ADVERTISEMENT

போதும் சந்தானம்... போதும்! டகால்டி விமர்சனம்

07:37 AM Feb 02, 2020 | vasanthbalakrishnan

இந்தியாவில் உள்ள அனைத்து டான்கள் தொடங்கி இன்டு, இடுக்கு, சந்து, பொந்து என பல்வேறு பகுதிகளில் இருக்கும் ரவுடிகள் வரை ரித்திகா சென்னை வலை வீசித் தேடுகிறார்கள். இவர்களோடு ஹீரோ சந்தானமும் அவரை தேடுகிறார். கண்டுபிடிப்பவர்களுக்கு 10 கோடி பரிசு அறிவிக்கப்படுகிறது. அவரை கண்டுபிடிப்பதற்கு ஏன் 10 கோடி பரிசு அறிவிக்கப்படுகிறது? எதற்காக, யாருக்காக இந்த தேடுதல் படலம், இதில் சந்தானமும் ஏன் இணைகிறார் என்பதே விஜய் ஆனந்த் இயக்கியுள்ள 'டகால்டி' படத்தின் கதை.

ADVERTISEMENT


ADVERTISEMENT


அடிப்படையில் சற்று வித்தியாசமான கதை கருவோடு வந்திருக்கும் 'டகால்டி' படம் சந்தானத்தை மாஸ் ஹீரோவாக்கும் இன்னொரு முயற்சியாக வந்துள்ளது. பாடலுடன் பாரில் இன்ட்ரோ, முழு வீச்சில் சண்டைக்காட்சி, வில்லனுக்கெதிரான பன்ச் என நாயகத்தன்மைக்கு தேவையென கருதப்படும் அத்தனை அம்சங்களும் திரைக்கதையில் சேர்க்கப்பட்டுள்ளது. சந்தானமும் இவை அத்தனையையும் ஒரு முழு ஹீரோவாகவே முயற்சி செய்து செய்கிறார். ஆனால் ரசிகர்களை கவர்வது எது? அவரது நல்ல கவுண்ட்டர்கள் நிறைந்த காமெடிதான். 'டகால்டி'யில் ஒர்க்-அவுட் ஆகியிருப்பது ஹீரோயிஸமா காமெடியா? படத்தின் கதையில் வில்லன் குறித்த ஐடியா புதிதாக இருக்கிறது. நன்றாக இருக்கிறதா? திரைக்கதை வடிவம் நாம் பார்த்துப் பழகிய பழைய ஸ்டைல்தான். சந்தானம் - யோகிபாபு காம்போ எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. அவர்கள் கூட்டணியில் ஓரிரு சிரிக்கவைக்கும் நகைச்சுவை வசனங்களும் இருக்கின்றன. ஆனால் இவர்கள் இருவருக்கும் போதிய அளவில் காட்சிகள் இல்லை. படத்தில் மற்றொரு ஆறுதல் தரும் விஷயமாக தெலுங்கு நடிகர் பிரம்மானந்தத்தின் கதாபாத்திரம் அமைந்துள்ளது. படத்தின் கடைசியில் 20 நிமிடங்கள் இவர் வரும் காட்சிகள் கலகலப்பு.



இயக்குனர் விஜய் ஆனந்த் சந்தானத்தை ஹீரோவாக்கவே காட்சிகளை அமைத்துள்ளதால் திரைக்கதையில் மிஸ் பண்ணிவிட்டார். கொஞ்சம் சுவாரசியமான கதைக்கரு கிடைத்தும் அதை பெரிதாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது. தான் ஒரு காமெடி படமா இல்லை மாஸ் படமா என்ற குழப்பம் கடைசி வரை படத்திற்கு இருக்கிறது போல. சந்தானம், கண்டிப்பாக மாஸ் நாயகனாக நடிக்கலாம். ஆனால், அதற்குரிய ஸ்ட்ராங்கான தேவையுள்ள ஒரு கதையை உருவாக்க வேண்டுமல்லவா? நாயகியின் பாத்திரம், நாம் சமீப காலங்களில் பார்த்த 'லூசுப்பெண்' பாத்திரங்களிலேயே மோசமானதாக இருக்கிறது. ஆனால், அதில் நடித்துள்ள ரித்திகா சென் ரசிகர்களை கவர்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ராதாரவி, தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே ஆகியோர் அவரவருக்கு கொடுத்த வேலையை செய்துள்ளனர். விஜய் நரேனின் பாடல்கள் பெரிதாக மனதை கவராமல் கடந்து செல்கின்றன. பின்னணி இசை கொஞ்சம் கூடுதல் பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கிறது. தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு படத்தின் மேக்கிங்கை தரமாக்கியிருக்கிறது.



பிறரை கிண்டல் செய்து சிரிக்கவைக்கும் வகை நகைச்சுவையின் வெற்றி என்பது, கிண்டல் செய்யப்படுபவரே ரசிக்கும் போதுதான் நிகழும். சந்தானம், முன்பு அந்த வகையில் எக்ஸ்பெர்ட்டாக இருந்தார். இந்தப் படத்தில் அவர் யோகிபாபுவை வர்ணிக்க பயன்படுத்தும் வார்த்தைகள் நம்மை 'போதும் சந்தானம் போதும்' என்று சொல்ல வைக்கின்றன. அதேதான் அவரது பில்ட்-அப் ஆக்ஷன் காட்சிகளிலும் தோன்றுகின்றன. படத்திலேயே அரிதாக சில காமெடிகள் நம்மை சிரிக்கவைக்கும்போது 'இதுதான் வேணும் சந்தானம் வேணும்' என்று சொல்ல வைக்கின்றன. சந்தானம்தான் முடிவு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT