SALEM DISTRICT, YOUTH INCIDENT POLICE INVESTIGATION

Advertisment

சங்ககிரி அருகே, போக்சோ வழக்கில் காவல்துறையினர் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் வாலிபர், எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் கூத்தாடிபாளையத்தைச் சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் தமிழ்ச்செல்வன் (வயது 23). கூலித்தொழிலாளி. உள்ளூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பெற்றோர் இல்லாதபோது தன் வீட்டிற்கும் அழைத்துச் சென்றுள்ளார்.

மகளை காணாமல் தேடிய சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து சங்ககிரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் தமிழ்ச்செல்வன் தன் மகளை கடத்திச்சென்று விட்டதாகக் கூறியிருந்தனர். விசாரணையில் அவர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, தன் வீட்டிற்குக் கடத்திச் சென்றிருப்பது உறுதியானது.

Advertisment

இதையடுத்து, தமிழ்ச்செல்வன் மீது போக்சோ சிறப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறையினர் தன்னைக் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்துக் குடித்துவிட்டார்.

வீட்டில் மயங்கிக் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.