ADVERTISEMENT

சமூகநீதி அரசியலை பேசிய 2021 சினிமாக்கள்!

06:31 PM Dec 31, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நூற்றாண்டு கால தமிழ்சினிமா ஆதிக்கங்களின் பின்புலத்தில் நின்றே பெரும்பாலும் கதைகளை சொல்லி பழகிவிட்டதாலோ என்னவோ, ஒடுக்கப்படுபவர்களைப் பற்றிய வாழ்வியல், பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் என்பன பெரிதாக வெள்ளித்திரைக்குள் கொண்டுவரப்படவே இல்லை. ஆனால், சமீபகால தமிழ்சினிமா ஆதிக்கங்களுக்குள் ஆட்பட்டு அடங்கியிருந்தவர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் ஆரோக்கியமான வகையில் பேச தொடங்கியுள்ளது. அவர்களது கொண்டாட்டங்களையும் காதலையும் துயரையும் வழக்கத்தை விட ஆழமாகவும் அதிகமாகவும் பேசுகிறது.

ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றி பேசும் படங்கள் என்றால் "அது என்னவோ அழுகாச்சி படங்களாகவே இருக்கும்" என்ற வட்டத்திற்குள் சுருங்காமல், அங்கேயும் காதல், காமம், துரோகம், அழுகை, புரட்சி, சிரிப்பு என எந்த வகை ஜனரஞ்சகத்திற்கும் குறையில்லை என்பதை உலகுக்கு கூறுவது போல் 2021-ல் வெளியாகின ஓரு சில சினிமாக்கள்.

கரோனா இரண்டாம் அலை ஊரடங்கிற்கு பிறகு திரையரங்கிற்கு மக்கள் வருவார்களா என்ற கேள்வி எழுந்த போது திரையரங்கிற்கு மக்களை வர வைத்த படம் கர்ணன்



கர்ணன்

அசுரன் திரைப்பட வெற்றிக்குப் பிறகு தனுஷின் சமூகநீதி படங்களின் மற்றுமொரு தேர்வாக இருந்தது கர்ணன்; பரியேறும் பெருமாளின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மாரிசெல்வராஜின் இரண்டாம் படம் கர்ணன் என்பதும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது.

ஒரு காலத்தில் படத்தின் சிறு முன்னோட்ட காட்சி என்று டிரைலரை மட்டுமே வெளியிட்டு எதிர்பார்ப்பை கிளப்பி மக்களை படத்திற்கு வர வைத்தனர். ஆனால், இப்போதெல்லாம் போஸ்டரிலிருந்தே ஒவ்வொன்றுக்கும் மெனக்கெட்டு, அவற்றை வெளியிடுவதற்கு படக்குழு ஒருநாளை திட்டமிட்டு குறித்து வெளியிட்டு வைரல் செய்யப்படுகிறது.

அந்த வகையில் கர்ணன் படத்திற்காக போடப்பட்டிருந்த கிராமத்து செட்டும் அதன் பிண்ணனியில் ஒலித்த நையாண்டி மேளத்தின் இசையுடன் கூடிய டைட்டில் மேக்கிங் வீடியோவும் படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியதில் மற்றொரு பங்கும் வகிக்கிறது. நீதி சூரியனைப் போல் முளைத்து எழக்கூடியது என்ற வாசகத்துடன் தனுஷ் கையில் வாளேந்தி நின்ற டீசரும் ட்ரெண்டிங்கில் வந்து நின்றது. கண்டாவரச் சொல்லுங்க பாடல், என் ஆளு பண்டாரத்தி பாடல் என ஒவ்வொரு பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க, படமும் வெளியானது.

ஆரம்பம் மெதுவாகச் செல்கிற படம் ஒரு கட்டத்திற்கு பிறகு விறு விறுப்பை கிளப்பி கதையின் நாயகனாக தனுஷ் என்னும் கலைஞன் அசத்தியிருந்தான். ஒரு கிராமத்திற்கு பேருந்து நிறுத்தம் இல்லாமல் இருக்கிறது அதை கிராம மக்கள் எப்படி கையாளுகிறார்கள் என்கிற மையக்கருவை சுமக்கிற கதை; நிற்காமல் போனதால் பேருந்து அடித்து உடைக்கப்படுகிறது, அந்த வன்முறையை கையாள வருகிற காவல்துறை அதிகாரியின் ஈகோவால் என்னெவெல்லாம் நடக்கிறது என்கிற திரைக்கதையில் மாற்றம் அடைந்து படம் நிறைவடைகிறது.

சில உண்மை சம்பவங்களின் அடிப்பிடையில் புனையப்பட்ட கதை என்றாலும், படத்தில் குறிப்பிடப்பட்ட காலகட்டமும், உண்மையில் பிரச்சனை நடந்த காலகட்டமும் வேறாக இருந்ததால் விமர்சனங்களை சந்தித்தது. 'பண்டாரத்தி' பாடலும் விமர்சனத்திற்கு ஆட்பட்டதால் 'மஞ்சனத்தி' என மாற்றப்பட்டது.

வசனங்களாலும், காட்சி அமைப்பாலும் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்த கர்ணன். 2021 திரைப்படவரிசையில் முக்கிய சமூகநீதிப் படமாக நிற்கிறது.



சார்பட்டா பரம்பரை




இயக்குநர் ரஞ்சித்தின் முந்தைய சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அப்படங்களின் வசூல் மற்றும் அவை ஏற்படுத்திய விவாதங்கள் காரணமாக 'சார்பட்டா பரம்பரை' படத்தின் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

படம் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தபோது, ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. பெரிய திரையில் படத்தை பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளித்தாலும், படம் ஓடிடி தளங்கில் பார்க்கப்பட்டே சமூகவலைதளங்களில் பெரிய பேசுபொருளானது.

வடசென்னையில் இரண்டு குத்துசண்டை பரம்பரைகளுக்கிடையேயான போட்டியே இப்படத்தின் மையக்கரு; அந்த பரம்பரைகளுக்குள் ஒடுக்கப்பட்டிருந்த இளைஞனின் வாழ்க்கையை மையப்படுத்தியும் கதை நகரும். ஆர்யாவிற்கு இப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பெரிய வெற்றியை ஈட்டி தந்தது. படம் எழுபதுகள் காலகட்ட பின்னணியில் நடப்பதால், அக்காலத்திய அரசியல், திராவிட கட்சிகளின் வளர்ச்சி, ஆட்சி மாற்றம் குறித்த விவரங்களும் பெரிய பேசுபொருளாக இருந்தது.

கதையின் நாயகன் ஆர்யா தோல்விகளை சந்திப்பது, பின்னர் அதிலிருந்து மீண்டு வருவது என சற்று தொய்வான திரைக்கதை போன்ற உணர்வை தந்தாலும், நாயகனின் வெற்றி என்பது தோல்வியை சந்தித்த ஒவ்வொருவருக்கும் ஒரு வகை புத்துணர்ச்சியை அளிக்கும் வகையில் அமைந்தது படத்திற்கு கூடுதல் பலம்.

இப்படத்தில் வாத்தியாரை சிஷ்யன் சைக்கிளில் ஏத்தி சென்றுகொண்டே பேசும் காட்சி சமூகவலைதளங்களில் நீண்ட நாட்கள் மீம்ஸ்களாகவும் உலா வந்தன.







ஜெய்பீம்

ஓடிடி தளத்தில் வெளியான இந்த வருடத்தின் மற்றுமொரு முக்கிய படைப்பு ஜெய்பீம். ஒடுக்கப்படுபவர்களிலும் ஒடுக்கப்படுபவர்களாக இருக்கிற இருளர் இன மக்களைப் பற்றிய படங்களில் ஜனரஞ்சக கலைஞர்கள் நடித்து வெளிவரும் போது அது கவனிக்கத்தக்க விசயமாகவும் முக்கியமான படமாகவும் மாறிப்போகிறது. அந்த வகையில், ஞானவேல் இயக்கி சூர்யா நடித்து தயாரித்த இப்படம் பெரிய வெற்றியையும் சர்ச்சையையும் ஒருங்கே ஏற்படுத்தியிருந்தது.

ஒரு கல் வீடு கட்டி மனைவியை குடி வைப்பதை வாழ்நாள் ஆசையாக கொண்ட இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் ஒரு திருட்டு வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டு அது அவரின் மரணத்தில் முடிகிறது; கணவனின் மரணத்திற்கு நீதி வேண்டி போராடும் மனைவி என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொண்டார் என்பதே படத்தின் மையக்கரு.

சமூகநீதி பேசும் படங்களை மக்கள் ஒருபோதும் கொண்டாட தவறுவதில்லை என்பதை காட்டும்வகையில், இப்படத்தையும் ஆதரவு கரம் நீட்டி வாஞ்சையோடு அரவணைத்துக்கொண்டது பார்வையாளர் கூட்டம். அதே சமயத்தில், இப்படத்தில் இடம்பெற்ற ஒரு காலண்டரும், காவல்துறை அதிகாரியின் பெயரும் சாதிய குறியீடுகளாக உள்ளன என்கிற வாதம் சர்ச்சையை கிளப்பியது. படத்திற்கு ஆதரவு கருத்துகளும் எதிர்ப்பு கருத்துக்களும் வலுத்து, சமூக வலைதளங்கள் விவாதங்களாலும், பதிலடிகளாலும் நிரம்பின.

இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகளையும், வாக்குரிமை அடையாள அட்டைகளையும் வழங்கியது உட்பட பல்வேறு நலத்திட்டங்களை அரசே முன்னின்று துரிதமாக செய்யுமளவுக்கு சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை இப்படம் ஏற்படுத்தியது என்பது மறுக்கமுடியாது.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் கதை உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது என்பதால், பல ஆண்டுகளுக்கு முன்பு இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டு தற்போதும் ஏழ்மையில் உழன்றுவரும் பார்வதிக்கு தயாரிப்பு தரப்பு உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் குவிந்ததும் இவ்வாண்டின் மறக்க முடியாத சில நிகழ்வுகளில் ஒன்றாகிப்போனது.











மண்டேலா

ஒரு படம் சத்தமில்லாமல் வந்து பார்வையாளர்களிடம் பேசுபொருளாகி; பின்னர் அதிக பார்வையாளர்களையும் ரசிகர்களையும் ஈர்த்தது என்றால் அப்படம் மண்டேலா தான். யோகிபாபு கதையின் நாயகனாக வாழ்ந்திருப்பார்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இருவருக்கு வெற்றிக்கு ஒரு ஒட்டு தேவைப்படுகிறது. அந்த ஒரு ஓட்டை வைத்திருப்பவரை எப்படியெல்லாம் அவர்கள் ஈர்க்க திட்டமிடுகிறார்கள் என்பதையும் அந்த ஓட்டை வைத்துள்ளவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வகையில் படமாக்கியிருப்பர் இயக்குநர். ப்ளாக் ஹியூமர் வகை படமாக போய் கொண்டிருக்கும் திரைக்கதை சில இடங்களில் செண்டிமெண்டாலும் சில இடங்களில் சமூக கட்டமைப்புகளை நோக்கிய கேள்விகளாலும் பார்ப்போரை திணறடிக்கும்.

அரசியல்வாதியை ஒரு ஓட்டு என்னவெல்லாம் செய்ய வைக்க முடியும் என்பதையும், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும் உரிமை மறுப்புகளையும் எவ்வாறெல்லாம் செய்ய வைக்கலாம் என்பதையும் காட்சிப்படுத்திய விதம் படத்தை சுவாரசியமாக நகர்த்தியது.

ஆனாலும் தமிழ்நாட்டில் மறைந்த தலைவரை மறைமுகமாக கிண்டலடிக்கிறது என்று சமுகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டாலும் படத்தை பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் அவற்றை காணாமல்போக செய்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது



லாபம்

இயக்குநர் ஜனநாதன் மறைவிற்கு பிறகு அவரது இயக்கத்தில் வெளியான படம் லாபம். ஏற்கனவே வெளியான ஜனநாதனின் படங்களில் பேசப்பட்ட முற்போக்கு விசயங்கள் இதிலும் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விஜய் சேதுபதி நடித்து விவசாயிகளின் பிரச்சனையை மையக்கருவாக கொண்டுள்ள இப்படம் திரைக்கதையாக பல்வேறு வகையில் தொய்டைந்துபோனதால் தோல்வி படங்களின் பட்டியலில் இணைந்தது.ஆனாலும், கார்ப்பரேட்டுகளின் கொள்ளை, விவசாயப்புரட்சி என படம் சொல்ல முனைந்த விஷயங்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்றன. ஆழமான கதை சுவாரசியமாக சொல்லப்படாமல் போனது இப்படத்தை வசூல் ரீதியாக தோல்விப்படமாக்கியது.

தி கிரேட் இண்டியன் கிச்சன்

தமிழில் சமூகநீதி அரசியலை பேசும் படங்கள் வந்த அதே சமயத்தில் அதுமாதிரியான படங்களுக்கு எல்லாம் முன்னோடியான மலையாள தேசத்தில் இந்த வருடம் அமைதியாய் வந்து பெரிய அளவில் பேசுபொருளான படம் 'தி கிரேட் இண்டியன் கிச்சன்'.

திருமணமான வீட்டிற்கு போய் அங்கே தன் வாழ்க்கை முழுவதையுமே அந்த குடும்பத்திற்காகவே செலவிடும் ஒரு பெண் ஒரு சமயத்தில் கொந்தளித்து வெடிப்பதே படத்தின் மையக்கரு.

உணவு விஷயத்திலும் உடை விஷயத்திலும் உடலுறவு விஷயத்திலும் எப்போதுமே அடிப்படைவாதத்தை பின்பற்றும் ஆண்களுக்கு இப்படம் மனதின் ஓரம் ஒரு மெல்லிய குற்ற உணர்ச்சியை கட்டாயம் ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்பதே இப்படத்தின் வெற்றி.

அந்த அளவுக்கு இப்படம் குறைந்த கதாபாத்திரங்களையும் குறைவான பொருட்செலவிலும் உருவாகி பெரிய பேசுபொருளை அமைதியாய் பேசியதும் பாராட்டுக்குரியது என்பதால் சமூகநீதி படங்களின் வரிசையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இணைகிறது 'தி கிரேட் இண்டியன் கிச்சன்'.

நாயாட்டு

மூன்று காவலர்கள் குற்ற செயலில் சிக்க வைக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு பின்னர் அது தற்கொலையை நோக்கி நகர்த்துவது போன்ற பெரிதும் பேசப்படாத கதைக்களத்தை பேசியிருந்தது மலையாள படமான நாயாட்டு.

காவல்துறை அதிகாரி ஒரு கொலை வழக்கில் சிக்கவைக்கப்பட்டு காவல்துறையாலேயே தேடப்பட்டு பின்பு கைது செய்ய வரும் சூழலில் தற்கொலை செய்து கொள்கிறார். அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் இடையே சிக்கிக்கொண்ட மூன்று காவலர்கள் தங்களை காப்பற்றிக்கொள்ள போராடும் ஒரு கதை என்றாலும், அதனை அணுகியிருந்தகோணம் படத்தை சமூகவலைதளங்களில் பெரும் பேசுபொருளாக வைத்தது.

இந்த படம் ஒடுக்கப்படுபவர்களின் அரசியலில் நிலவும் சட்டரீதியிலான சில சிக்கல்களை பேசியிருப்பதோடு, சாதாரணமாக தெருக்களில் நம்மை கடந்துசெல்லக்கூடிய சாமானிய காவலர் ஒருவர் அந்த சிக்கல்களை கையாள முடியாத நிலைக்கு தள்ளப்படும் அரசியலையும் பேசியிருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த இப்படம் இவ்வாண்டு மலையாள திரையுலகின் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சினிமா.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT