ADVERTISEMENT

இது சாமியில்ல... பூதம்! - சாமி ஸ்கொயர் விமர்சனம் 

08:22 PM Sep 21, 2018 | vasanthbalakrishnan

ஒரு சீக்குவலுக்கான சரியான தொடக்கத்தோடு ஆரம்பிக்கிறது சாமி 2, இல்லை, சாமி ஸ்கொயர். முந்தைய பகுதியின் முக்கிய காட்சிகளைக் காட்டி, அந்தப் பகுதியின் நாயகியான திரிஷா இதில் இல்லையென்பதை ஒரு குறையாக உணரவிடாமல் ஐஸ்வர்யா ராஜேஷை அழகாக அதில் இணைத்து, பெருமாள் பிச்சையை வேட்டையாடிய ஆறுச்சாமி அடுத்து என்னவாகிறார் என்பதைக் காட்டி... என இரண்டாம் பாகத்தைத் தொடங்கிய அழகும் பக்குவமும் படம் முழுவதும் இருக்கிறதா?

ADVERTISEMENT



ஆறுச்சாமியால் கொல்லப்பட்ட பெருமாள் பிச்சை, ஊரைப் பொறுத்தவரை தலைமறைவாக இருப்பவர். அவர் குறித்து விசாரிக்க அவரது இலங்கை மனைவியின் மகன்கள் ராவணன் பிச்சை மற்றும் இரண்டு அண்ணன்கள் கிளம்பி திருநெல்வேலி வருகிறார்கள். உண்மையைக் கண்டறிந்து ஆறுச்சாமியை அவர்கள் பழிவாங்க, பின் ஆறுச்சாமியின் வாரிசு ராம்சாமி ('ராம்' என்று தான் சொல்கிறார்கள்) அவர்களை எப்படி பழிவாங்குகிறார் என்பதே சாமி ஸ்கொயர். ஆறுச்சாமி என்ற பெயரைக் கேட்டதுமே திரையரங்கு அதிர்கிறது, அந்த இசை ஒலித்ததும் ரசிகர்கள் குதூகலிக்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்தும் இப்படி ஒரு வரவேற்பைப் பெறும் பாத்திரத்தை உருவாக்கியதே இயக்குனர் ஹரியின் மிகப்பெரும் வெற்றியாகும். அந்த பிம்பத்தை இந்தப் பகுதியிலும் ஓரளவு நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஹரியின் ஹைலைட் விஷயங்களான விறுவிறு திரைக்கதை, இடம் விட்டு இடம், நிலப்பரப்பு விட்டு நிலப்பரப்பு சர சரவென ஓடும் கதை, நேரத்தையும் காலத்தையும் நொடிக்கு நொடி கணக்குப் போட்டு செயலாற்றுவது, கதை நிகழும் ஊரை அக்கு வேறு ஆணி வேறாக அலசுவது, வில்லனைக் கொல்ல வித்தியாசமான ஐடியாக்கள், நமக்குள் அதிர்வை ஏற்படுத்தும் சண்டைக்காட்சிகள் என அனைத்தும் இதிலும் இருப்பது பலம். ஆனால், அவை அனைத்துமே குறைவாகவோ, அழுத்தமில்லாமலோ அல்லது ரொம்ப ஓவராகவோ இருப்பது பலவீனம். ட்ரைலரில் பார்த்து நாம் சிரித்த வசனங்கள் படத்தில் சிரிக்கும் வகையில் இல்லை, சிறப்பாகவே பொருந்தின. சிங்கம் படத்திலும் 'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா' வசனம் ட்ரைலர் வந்தபொழுது கிண்டல் செய்யப்பட்டது. படத்தில் கெத்தாக இருந்தது. அதேதான் இங்கும் நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT



'சீயான்' விக்ரம்... இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அன்று பார்த்த ஆறுச்சாமியாக அப்படியே வந்து நின்று அசர வைக்கிறார். பக்குவமான ஆறுச்சாமி, பரபரப்பான ராம்சாமி என இரண்டு பாத்திரத்திலும் ஜொலிக்கிறார். முரட்டுத்தனமான உடல், திமிரான பார்வை, தில்லான நடை என போலீசாக முழு ஆற்றலோடு செயலாற்றுகிறார். ஒவ்வொரு படத்திற்கும் அவர் அளிக்கும் அர்ப்பணிப்பு, உழைப்பு பல சமயங்களில் வீணாவது வருத்தம். ஆனால் இந்தப் படத்தில் அது வீணாகவில்லை, பல விதங்களில் கீழிறங்கும் படத்தைத் தூக்கி நிறுத்துவது விக்ரம்தான். கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் கொடுத்த ஒளியில் ஜொலிக்கிறார். அவரது பாத்திரம் மிக அளவானது என்றாலும் அழகாக வந்துசெல்கிறார். த்ரிஷாவின் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நன்றாக பங்காற்றியிருந்தாலும் சாமியின் மாமியாக மனதில் பதியவில்லையென்பதே உண்மை.

பாபி சிம்ஹா, ராவணப் பிச்சையாக தனக்கென ஒரு ஸ்டைல் உள்ள வில்லனாக சிறப்பாக நடித்திருக்கிறார். சூரி, படத்தின் பலவீனமாகவே திகழ்கிறார். தப்புத் தப்பாக இங்கிலிஷ் பேசி அவர் செய்யும் காமெடி நன்றாக இருக்கிறது என்று யாரோ அவருக்குத் தவறாக சொல்லியிருக்கிறார்கள் போல. அவர் தன் பாணியை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரமிது, அல்லது நல்ல இயக்குனர்களை அணுக வேண்டும். பிரபு, ஐஸ்வர்யா, ஜான் விஜய், ரமேஷ் கண்ணா, டெல்லி கணேஷ், சஞ்சீவ், ஓ.ஏ.கே.சுந்தர் உள்பட ஒரு ஐம்பது நடிகர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறார்கள்.



ஹரியின் வெற்றிப் படங்களில் வில்லன் தொடங்கி சின்னச்சின்ன பாத்திரங்களுக்கும் கூட அதன் பின்னணி சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு 'சிங்கம்' படத்தில் வரும் போஸ் வெங்கட் பாத்திரம், 'சாமி' படத்தில் விக்ரமுக்கு உதவ வரும் விலைமகள் பாத்திரம் என சின்னச் சின்ன பாத்திரங்களும் சுவாரசியமாக படைக்கப்பட்டிருக்கும். அந்த சுவாரசியம் சாமி படத்தில் மிஸ்ஸிங். முக்கிய வில்லனான பாபி சிம்ஹாவின் பாத்திரமும் அதன் குணாதசியங்களுமே மிக அவசரமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவே அவர் படம் பார்ப்பவர்கள் மனதில் அழுத்தமாக பதியாததற்குக் காரணம். வேகம் என்பது காட்சிகளில், நடிகர்களில், கார்களில் இருக்கிறதே தவிர கதையில் அந்த வேகம் குறைவுதான். நாம் கவனிக்காமல் விட்டாலும் கவனம் ஈர்க்கும் லாஜிக் ஓட்டைகள் ஏராளம்.

ஹரியின் ஹீரோக்கள் மிக நேர்மையான, பண்பான நல்லவர்கள். அவர்களது ஆற்றல் அனைவரையும் ஈர்க்கும். அப்படிப்பட்ட ஒருவர்தான் ராம்சாமியும். கீர்த்தி சுரேஷ் தன் காதலை சொல்ல, தன்னை மட்டுமல்ல யாரையுமே நீ காதலிக்கக் கூடாது என்கிறார், நேர்மையாக நேரடியாக நாட்டின் குடியரசுத் தலைவருக்கே மெயில் போடுகிறார். இப்படிப்பட்ட அறிவாளியான நாயகன், ஓ.ஏ.கே.சுந்தரைத் தவிர மற்ற இரு வில்லன்களையும் கொல்ல மூளையை அல்லாது அடிதடியையே பயன்படுத்துகிறார். குடும்பம், உறவு, அவர்களை மதிக்கும் பண்பு என குடும்பம் சார்ந்த நல்ல விஷயங்கள் சாமி ஸ்கொயரின் பாசிட்டிவ். ஆனாலும், ஆக்ஷன் காட்சிகளின் சத்தத்தில் அவை அமுங்கிப் போய்விடுகின்றன. நாயகன் 'ராம்'சாமி - வில்லன் 'ராவண'ப் பிச்சை, வனவாசத்திற்குப் பிறகு வருவது, நாயகன் குடும்பத்தைக் குறிவைக்கும் வில்லன் என க்ளீஷே விஷயங்கள் அதிகம். ஹரியின் மிகப் பெரிய வெற்றிப் படங்களிலும் கூட காமெடி கொஞ்சம் வீக்காகவே இருக்கும். இந்தப் படத்தில் அது படுத்துவிட்டது, பார்ப்பவர்களை படுத்திவிட்டது.



'சாமி' ஹாரிஸ் இசை மறக்க முடியாமல் ஒலித்துக் கொண்டிருக்க அந்த இடத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை மிகவும் குறைவுதான். இரண்டாம் பாதியில் ஆறுச்சாமி ஓப்பனிங் ஸீன் அமைந்த இடத்தில் நடக்கும் காட்சியில் ஒரு சரியான ஆட்டம் போட ரசிகர்கள் தயாராக இருக்க, அவர்களுக்கு அதிர்ச்சியளிப்பது போல ஒரு பாட்டைப் போட்டிருக்கிறார் ராக்ஸ்டார் டி.எஸ்.பி. தனது ட்யூன்களை சற்றேனும் மாற்றினால் நன்றாக இருக்கும். பின்னணி இசையும் கூட, ராவணப்பிச்சைக்கான இசை தவிர குறிப்பிடத்தகுந்த வகையில் இல்லை. வெங்கடேஷின் ஒளிப்பதிவில் ப்ரியன் இல்லாத குறை பெரிதாகத் தெரியவில்லையென்றாலும் கூட சில காட்சிகள் அதீத வெளிச்சமாகவும், ஆரம்பத்தில் சில காட்சிகள் பழைய உணர்வையும் தருகின்றன. சில்வாவின் சண்டைக்காட்சிகளில் எதிரே வரும் எல்லோரையும் பறக்க விடுகிறார் விக்ரம். சற்றும் நம்பகத்தன்மை குறையும்பொழுதே சண்டைக்காட்சிகள் அலுப்பை தருகின்றன.

இத்தனை இல்லைகள்.. என்னதான் இருக்கிறது? கார்கள் பறக்கும் பரபரப்பு, ஆட்கள் பறக்கும் அதிரடி ஆக்ஷன், குடும்பம், பாசம், ஃபீலிங்ஸ், ஆட்டம் பாட்டம், பெயருக்குக் கொஞ்சம் காமெடி எல்லாம் இருக்கிறது. இவை எதிலும் லாஜிக், பெர்ஃபக்ஷன் எதிர்பார்க்காதவர்கள் சாமி ஸ்கொயரை ரசிக்கலாம் ஒரு முறை. அந்த வகையில், அவரே சொல்வது போல இது சாமியில்லை, பூதம்! சாமி ஸ்கொயர் என்பதை விட ஸ்கொயர் ரூட் ஆஃப் சாமி என்பதுதான் பொருத்தம்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT