜ் என்பவருக்குச் சொந்தமான நிவேதா எலக்ட்ரிகல்ஸ், ஜெயராமன் என்பவருடைய வீடு, குபேந்திரன் வீடு, இவருக்குச் சொந்தமான கேகே ஜூவல்லர்ஸ் நகைக்கடை, அதிமுக ஆத்தூர் நகர செயலாளர் மோகனின் வீடு, இவருடைய தங்கை உமாசங்கரி வீடு, சதாசிவம் என்பவருக்குச் சொந்தமான சேகோ ஆலை, தம்மம்பட்டி குமரன், இளங்கோவனின் மாமனார் சாம்பமூர்த்தியின் வீடு, இளங்கோவனின் அக்காள் ராஜகுமாரி வீடு, மின்னாம்பள்ளி ராஜராஜசோழன் வீடு, சேலம் மரவனேரியைச் சேர்ந்த ஆடிட்டர் ஜெயபிரகாஷின் வீடு மற்றும் அலுவலகம் என சேலம் மாவட்டத்தில் மட்டும் 23 இடங்களில் சோதனை நடந்தது.

முசிறியில் இளங்கோவனின் மகன் நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சென்னை, கோவை, நாமக்கல் ஆகிய ஊர்களில் உள்ள இளங்கோவனின் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்கள் என சேலம் மாவட்டத்திற்கு வெளியிலும் 13 இடங்களில் சோதனை நடந்துள்ளது. சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில், இளங்கோவனின் வீட்டில் இருந்து பலரும் எதிர்பார்த்ததுபோல் பெரிதாக எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதேநேரம் ஆதரவாளர்கள், பினாமிகள் என்று கருதப்படும் நபர்களின் வீடுகள், கடைகள், அலுவலகங்களில் இருந்து ஏராளமான சொத்துகளும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இந்த சோதனையில், மொத்தம் 29.77 லட்சம் ரூபாய் ரொக்கம், 10 சொகுசு கார்கள், 2 வால்வோ பேருந்துகள், 3 கணினி ஹார்டு டிஸ்க்குகள், 21.20 கிலோ தங்க நகைகள், 282 கிலோ வெள்ளி பொருள்கள், வங்கி டெபாசிட் 68 லட்சம் ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

எம்எல்ஏக்கள் சித்ரா, நல்லதம்பி, ஜெய்சங்கர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுக சட்டப்பணிகள் உறுப்பினர் இன்பதுரை மற்றும் கட்சியினர் இளங்கோவன் வீட்டு முன்பு திரண்டனர். அதிமுக பிரமுகர் தலைவாசல் செந்தில் என்பவர், லஞ்ச ஒழிப்பு சோதனையைக் கண்டித்து திடீரென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அலேக்காக தூக்கி ஓரங்கட்டினர் காவல்துறையினர். மது போதையில் சில அதிமுக தொண்டர்கள் அவ்வப்போது அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். எனினும் பெரிதாக அசம்பாவிதங்கள் நிகழவில்லை.

இளங்கோவன் வீட்டில் இருந்து நள்ளிரவு 12.15 மணியளவில் சோதனையை முடித்து வெளியேறினர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர். அதன்பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த இளங்கோவன், முகம் வெளிறிப்போய் காணப்பட்டார்.

''அம்மா வழியில் வந்த நாங்கள் நேர்மையான முறையில் அரசியல் செய்து வருகிறோம். அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். பொது வாழ்க்கையில் ஈடுபடும்போது இதுபோன்ற சங்கடங்களை எல்லாம் எதிர்கொள்ள வேண்டும். அம்மா மீதே வழக்கு போட்டவர்கள், சாதாரண தொண்டனான என் மீது வழக்குப்போடச் சொல்லியா தர வேண்டும்? முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த அரசு செயல்படுகிறது. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார். அதன் தொடர்ச்சியாக இப்போது என் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். என் வீட்டில் நடந்த சோதனையில் எந்த சொத்துக்களும், ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை,'' என்றார்.

இதற்கிடையே, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இளங்கோவனின் அரசியல் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும், தமிழக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்,'' என்றும் காட்டம் காட்டியிருந்தார்.

அதிமுக பிரமுகர்கள் சிலரோ, இந்த சோதனையை நாங்கள் சில நாள்களுக்கு முன்பே எதிர்பார்த்ததுதான் என்றும் சொல்கிறார்கள்.

லஞ்ச ஒழிப்புத்துறையின் தொடர் அதிரடிகளுக்கு மத்தியில் இலை கட்சியில் இருந்தே வேறு சில பரபரப்பு தகவல்களும் சொல்லப்பட்டன. அதாவது, கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில், முக்கிய விஐபிக்கள் சொத்து சேர்க்கும் பேட்டர்னையே அடியோடு மாற்றிவிட்டார்கள் என்கிறார்கள்.

அதாவது, ஒரு கட்டடமோ, கல்லூரியோ பிடித்திருந்தால் அதை நேரடியாக தன் குடும்பத்தார் அல்லது நெருக்கமான பினாமிகள் பெயரில் கிரையம் செய்யாமல், அந்தந்த சொத்தின் உரிமையாளர்களிடம் சந்தை விலைக்கான பணத்தைக் கொடுத்து ஒப்பந்தப் பத்திரம் மட்டும் எழுதிக் கொள்கிறார்கள். சொத்தின் உரிமையாளர்களே தொடர்ந்து அதை நிர்வாகம் செய்து வருவதுடன், அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை ரொக்கமாக முந்தைய ஆளுங்கட்சியினர் வசூலித்து வந்துள்ளனர். இப்படித்தான் தமிழகத்தின் பல நகரங்களிலும் இலை கட்சி விவிஐபிக்கள் பெரிய பெரிய கல்லூரிகள், நட்சத்திர விடுதிகள், மருத்துவமனைகள், பேருந்துகள் என ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் என்கிறார்கள் கட்சியின் உள் விவகாரங்களை அறிந்த ர.ர.க்கள்.

சில சொத்துகள் மட்டும் பினாமிகள் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால், கடந்த காலங்களில் பத்திரப்பதிவுத்துறையில் நடந்த பெரிய மதிப்பிலான சொத்துகள் குறித்த தரவுகளை சேகரித்துக் கொண்ட பிறகு, லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு தயாராக வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் யோசனை சொல்கிறார்கள்.

தற்போது 'முன்னாள் நிழல்' மீதே கைவைத்துவிட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அடுத்த இலக்கு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியாகக் கூட இருக்கலாம் என்ற யூகங்களும் இறக்கை கட்டி பறக்கத் தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT