ADVERTISEMENT

ஹாரர் காமெடி ரசிகர்களை கவர்ந்ததா? -‘ரிப்பப்பரி’ விமர்சனம்!

03:51 PM Apr 15, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

எப்படியாவது சினிமாவில் சாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஓடிக்கொண்டு இருக்கும் வளர்ந்து வரும் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக மீண்டும் களத்தில் குதித்துள்ள படம் ரிபப்பரி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹாரர் காமெடி ஜானரில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா இல்லையா?

மாஸ்டர் மகேந்திரன் தன் நண்பர்களோடு சேர்ந்து ஒரு சமையல் யூ ட்யூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் ரசிகையாக வரும் ஒரு பெண்ணை பார்க்காமலேயே காதலிக்கிறார் மாஸ்டர் மகேந்திரன். இதற்கிடையே தான் காதலிக்கும் பெண்ணின் ஊரில் யாரெல்லாம் சாதி மறுப்பு காதலோ அல்லது திருமணமோ செய்கிறார்களோ அவர்களை எல்லாம் ஒரு சாதி வெறி பிடித்த பேய் தலையை வெட்டிக் கொள்கிறது. அந்தப் பேயை பிடிக்க போலீஸ், மாஸ்டர் மகேந்திரன் அண்ட் டீமை நியமிக்கிறது. அச்சமயம் மாஸ்டர் மகேந்திரன் தன் காதலியை எப்படியாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்று அந்த ஊருக்குச் செல்கிறார். போன இடத்தில் அந்தப் பேயின் தங்கைதான் தன் காதலி என மாஸ்டர் மகேந்திரனுக்கு தெரிய வர, இதையடுத்து அந்தப் பேயை மீறி மாஸ்டர் மகேந்திரன் தன் காதலியின் கரம் பிடித்தாரா, இல்லையா? அதேபோல் அந்தப் பேய் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களை தலையை வெட்டிக் கொள்ள காரணம் என்ன? என்பதே இப்படத்தின் மீதி கதை.

சின்ன சின்ன காமெடி எபிசோடுகளை மாண்டேஜ்களாக காண்பித்து அதையே முழு திரைக்கதையாக மாற்றி அதன் மூலம் ஒரு ஹாரர் காமெடி படத்தைக் கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.கே., முதல் பாதி முழுவதும் கதைக்குள் போகாமல் காமெடி, காதல், பேய் என என்டர்டைன்மென்ட் விஷயங்களை நோக்கி மட்டுமே படம் நகர்கிறது. இரண்டாம் பாதியில் கதைக்குள் அடி எடுத்து வைத்து, அதன் பின் பல்வேறு திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக படம் முடிந்து சற்று ரசிக்க வைத்துள்ளது. முதல் பாதியின் காமெடி காட்சிகள் மனதில் ஒட்டாமல் பல இடங்களில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதேபோல் தேவையில்லாத காட்சிகளும் பல இடங்களில் நீண்டு கொண்டே போவதும் ஆங்காங்கே வேகத்தடை ஏற்படுத்துகிறது. இருந்தும் இரண்டாம் பாதியில் கதைக்குள் அடி எடுத்து வைக்கும் திரைப்படம் அதன் பிறகு வரும் திரைக்கதை வேகம் சுவாரசியமாக அமைந்து படத்தை காப்பாற்றி இருக்கிறது. குறிப்பாக பிளாஷ்பேக் காட்சியில் இருந்து ஆரம்பிக்கும் கதையின் வேகம் படம் முடியும் வரை நிறைவாக அமைந்து படத்தை கரை சேர்க்க முயற்சி செய்திருக்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன் பல இடங்களில் நன்றாக காமெடி செய்திருக்கிறார். அதேபோல் காட்சிகளையும் சிறப்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார். ஆனால் இவையெல்லாம் அவருக்கு நன்றாக சூட் ஆகிறதா என்றால் கொஞ்சம் சந்தேகமே. இவரின் முகபாவனைகளும் நடிப்பும் ஓரளவு நன்றாக இருந்தாலும் அவரது வசன உச்சரிப்பு மற்றும் தமிழ் உச்சரிப்பு ஆகியவை இன்னமும் நன்றாக இருந்திருக்கலாம். இத்தனை வருடம் தமிழ் சினிமாவில் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கும் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஏன் இன்னமும் தமிழ் உச்சரிப்பு சரியாக வரவில்லை என்பது தெரியவில்லை. இவருடன் நடித்த இரண்டு நண்பர்களும் சிறப்பாக நடித்து காட்சிகளுக்கு வலு சேர்த்து இருக்கின்றனர். குறிப்பாக உண்மை காதலன் மற்றும் சாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் மிகச் சிறப்பாக நடித்து காட்சிகளுக்கு வேகம் கூட்டி இருக்கின்றனர். இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அனைத்துமே கலகலப்பாக அமைந்து படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இவர்களின் நடிப்பும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. வளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீனி ஃபிளாஷ்பேக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். பேயாக வரும் இவரின் கதாபாத்திரம் ஆங்காங்கே சில இடங்களில் பயமுறுத்துகிறது. இவர் நடித்திருக்கும் ஃபிளாஷ்பேக் காட்சியில் இருந்து ஆரம்பிக்கும் திரைப்படம் அதன் பிறகு சிறப்பாக அமைந்து இறுதியில் நிறைவாக முடிந்திருக்கிறது. படத்தில் வரும் இரண்டு கதாநாயகிகளும் அவரவருக்கான வேலையை நிறைவாக செய்துவிட்டு வழக்கம்போல் சென்று இருக்கின்றனர்.

இப்படத்தில் மொத்தம் ஆறிலிருந்து எட்டு பாடல்கள் வரை வருகிறது. அவை அனைத்துமே படத்திற்கு சில இடங்களில் வேகத்தடையாகவும் சில இடங்களில் பிளஸ் ஆகவும் அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் பின்னணி இசையும் பேய் காட்சிகளைக் காட்டிலும் காமெடி காட்சிகளில் சிறப்பாக அமைந்திருக்கிறது. படம் எங்கெல்லாம் தொய்வு கொடுக்க ஆரம்பிக்கிறதோ அங்கெல்லாம் தன் பின்னணி இசை மூலம் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் திவாகரன் தியாகராஜன். தளபதி ரத்தினம் ஒளிப்பதிவில் காமெடி காட்சிகளும் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வேகமான ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. படத்தின் நீளத்தை இன்னமும் கூட குறைத்து இரண்டாம் பாதியில் காட்டிய அக்கறையை முதல் பாதி திரைக்கதையிலும் காட்டி இருந்தால் இப்படம் கண்டிப்பாக இன்னமும் கூட நன்றாக பேசப்பட்டு இருக்கும்.

ரிப்பப்பரி - டீசன்ட் முயற்சி!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT