ADVERTISEMENT

ரஜினின்னா 'கரிஸ்மா'... முருகதாஸ்ன்னா? தர்பார் - விமர்சனம்

10:29 PM Jan 09, 2020 | vasanthbalakrishnan

ஸ்க்ரீன் ப்ரசன்ஸ், ஸ்வாக், ஸ்டைல், ஹீரோயிசம்... இன்னும்... ஒரு நாயகனின் கவர்ச்சியை குறிக்க இப்போது பயன்படுத்தப்படும் அத்தனை வார்த்தைகளுக்கும் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அர்த்தமாக நின்றுகொண்டிருக்கும் தமிழ் திரை நாயகன் ரஜினிகாந்த். காண்போரில் பெரும்பாலானோரை கவர்ந்து, இன்ஸ்பிரேஷனாகத் திகழும் வண்ணம் ஒருவருக்கு இயல்பாக இருக்கும் ஈர்ப்பு அம்சத்தை 'கரிஸ்மா' (charisma) என்று கூறலாம். ரஜினிக்கு, திரையில் அந்த கரிஸ்மா உண்டு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். 2020ஆம் ஆண்டின் முதல் பெரிய படமாக வெளிவந்திருக்கும் 'தர்பாரி'ல் ரஜினியின் கரிஸ்மா தொடர்கிறதா? ரசிகர்கள் மனதில் ரஜினியின் 'தர்பார்' தொடர்கிறதா?

ADVERTISEMENT



ஆதித்யா அருணாச்சலம்... எடுத்துக்கொண்ட காரியத்தை இடையில் நிறுத்தாத, போலீஸ் வேலைக்காக தாடியை எடுக்காத, எவர் எதிரில் வந்தாலும் அஞ்சாத, குற்றம் செய்தவர் என தான் நினைப்பவரை கொலை செய்யத் தயங்காத, பேட் காப் (bad cop). மும்பை காவல்துறையின் மேல் மக்கள் இழந்த நம்பிக்கையை மீட்க, மும்பை காவல்துறையை புணரமைக்க, டெல்லியில் இருந்து நியமிக்கப்படுகிறார் ஆதித்யா அருணாச்சலம் (ரஜினிகாந்த்). மும்பையில் களமிறங்கியவுடன் எதிர்கொள்ளும் ஒரு பெரிய இடம் தொடர்புடைய குற்ற வழக்கை பயன்படுத்தி, மும்பையை க்ளீன் செய்யத் தொடங்குகிறார். அந்தப் பயணத்தில் தனது மகள் (நிவேதா தாமஸ்) கொலை செய்யப்பட, ரௌத்திரம் கொண்டு பழிவாங்கும் சிம்பிள் கதைதான் ஏ.ஆர்.முருகதாஸின் 'தர்பார்'.

நூறு வில்லன்கள் இருந்தாலும் சிங்கிளாக சென்று வெளுத்துவாங்கும் 'பேட் காப்'பாகவும் வேறு வேறு ஆங்கில்களில் ஐடியா பண்ணி துப்பறியும் 'ஸ்மார்ட் காப்'பாகவும் அன்பை பொழியும் தந்தையாகவும் குறும்பு வழியும் சீனியர் காதலராகவும் முதல் பாதி முழுவதும் ரஜினியின் 'தர்பார்' களைகட்டுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியை போலீசாகக் காட்டியுள்ள முருகதாஸ், ஏற்கனவே அவரிடம் ரசிக்கப்படும் அம்சங்களை சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். ஸ்மார்ட் ஐடியாக்கள், அதிரடிகள் என முதல் பாதியில் முருகதாஸின் எழுத்து நாம் ரசிக்க பல விஷயங்களை வைத்துள்ளது. ஆனால், ரஜினி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஓப்பனிங் சீனில் அதிகம் யோசிக்கவில்லை போல... ரஜினி படங்களின் ஈர்ப்பாக இருக்கும் இன்னொரு அம்சம் பன்ச் வசனங்கள். 'தர்பாரில்' எந்தப் பன்ச்சும் பலமாக இல்லை. ஆனால், ஆங்காங்கே சிறு சிறு அரசியல் குத்துகளில் கைதட்டல் பெறுகிறார் முருகதாஸ்.

ADVERTISEMENT



மும்பை குற்றங்கள், பின்னணி, நயன்தாராவுடன் குறும்பு நட்பு, யோகிபாபுவின் கவுண்ட்டர் கலாட்டா என கலகலப்பாக, ஓரளவு விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்ற முருகதாஸ், இரண்டாம் பாதியில் முழு பாரத்தையும் ரஜினியின் தோள்களில் வைத்துவிட்டார். சுவாரசியம், பலம் இல்லாத வில்லன் பாத்திரம் (சுனில் ஷெட்டி), நாயகன் - வில்லன் இருவருக்குமிடையில் விறுவிறுப்பான தேடல், வேட்டை, சண்டை எதுவும் இல்லாதது, மீண்டும் மீண்டும் சண்டையிலேயே சால்வ் ஆகும் பிரச்சனைகள் என த்ரில்லராக இல்லாமல் ஆக்ஷனாகவே நகர்ந்து முடிகிறது படம். அங்கு மனதில் நிற்பது ரஜினி - நிவேதா தாமஸ் இருவரின் பாசக் காட்சிகள் மட்டுமே. மும்பை காவல்துறைக்கு ஏற்பட்ட பெரும் களங்கம், போதை மருந்தால் சீரழிக்கப்படும் இளைஞர்கள் என சுவாரஸ்யத்துக்கான சாத்தியங்கள் நிறைந்த களத்தை எடுத்துக்கொண்ட முருகதாஸ், திரைக்கதையில் நின்று விளையாடியிருக்கலாம். ரமணாவின் மருத்துவமனை காட்சி, துப்பாக்கியின் ஷூட்-அவுட் காட்சி ஆகியவற்றில் இருந்த முருகதாஸ் மேஜிக் இதில் மிஸ்ஸிங். சில ஐடியாக்கள் 'செம்ம' சொல்லவைத்தாலும் அவை போதவில்லை. அதுபோல வில்லன் பாத்திரத்திலும் துப்பாக்கி, ஏழாம் அறிவு, ஸ்பைடர் போன்ற சுவாரசியம் இல்லை. ரஜினியின் ஸ்டைலும் டெலிவரியுமே படத்தின் இறுதிக்கட்டத்தை நகர்த்துகின்றன.


சூப்பர் ஸ்டாரின் படத்தில் லேடி சூப்பர் ஸ்டாருக்குப் பெரிய வேலையில்லை. அவ்வப்போது வந்து அழகால் ஈர்த்து செல்கிறார் நயன்தாரா. நாயகியின் 'லில்லி' பாத்திரத்தை விட நிவேதா தாமஸ் நடித்திருக்கும் 'வள்ளி' (நாயகன் மகள்) பாத்திரம் வலுவாக இருக்கிறது. நிவேதா சிறப்பாக நடித்துள்ளார். ரஜினியை ஜாலியாக சீண்டும் யோகி பாபுவின் கவுண்ட்டர் வசனங்கள் சிரிக்க, ரசிக்க வைக்கின்றன. 'சந்திரமுகி' படத்தில் ரஜினி பிரபுவிடம் சொல்வது போல, ரசிகர்கள் யோகி பாபுவிடம் சொல்லலாம்... "நீங்க குண்டா இருந்தாதான் அழகு", இளைத்துவிட்டார். இந்தப் பாத்திரங்களைத் தவிர யாரும் மனதில் நிற்காமல் செய்து விடுகின்றன, டப்பிங், மொழி கோளாறுகள். முதல் பாதி வில்லனாக வரும் நவாப் ஷா, மெயின் வில்லனான சுனில் ஷெட்டியை ஓவர்டேக் செய்துவிடுகிறார்.



அனிருத் இசையில் 'சும்மா கிழி' பாடல், தரமான அனுபவம், அதன் படமாக்கலில் எதுவும் சிறப்பில்லை என்றாலும். தன் இடைவிடாத பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு 'மாஸ்' ஏற்ற முழு மூச்சாக முயன்றிருக்கிறார். பல இடங்களில் வொர்க்-அவுட் ஆகியிருக்கிறது, சில இடங்களில் கொஞ்சம் ஓவராகியிருக்கிறது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு எந்த இடத்திலும் ஸ்பெஷலாக உணர வைக்கவில்லை, அதே நேரம் குறையுமில்லை. சண்டைக் காட்சிகளில் சூப்பர் ஸ்டாரின் அசைவுகளையும் அடிகளையும் அதிரடியாகக் காட்டுகிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில் பல காட்சிகள் தப்பித்துவிட்டன. கஜினி, துப்பாக்கி போன்ற படங்களிலேயே சில பாடல்கள், காட்சிகள் இல்லாவிட்டால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றே தோன்றும். ஆனால், வணிகம் என்ற காரணம் கருதி வைத்திருப்பார் இயக்குனர். அவை அந்தப் படங்களின் உறுதியால் படங்களை பாதிக்கவில்லை. ஆனால், இங்கே, இரண்டாம் பாதியில் வரும் திருமண பாடல், படத்தை பாதிக்கிறது, நம்மை சோதிக்கிறது.

மொத்தத்தில் இது ரஜினியின் 'தர்பார்'... அங்கே முருகதாஸ் கொஞ்சம் வீக்காக இருக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT