Siruvan Samuel movie Review

Advertisment

தமிழ் சினிமாவில் முதல் முறையாக முழுக்க முழுக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் பேசும் தமிழ் வழக்காடலை தழுவி வெளியாகி இருக்கும் திரைப்படம் சிறுவன் சாமுவேல். கலை படமாக வெளியாகி உள்ள இப்படம் எந்த அளவு ஈர்த்துள்ளது..?

இது 1995 முதல் 2000 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கதை என்று சொல்ல முடியாவிட்டாலும் இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்களாக இப்படம் விரிகிறது. ஒரு கதையாக பார்க்கும்பொழுது இப்படத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் அதில் நடித்த நடிகர்களும் அதில் உள்ள சூழலும் மிக எதார்த்தமாக அமைந்திருக்கிறது.

90களின் இறுதிகாலகட்டத்தில் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் ஆடுகின்ற ஆட்டத்தை பார்த்து வளரும் சிறுவன் சாமுவேலுக்கு கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் ஏற்படுகிறது. எந்நேரமும் கிரிக்கெட் மீது கொண்ட காதலால் ஒரு பேட் வாங்கி விட வேண்டும் என்று எண்ணிய அவனால் அவன் குடும்ப சூழல் காரணமாக பேட் வாங்க முடியாமல் போகிறது. மிகவும் ஏழ்மையில் தவிக்கும் இவனது குடும்பத்தில் கிரிக்கெட் என்பது தேவையில்லாத பொழுதுபோக்கு என்று கருதப்படுகிறது.

Advertisment

இதனாலேயே அவன் பல இடங்களில் மட்டம் தட்டப்படுகிறான். இருந்தும் தன் முயற்சியை கைவிடாமல் கிரிக்கெட் டிரம்ப் கார்டுகளை சேகரிக்க ஆரம்பிக்கிறான். அந்த கார்டுகளை சேர்த்து கடையில் கொடுத்தால் பேட் தருவதாக அவனுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அவன் கார்டுகளை சேமிக்க ஆரம்பிக்கிறான். இதற்கு சாமுவேலின் நண்பன் அவனுக்கு உதவி செய்கிறான். இந்த நேரத்தில் இவர்களுக்குள் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது அந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா? சாமுவேல் பேட் வாங்கினானா, இல்லையா? என்பதே சிறுவன் சாமுவேல் வாழ்வியல் படத்தின் கதை.

ஒவ்வொருத்தராக பேர் சொல்லாதபடி இதில் நடித்த அனைவருமே புதுமுக நடிகர்கள். மத்திய கன்னியாகுமரி மாவட்டத்தில் இக்கதை நடப்பதால் அங்கு இருக்கும் வழக்காடலை மிகத் தெள்ளத் தெளிவாக எந்த காம்ப்ரமைஸும் இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சாது பெர்லின்டன். ஒரு திரைக்கதை அமைப்பதற்கான எந்த ஒரு பிரின்சிபலையும் ஃபாலோ பண்ணாமல் கதை ஓட்டத்தின் போற போக்கில் படத்தை மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தி ஒரு சர்வதேச அளவில் உலகத்தரம் வாய்ந்த கலைப் படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.

அதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. அதேபோல் இதில் நடித்த நடிகர்கள், சிறுவர்கள் அனைவருமே மிக எதார்த்தமாக நடித்து அந்தந்த கதாபாத்திரத்திற்கு என்னென்ன நியாயம் செய்ய முடியுமோ அதை மிக மிகச் சிறப்பாக செய்து விருதுகளுக்கு தகுதியான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கின்றனர். ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு வித்தியாசமான படமாக இப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் இருக்கும் வழக்காடல்களை அனைவரும் புரிந்து கொள்ளும்படி அமைத்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். இருந்தும் அதுவும் படத்திற்கு ஒரு பிளஸ்ஸாகவே அமைந்திருக்கிறது.

Advertisment

மிக எதார்த்தமான காட்சி அமைப்புகள் மூலம் உலகத்தரம் வாய்ந்த படமாக தன் கேமரா மூலம் மக்களுக்கு காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சிவானந்த காந்தி. சாம் எட்வின் மனோகர் மற்றும் ஸ்டான்லி ஜான் இசையில் பின்னணி இசை மிக எதார்த்தமாக அமைந்திருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் சினிமாத்தனம் அல்லாத ஒரு இசையை கொடுத்து கவனிக்க வைத்துள்ளனர்.

சிறுவன் சாமுவேல் - புதிய முயற்சி!