ADVERTISEMENT

இந்த வாரம் வந்த படங்களில் இதுதான் டார்க் ஹார்ஸ்! வெள்ளைப் பூக்கள் - விமர்சனம்

11:49 AM Apr 22, 2019 | santhoshkumar

கொலைகாரர்கள் மனஓட்டத்தில் இருந்து கொலைகளை அணுகி, அவர்களை பிடிக்கும் புலனாய்வு அதிகாரி ருத்ரன். காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றபின், மூன்று வருடங்கள் தான் பேசாமல் இருக்கும் தன் மகனைக் காண அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரத்திற்குச் செல்கிறார். மருமகள் அமெரிக்கப் பெண். அன்பாய் பழக வரும் அவளிடமிருந்து ஒதுங்கியே இருக்கிறார் ருத்ரன். அவர்கள் வசிக்கும் பகுதியில் மர்மமான முறையில் சிலர் காணாமல் போக, மீண்டும் ருத்ரனுக்குள் இருந்த காவல்துறை அதிகாரி கண்விழிக்கிறார். அந்த வழக்கை தனியே துப்பறியத் துவங்குகிறார் ருத்ரன். ஆனால் அந்த வழக்கிற்கு சம்பந்தமானவர்கள் அடுத்தடுத்து காணாமல் போக, புதிர் முற்றுகிறது. என்ன நடக்கிறது என்பதை ருத்ரன் ஓரளவு கண்டுபிடிக்கத் துவங்கும்போது வழக்கில் மிகப்பெரிய முடிச்சு விழுகிறது. இடையே ஒரு சிறு பெண்ணையும் அவள் தாயையும் கட்டிவைத்து பாலியல் வன்கொடுமை செய்துகொண்டிருக்கிறான் ஒருவன். குழந்தைகளை கடத்தி மற்றவர்களுக்கு விற்கவும் செய்கிறான். ருத்ரன் துப்பறியும் முடிச்சு இந்த கொடூரனில் வந்து நிற்கிறது. இரண்டு கதைகளும் இணையும் தருணத்தில், அந்த முடிச்சுகளை ருத்ரன் அவிழ்த்தாரா என்பதே வெள்ளைப்பூக்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இத்தனை வருடங்கள் நகைச்சுவை பாத்திரங்களில் மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட விவேக்கை ஒரு மிடுக்கான போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் பார்ப்பதற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஆனால் வழக்கமான சண்டை அடிதடி என்று இறங்காமல், புத்தியை உபயோகப்படுத்தி வழக்கை முடிக்கும் அதிகாரியாக அந்தப் பாத்திரத்தை வடிவமைத்ததும், கிட்டத்தட்ட முழு படத்திலுமே கூட விவேக்கிற்கு போலீஸ் உடை அணிவிக்காமல் இயல்பான உடையில் உலவவிட்டதும் அந்த பாத்திரத்தில் விவேக்கை நெருக்கமாக பொருத்திப் பார்க்க உதவுகிறது. ஆனால் நடிப்பைப் பொறுத்தவரை, எந்தவித சின்ன குறையும் இல்லாமல் முழுமையாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் விவேக். அவருக்கேயுரிய இயல்பான நகைச்சுவைகளாகட்டும், போலீஸ் மூளையுடன் தன் மனதிற்குள் ஒரு செட் போட்டு சம்பந்தபட்டவர்களை விசாரிப்பதாகட்டும், பாசமுள்ள தந்தையாக உடைந்து அழுவதாகட்டும் விவேக் அனைத்து பரிமாணங்களிலும் நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். விவேக்கின் மகன், வெளிநாட்டு மருமகள், சார்லி, போலீஸ் அதிகாரிகள் என மற்ற கதாப்பாத்திரங்களில் விவேக்கின் மகனுக்கும் மருமகளுக்கும் மட்டும்தான் வெவ்வேறுபட்ட நடிப்பை வழங்கும் வாய்ப்பு. அதை சிறப்பாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

வெள்ளைப்பூக்கள் எனும் பெயர் வெவ்வேறு பரிமாணங்களில் இப்படத்திற்கு பொருந்துகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை குறிக்கும் பொருட்டு, அது எல்லாம் நீங்கி அமைதி வேண்டும் எனும் பொருட்டு, படத்தில் வரும் கடத்தல்களின் முக்கியத் தடமாகவும் இந்த வெள்ளைப்பூக்களே (Dandelions) இருக்கின்றன. குற்றவாளிகளின் மனதிற்குள் சென்று, குற்றவாளியாக மாறி விவேக் துப்பறியும் முறையும், தன் மனதிற்குள்ளேயே ஒரு விசாரணை அறை அமைத்து இறந்துபோனவர்களையும் அதில் கொண்டுவந்து தனக்குள் விசாரணை நடத்துவதும் மிக சுவாரசியமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தின் முக்கியமான முடிச்சுகளுமே கூட அந்த விசாரணையில் அவிழ்வது இன்னும் சுவாரசியத்தை கூட்டுகிறது.

ஆரம்பத்தில் இருந்து சந்தேகத்தை கிளப்பும் வகையில் அந்தப் பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவரை காண்பிப்பதும், சந்தேகத்தை கூட்டுவதுபோல் அவரைச்சுற்றி சில சம்பவங்கள் நடப்பதும் விறுவிறுப்பான பக்கங்கள். ஆனால் அந்த கிளைக்கதை முடியும் விதம் அபாரம். அப்படியொரு மனிதத்துடன், நெகிழ்ச்சியுடன் முடிகிறது அந்த அத்தியாயம். வெளிநாட்டை மையப்பட்டுத்திய ஒரு புலனாய்வுப் படத்தில், வெளிநாடுகளின் முக்கியமான அரசியல் பிரச்சினையும் அழகாகக் காண்பிக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்க ஒன்று. அதுவும் ஒருவரை பார்த்தவுடனேயே அவரது நிறம், உடை, மொழியை வைத்து அவரை சந்தேகப்படும் பொதுப்புத்தியையும் பலமாக சாடுகிறது இந்த அத்தியாயம். படத்தின் முத்தாய்ப்பான அத்தியாயமாக இதைச் சொல்லலாம்.

அதேபோல் படத்தின் கிளைக்கதையாக வரும் அத்தியாயம். ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஒருவன். இன்னொரு பக்கம் தொடர்ச்சியாய் கடத்தப்படும் இளைஞர்கள். ஏதோ ஒரு இடத்தில் இது இணையப்போகிறது என்று பார்வையாளர்களுக்குத் தெரிகிறது. அதேபோல் விறுவிறுப்பான முறையில் அந்த இரண்டு கதைகளும் ஓரிடத்தில் இணைகிறது. ஆனால் அந்த இடத்தில் வரும் எதிர்பார்க்க முடியாத அந்த ட்விஸ்ட்டும், அது காட்சிப்படுத்தப்பட்ட முறையும் அட்டகாசம். விறுவிறுவென்று செல்லும் புலனாய்வு காட்சிகள் சீட் நுனிக்கு நம்மை கொண்டு வருகிறதென்றால், இந்த ட்விஸ்ட் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. முடிச்சுகள் இணையும் இடத்தில் இப்படியொரு ட்விஸ்ட்டை வைத்ததும், அதைவைத்தே படத்தின் அடிப்படையான பின்கதையை, படம் சொல்லவரும் கருத்தை சொன்னதும் நல்ல உத்தி.

சுவாரசியமான இந்தத் திரைக்கதையில் சில முரண்கள் இல்லாமலும் இல்லை. ஆங்காங்கே திரைக்கதையிலும் இயக்கத்திலும் தென்படும் சிறிய போதாமைகள், சில இடங்களில் எடுபட்டு சில இடங்களில் எடுபடாமல் கடக்கும் விவேக், சார்லி கூட்டணியின் நகைச்சுவை, விவேக்கின் ஆரம்பகட்ட புலனாய்வு முறைகளும், அந்த காட்சிகளும் கொஞ்சம் அமெச்சூரான முறையில் இருப்பதும் குறைகள். இறுதிக்கட்டங்களில் வரும் புலனாய்வு விறுவிறுப்பை கொடுத்தாலும், அந்த பின்கதையை விவேக் எப்படி கண்டுபிடித்தார், எப்போது கண்டுபிடித்தார், அந்த இறுதிக்கட்ட சம்பவங்களையுமே கூட விவேக் எப்படி ஏற்கனவே தெரிந்தது போல் சொல்கிறார் என்பதிலும் ஏகப்பட்ட லாஜிக் முரண்கள். அதேபோல் அந்த முழு அத்தியாயமும் விவேக்கின் குரலிலேயே விரிவதும் கொஞ்சம் முரணாக இருக்கிறது.

இப்படியான சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும், பதட்டத்தை அதிகரிக்கச் செய்யும் இசை, சியாட்டில் நகரத்தை அருமையாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவு, சுவாரசியமான திரைக்கதை, நல்ல உள்ளடக்கம் ஆகியன இணைந்து ஒரு நிறைவான உணர்வையே தருகிறது வெள்ளைப்பூக்கள். ஆங்கிலத்தில் Dark Horse என்பார்கள். அந்த குறிப்பிட்ட போட்டியாளரைப் பற்றி யாருக்கும் பெரிதாகத் தெரிந்திருக்காது. ஆனால் போட்டியில் அத்தனை பேரையும் ஆச்சர்யப்படுத்தி வெல்வார் அவர். அப்படி, இந்த வார படங்களின் Dark Horse இந்த வெள்ளைப்பூக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT