ADVERTISEMENT

''நான் உங்கள் விசுவாசிதான்...'' இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். சசிகலாவுக்கு தூது!

09:40 PM Aug 18, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

அ.தி.மு.க.வில் யார் முதல்வர் வேட்பாளர் என அமைச்சர்களுக்குள் புதிய சண்டை ஆரம்பித்திருக்கிறது. எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது நானே முதல்வர் வேட்பாளர் என்று சொல்லவில்லையே, ஜெயலலிதாவைக்கூட மக்கள்தான் முதலமைச்சராக வேண்டுமென வலியுறுத்தினார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள்கூடி யாரை முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறார்களோ, அவரே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதற்கு மறுநாளே, "எடப்பாடியாரே என்றும் முதல்வர், இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தைச் சந்திப்போம்' என்று ராஜேந்திர பாலாஜி ட்விட்டரில் பதிவு செய்தார்.

இந்த இரண்டிற்கும் வலுவான அரசியல் பின்னணி உள்ளது என அ.தி.மு.க. உள்விவகாரங்களை விவரிக்கின்றனர் ஆளும் கட்சியினர்.

சசிகலா தைப்பொங்கலில் விடுதலையாகி சுதந்திரப் பறவையாக போயஸ் கார்டனில் அவர் புதிதாகக் கட்டி வரும் வீட்டில் குடியமர்வார் என அவர்தரப்பில் எதிர்பார்க்கிறார்கள். சசிகலாவின் வருகை பெரிய அரசியல் மாற்றங்களை உருவாக்கும் என்றும், சசிகலாவின் சாய்ஸ்தான் தமிழக முதல்வராக நீடிக்க முடியும் என்பதால், யார் முதல்வர் வேட்பாளர் என்கிற சர்ச்சை கொடிகட்டி பறக்கிறது.

சசிகலா சிறைக்குச் செல்லும் முன்பு மன்னார்குடி வகையறாக்கள்தான் கட்சியின் அனைத்து முடிவுகளையும் தீர்மானித்தார்கள். ஆனால் கட்சிக்குத் தலைவராக ஜெ. இருந்ததால் கட்சியின் அனைத்து விவகாரங்களும் சசிகலாவின் கையில் இருந்தாலும் அ.தி.மு.க. முக்குலத்தோர் கட்சியாக அறியப்படவில்லை. மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தைவிட ஒரே முறை பதவியேற்று அவரைவிட மூன்று மடங்கு அதிக நாட்களாக பதவியில் நீடிக்கும் எடப்பாடி அ.தி.மு.க.வை கொங்கு கட்சியாக கொண்டு வந்துவிட்டார். சசிகலா வெளியே வந்தால் மீண்டும் அது முக்குலத்தோர் கட்சியாக உருவெடுக்கும் என்கிற சிந்தனை அ.தி.மு.க.வினரிடம் வந்துவிட்டது.

ஆண்டிப்பட்டி அடங்கிய தேனி மாவட்டத்தில் இருக்கும் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் எடப்பாடியை ஏற்கவில்லை. மற்ற தென் மாவட்டங்களிலும் முக்குலத்தோர் சமுதாய மக்கள் எடப்பாடியை கொங்கு இனத் தலைவராகவே பார்க்கிறார்கள். இந்த இமேஜை உடைப்பதற்கு எடப்பாடி தென் மாவட்டங்களில் சமீபகாலமாக தீவிரமாகச் சுற்றுப் பயணம் செய்கிறார். ஆனாலும் அவரை ஜெ.வைப் போல அனைத்துச் சமுதாயத்தைச் சார்ந்த அ.தி.மு.க.வினரால் தலைவராக ஏற்றுக்கொள்ள வைக்க முடியவில்லை. இந்த நிலையில் சசிகலா வந்தால் என்ன செய்வார்? அவர் ஓ.பி.எஸ்.ஸை முதல்வராக கொண்டு வருவாரா? அல்லது இ.பி.எஸ்.ஸை முதல்வராக தொடரச் செய்வாரா? இரண்டு பேரும் வேண்டாம். செங்கோட்டையன் போன்ற சீனியர் கட்சித் தலைவர் ஒருவரிடம் முதல்வர் பதவியை ஒப்படைப்பாரா? என்கிற கேள்வி வலுவாக எழுந்துள்ளது. அதனால்தான் முக்குலத்தோரான செல்லூர் ராஜு, எடப்பாடி முதல்வர் என அறிவிக்காமல் யார் முதல்வர் என அ.தி.மு.க. வெற்றிபெற்ற பின் தெர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தீர்மானிப்பார்கள் எனச் சொல்கிறார்.

அதற்கு விஸ்வகர்மா சமுதாயத்தின் தென்மாவட்ட மந்திரியான ராஜேந்திர பாலாஜியை வைத்து எடப்பாடி பதிலளிக்க வைக்கிறார் என்கிறார்கள். இந்த இரண்டு அமைச்சர்களும் பேசுவதைக் கேட்டு டென்ஷனான ஓ.பி.எஸ்., இருவரையும் கூப்பிட்டு தேவையில்லாமல் பேசாதீர்கள் என எச்சரித்துள்ளார். ஆனால் அதற்கு பிறகு பேசிய ஜெயக்குமார், செல்லூர்ராஜு சொன்னது சரி என்பதுபோல பேசி குழப்பத்தை அதிகப்படுத்தியிருக்கிறார்.

சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்கும் நபர்களிடம் தொடர்பு கொண்டு, நான் சின்னம்மாவை கேட்டதாகச் சொல்லுங்கள் எனச் சொல்லும் அ.தி.மு.க.வினரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் சசிகலாவிடம் சரணடைந்துவிட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் என வகுப்புவாரியாக சசிகலாவிடம் தங்களது ஆதரவை அவரது சொந்த பந்தங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

சசிகலாவுக்கு கிடைக்கும் ஆதரவினால் அவர் ஜானகி போல அரசியலில் இருந்து ஒதுங்க மாட்டார். அவரது விடுதலைக்குப் பிறகு, அவர் இல்லாமல் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்காது என்கிற நிலைமை அ.தி.மு.க.வில் உள்ளது என்பதை உணர்ந்து, ஓ.பி.எஸ். சசிகலாவிடம் சரண்டராகிவிட்டார். "அம்மா, நீங்கள் சொன்ன ஒரே காரணத்திற்காகத்தான் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன். நீங்கள் முதல்வராவதற்கு எந்தத் தடையும் என்னால் ஏற்படவில்லை. அதன்பிறகு நான் தர்மயுத்தம் நடத்தியது, அம்மாவின் மரணத்தில் சந்தேகம் எனச் சொன்னது எல்லாம் பா.ஜ.க.வினர் சொல்லித்தான். இன்றும் நான் உங்கள் விசுவாசிதான்'' என ஓ.பி.எஸ். சசிகலாவிற்கு தனது நிலையை எடுத்துச் சொல்லியுள்ளார். அ.தி.மு.க. இன்று இருக்கும் நிலைக்கு காரணம் டி.டி.வி. தினகரன் போன்றவர்களின் செல்பாடுகள்தான். கடைசியாக தஞ்சாவூரில் மேடை போட்டு பேசிய நடராஜன், ஓ.பி.எஸ். முதல்வராக தொடர வேண்டும் என்றுதான் கூறினார் என தனது விசுவாசத்தை ஓ.பி.எஸ். தெரிவித்திருக்கிறார்.

இ.பி.எஸ்.ஸோ, "அம்மா இது நீங்கள் கொடுத்த பதவி. நீங்கள்தான் என்னை முதலமைச்சராக்கினீர்கள். நான் உங்கள் விசுவாசியாக என்றும் பணிபுரிவேன்'' என தனது விசுவாசத்தை சசிகலாவிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் சசிகலா முதல்கட்டமாக தினகரனை எதுவும் பேசக்கூடாது என டம்மியாக்கிவிட்டார். தமிழகம் முழுவதும் எந்தச் செயல்பாடுகளும் இல்லாமல் தினகரனின் அ.ம.மு.க. சைலண்ட்டாக இருப்பது சசிகலா அ.தி.மு.க.விற்கு கொடுத்த சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 4 வருடம் எடப்பாடி முதல்வராக இருந்துவிட்டார். ஆட்சிபோனால் முதல்வர் பதவி போய்விடும். ஆனால் ஓ.பி.எஸ். வகிக்கும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி, பலமிக்கதாகிவிடும். இணை ஒருங்கிணைப்பாளரான இ.பி.எஸ்.ஸின் அதிகாரம் அவர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் காணாமல் போய்விடும். எனவே ஓ.பி.எஸ்.ஸை முதல்வராக்கினால் என்ன என்கிற சிந்தனை சசிகலா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

"எடப்பாடியும் வேண்டாம், ஓ.பி.எஸ்.ஸூம் வேண்டாம். புதிதாக ஒருவரை ஜனவரி மாதத்தில் இருந்து முதல்வராக்குவோம் என ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இருவரின் எதிர்ப்பாளர்களும் சசிகலாவிடம் பேசி வருகிறார்கள். ஓ.பி.எஸ்.ஸை முதல்வராக்கினால் பா.ஜ.க. அதனை ஆதரிக்கும் என்பதினால் ஓ.பி.எஸ்.ஸின் கை ஓங்கியிருக்கிறது என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள். ஆனால் பா.ஜ.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்குமா என்பதே சந்தேகம்தான்'' என்கிறார் ஒரு சீனியர் அமைச்சர்.

பா.ஜ.க. என்ன செய்தாலும் அ.தி.மு.க. வெற்றிபெறாது. தி.மு.க. ஆட்சி அமைப்பதைத் தடுக்க வேண்டும் என்றால், சென்றமுறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போன்ற மூன்றாவது அணியை அமைக்காவிட்டால் தி.மு.க. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும் என்கிற சிந்தனை பா.ஜ.க. வட்டாரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்காக விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், ராமதாஸ் மகன் அன்புமணி மற்றும் ரஜினி ஆகியோரின் கூட்டணிக்காக குருமூர்த்தி பேசி வருகிறார்.

"அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளைப் பெரிய அளவுக்கு உடைத்து அதிலிருந்து ஆட்களைப் பொறுக்கி பா.ஜ.க.வை வலிமையான கட்சியாக மாற்றி வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை ரஜினியின் மூலம் பிடித்து வெற்றி பெறலாம். அதன் பிறகு தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக பா.ஜ.க. மாறும் என்பது அதன் தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவின் கணக்கு'' என்கிறார் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சீனியர் அமைச்சர்.

ஜெகத்ரட்சகன் போன்றவர்களிடம் அமித்ஷாவும், நரேந்திர மோடியும் தி.மு.க.வை உடைப்பதற்காகத்தான் பேசுகிறார்கள். ஜெகத் மீதான வழக்குகளைக் கிடப்பில் போட்டால் ஜெகத் உறுதியாக பா.ஜ.க. பக்கம் சென்றுவிடுவார். தி.மு.க. புள்ளிகளிலேயே நிறைய பணம் வைத்திருக்கும் ஜெகத் கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க.வுக்கு செலவு செய்வதைவிட மொத்தமாக பா.ஜ.க. பக்கம் போய்விட்டால் செலவு மிச்சம். வழக்கும் இல்லை என ஜக்கி வாசுதேவ் சொன்ன யோசனையை தீவிரமாக பரிசீலித்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் டெல்லியில் உள்ள பா.ஜ.க.வினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT