ADVERTISEMENT

தி.மு.க.வில் எம்.பி.யை நிறுத்துனா, அதிமுகவில் ஓபிஎஸ் மகன் ஓபிஆரை நிறுத்துவோம்... விளையாட்டில் அரசியல்!

06:25 PM Mar 17, 2020 | Anonymous (not verified)

இந்தியாவிலுள்ள அனைத்து விளையாட்டுகளிலும் அரசியல் புகுந்திருக்கும் நிலையில் இதுவரை அதில் சிக்காமல் இருந்தது கைப்பந்து கழகம். தற்போது கைப்பந்து விளையாட்டிலும் அரசியல் புகுந்துள்ளதால் நொந்துபோயிருக்கிறார்கள் வாலிபால் வீரர்கள்.

தமிழ்நாடு கைப்பந்து விளையாட்டு கழகத்திற்கான தேர்தல் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. தலைவர் மற்றும் அலுவலக நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகம் வந்ததிலிருந்தே, பாரம்பரியமாக விளையாடி வந்த வாலிபால் வீரர்களை ஒழித்துக் கட்டிவிட்டு அரசியலை புகுத்தி வருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன. இது குறித்து தொடர்ச்சியாக நமக்குப் புகார்கள் வரவே, வாலிபால் உலகில் என்ன நடக்கிறது என விசாரித்தோம்.

ADVERTISEMENT



நம்மிடம் மனம் திறந்த நாமக்கல் மாவட்ட கைப்பந்து கழகத்தின் செயலாளர் ராஜா, "தமிழ் நாடு வாலிபால் விளையாட்டு சங்கத்தின் தலைவராக கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இருந்த தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன், வாலிபால் விளையாட்டின் வளர்ச்சிக்கும் பெருமைக்குக்கும் அர்ப்பணிப் போடு உழைத்தவர். வாலிபால் வீரர்கள் பல அரசியல்கட்சிகளின் ஆதரவாளராக இருந்தாலும் விளையாட்டிலும் சங்கத்திலும் அரசியல் புகுந்துவிடாமல் பாதுகாத்த சிவந்தி, சங்கத்தின் விதிப்படி 70 வயதை கடந்தவர்கள் பொறுப்பில் இருக்க முடியாது என்பதால் ஒரு கட்டத்தில் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

ADVERTISEMENT



இதனையடுத்து அவரது மகன் பாலசுப்ரமணிய ஆதித்தனாரை முறைப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் சங்கத்தினர். கடந்த 2010-2014 வரை தலைவராக இருந்த பாலசுப்ரமணியம், அவரது தந்தை சிவந்திஆதித்தன் மறைந்ததையடுத்து பணிச்சுமையின் காரணமாக சங்கத்திலிருந்து விலகிக்கொள்கிறார். அதன்பிறகு, 2014-ல் மாநில தலைவராக வருகிறார் தொழிலதிபர் வாசுதேவன். அவருடைய பதவிக் காலம் 2018-ல் முடிவடைந்த நிலையில், வாலிபால் கழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. அப்போது, ’தேர்தல்னு வந்துட்டா அரசியல் புகுந்துவிடும். அரசியல் நுழைஞ்சிட்டா விளையாட்டின் போக்கு மாறிவிடும். கைப்பந்தை வாழ்நாள் முழுவதும் நேசிக்கும் வீரர்களுக்கு மரியாதை இருக்காது' என பலரும் எடுத்துச் சொன்னபோதும் குறிப்பிட்ட சிலர் அதனை ஏற்க மறுத்தனர்.



இதுபோன்று பல பிரச்சனைகள் அதிகரித்த நிலையில், மாநில தலைவர் உள்பட 13 பதவிகளுக்கான தேர்தல் 2019 ஆகஸ்ட்டில் அறிவிக்கப்பட்டது. தொழிலதிபர் வாசுதேவன் தலைமையில் 13 பேர் கொண்ட ஒரு டீமும், அதனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கௌதம்சிகாமணி தலைமையில் ஒரு டீமும் களத்தில் குதித்தன. இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் மாவட்ட கைப்பந்து விளையாட்டு கழகத்தினர் வாக்களிக்க வேண்டும். ஜெயிக்க வேண்டுமென்பதற்காக அனைத்து அரசியல்களும் அரங்கேறுகின்றன. தேர்தல் முடிவுகளில் கௌதம்சிகாமணி தலைவராகிறார். அவரது டீமும் ஜெயிக்கிறது. இதன் பிறகுதான் பிரச்சனையே.



அதாவது, மாநில கழகத்தின் அங்கீகாரத்தோடு இயங்கி வருகிற ஒவ்வொரு மாவட்ட கழகத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் இருக்கின்றனர். பதவிகளிலுள்ள அனைவருமே வாலிபால் வீரர்கள்தான். சிகாமணி தலைவரானதற்கு பிறகு மாவட்ட கழகத்தை அழிக்கும் நோக்கில் தி.மு.க. கட்சிக்காரர்களைக் கொண்டு போட்டி கழகத்தை உருவாக்குகின்றனர். திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர், மதுரை, செங்கல்பட்டு என பல மாவட்டங்களில், இனி இவர்கள்தான் தலைவர், செயலாளர் என தி.மு.க.காரர்களை நியமித்து வருகிறார்கள். இதனால் அரசியல் சம்பந்தமில்லாத கைப்பந்தை மட்டுமே நேசிக்கும் வீரர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தேசிய அளவிலான வாலிபால் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்திலிருந்து வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டி சமீபத்தில் திருவாரூரில் நடந்தது. இதற்காக, தமிழகம் முழுவதிலுமிருந்து பல டீம்கள் திருவாரூக்கு படையெடுத்தன. ஆனால், எந்தெந்த டீமை அனுமதிக்க வேண்டும் என சிகாமணி தலைமையிலான புதிய நிர்வாகம் உத்தரவிட்டிருந்ததோ அதனை மட்டுமே அனுமதித்தனர். மற்ற டீம்களை கிரவுண்ட் உள்ளேயே அனுமதிக்கவில்லை. அதாவது, அங்கீகரிக்கப்பட்ட பல டீம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மாநில தலைமையால் உருவாக்கப்பட்ட போட்டி சங்கங்களுக்கு மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பைக் கொடுத்தனர். இப்படி பல அக்கப்போர்கள் நடந்துகொண்டிருக்கிறது. கைப்பந்து விளையாட்டில் அரசியல் புகுந்துள்ளதால் கைப்பந்தை நேசிக்கும் வீரர்கள் அழிக்கப்படுவதுடன், கைப்பந்து விளையாட்டை தி.மு.க.வின் ஆதரவு அணியாக மாற்றும் முயற்சிகள் திரைமறைவில் நடந்து வருகின்றன'' என்கிறார் ஆதங்கத்துடன்.

இதுகுறித்து கைப்பந்து மட்டுமல்லாமல் ஹாக்கி, கால்பந்து, பேட்மிட்டன், டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சங்கத்தினரிடம் விசாரித்தபோது, "வாலிபாலில் மட்டும்தான் அரசியல் இல்லாமல் இருந்தது. அதிலும் இப்போ அரசியல் புகுந்திருப்பது அதிர்ச்சிதான். கால்ஸ் டிஸ்டலரிஸ்சின் உரிமையாளர்தான் வாசுதேவன். தி.மு.க. ஆட்சியில் இவருக்கு டிஸ்டலரி லைசன்ஸ் கொடுக்கப்பட்டாலும் வாசுதேவன் அரசியல்வாதி கிடையாது. வாசு தேவனுக்கு எஸ்.என்.ஜே. டிஸ்டலரி உரிமையாளர் ஜெயமுருகன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் வலதுகரமான ராஜாசங்கர் இருவரும் நண்பர்கள். இதன் மூலம் ஸ்டாலினின் அறிமுகம் வாசுதேவனுக்குக் கிடைத்தது. ஒரு கட்டத்தில் தனிப்பட்ட முறையில் ஸ்டாலினை சந்திக்கும் அளவுக்கு நட்பை உருவாக்கிக் கொண்டார் வாசுதேவன். இதனால் நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் முளைத்தன.


இந்தச் சூழலில்தான், வாலிபால் கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து வாசுதேவனை தூக்க அரசியல்ரீதியாக சில முயற்சிகள் நடக்கின்றன. அந்தச் சூழலில்தான் கௌதம்சிகாமணி எம்.பி.யாகிறார். அவரை தலைவராக்க திட்டமிடுகின்றனர். வாலிபால் சங்கத்தில் அரசியல் நுழைவதை கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், ஸ்டாலினை சந்தித்து முறையிடுமாறு வாசுதேவனுக்கு யோசனை சொல்ல, ஸ்டாலினை சந்தித்து விவரிக்கிறார் வாசுதேவன். இதனையடுத்து சிகாமணி, வாசுதேவன் இருவருமே நம்மாளுங்கதான். விளையாட்டில் எதுக்கு அரசியல்? அது என்னான்னு கவனி' என தனக்கு நெருக்கமானவரிடம் ஸ்டாலின் அறிவுறுத்த... அவரும் வாசுதேவனை தொடர்புகொண்டு, "அவர் (சிகாமணி) மக்கள் பிரதிநிதி. மனுத்தாக்கலும் பண்ணிட்டாரு. மனுவை வாபஸ் வாங்கச் சொன்னா அது நல்லாயிருக்காது'’என சொல்லிவிடுகிறார். அதன்பிறகு, அமைதியாகிவிடுகிறார் வாசுதேவன். இதனையெல்லாம் அறிந்து நொந்துபோன அ.தி.மு.க. ஆதரவு வீரர்கள், தி.மு.க.வில் ஒரு எம்.பி.யை நிறுத்தறாங்கன்னா அ.தி.மு.க.வில் இருக்கும் ஒரே எம்.பி.யான ஓ.பி.எஸ். மகன் ஓ.பி.ஆரை நிறுத்துவோம்னு சிலர் ஆவேசப்பட, போட்டி அரசியல் வேண்டாம் என பலரும் சொல்லியதால் அந்த யோசனையை கைவிட்டனர்.

தேர்தல் விறுவிறுப்பாகிறது. சிகாமணியின் வெற்றிக்கான செலவுகளையெல்லாம் ஜெயமுருகன் கவனித் துக்கொள்ள, தி.மு.க. மா.செ.க்களிடம் தனிப்பட்ட முறையில் முயற்சிகளை எடுக்கிறார் தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவர். இதனால் தி.மு.க. கட்சியும் பல மாவட்டங்களில் களமிறங்க, வாலிபால் கழகத்தின் தேர்தல் முழுமைக்கும் அரசியலாகிறது.

தி.மு.க., அ.தி.மு.க. என வீரர்கள் பிரிந்து நிற்க, சாதி ரீதியி லான அணுகுமுறைகளும் பல மாவட்டங்களில் வெடிக்கிறது. தேர்தலில் 15 வாக்குகள் வித்தியாசத்தில் சிகாமணி டீம் ஜெயிக்கிறது. வெற்றிக்குப் பிறகு நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, திருவண்ணாமலை, மதுரை என மாவட்ட வாலிபால் சங்கத்தை உடைக்கிறாங்க. வாலிபாலுக்கு சம்பந்தமே இல்லாத தி.மு.க. கட்சிக்காரர்களை உள்ளே நுழைத்து புதிய சங்கத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் தற்போது வேக மெடுத்துள்ளன. இதன் போக்கு ஆபத்தானது'' என நடந்துள்ள அரசியல் பின்னணிகளை பலரும் விவரித்தனர்.

இதற்கிடையே, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 நிர்வாகிகளைத் தவிர தலைமைப் புரவலர் மற்றும் வாழ்நாள் தலைவர் என சில நியமன கௌரவப் பதவிகளும் உண்டு. அந்த வகையில், தலைமைப் புரவலராக எஸ்.என்.ஜே. டிஸ்ட்லரி அதிபர் ஜெயமுருகனும், வாழ்நாள் தலைவராக அர்ஜுன் துரையும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தேர்தல் குறித்து முன்னாள் தலைவர் வாசுதேவனை தொடர்புகொண்டு கேட்டபோது, கருத்துச் சொல்ல மறுத்து விட்டார். கௌதம்சிகாமணியிடம் கேட்டபோது, ""சிவந்தி ஆதித் தன் தலைவராக இருந்தபோதே நிர்வாகக் குழுவில் இருந்தவன் நான். தேர்தல் வந்தது. போட்டியிட்டேன். எங்கள் டீம் ஜெயித்திருக்கிறது. எங்கள் சங்கத்தில் எந்த அரசியலும் இல்லை. நாமக்கல், மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட 4, 5 மாவட் டங்களில்தான் சின்னச் சின்ன பிரச்சனைகள் இருக்கின்றன. தலைமையிலிருந்து சென்ற ஒரு குழு அவர்களுடன் பேசி சுமுக முடிவை எடுத்து வருகிறது. எந்த ஒரு மாவட்டத்திலும் புதிய சங்கத்தை உருவாக்கவில்லை; உருவாக்கு வதற்கான தேவையுமில்லை; அரசியல் கலப்பதாகச் சொல்வதில் உண்மையுமில்லை’’ என்கிறார் அழுத்தமாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT