ADVERTISEMENT

தினம் தினம் கடக்கும் 'முறை தவறிய உறவு' செய்திகளுக்குப் பின்.... ஒரு குப்பைக் கதை!

12:38 PM May 26, 2018 | vasanthbalakrishnan

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் ஏற்படும் விளைவை யதார்த்தமாக எடுத்துச் சொல்லும் (ஒரு குப்பை) கதை.

ADVERTISEMENT



கூவம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் தினேஷ், குப்பை அள்ளும் வேலை செய்து வருகிறார். தனது வேலையை மனதார நேசித்து செய்து வருகிறார். நீண்ட நாட்களாக பெண் தேடியும் சரி வர அமையாத தினேஷிற்கு ஒரு வழியாக மனிஷா யாதவ் கிடைத்து விடுகிறார். தான் கிளர்க் வேலை செய்வதாக மனிஷா யாதவிடம் பொய் சொல்லி மணமுடிக்கிறார் தினேஷ். இருவரும் மணமுடித்த பின்னர் தினேஷ் இல்லத்திற்கு வருகிறார்கள். அங்கு இருக்கும் சூழல், வாழ்க்கை, மனிஷாவிற்கு அருவருப்பாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் தினேஷ் ஒரு குப்பை அள்ளும் தொழிலாளி என்று மனிஷாவிற்குத் தெரிய வர, ஏற்படும் பிரச்சனைகளும் மனிஷா எடுக்கும் முடிவும் விளைவுகளும்தான் இயக்குனர் காளி ரெங்கசாமியின் 'ஒரு குப்பை கதை'.

ADVERTISEMENT


குப்பை அள்ளும் தொழிலாளியாக வரும் நடன இயக்குனர் தினேஷின் இயல்பான உருவம் அந்தப் பாத்திரத்துக்கு மிக பொருத்தமாக இருக்கிறது. அவரும் முயற்சி எடுத்து அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தினேஷிற்கு நடிப்பில் முதல் படம் என்பது போல் தெரியவில்லை. மனைவியைப் பிரிந்த சோகம், குழந்தை மீதான ஏக்கம், குடிகாரனின் உடல்மொழி, பேச்சு என ஒரு யதார்த்த நடிகனாக முயற்சி செய்திருக்கிறார், அதற்கேற்ற நல்ல கதையில் அறிமுகமாகியிருக்கிறார். பெரும்பாலான காட்சிகளில் முகத்தை ஒரே மாதிரியாக வைத்திருப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம். மனிஷா யாதவ் மீண்டும் ஒரு முறை, அதிர்ச்சி தரும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிக்கும் பாத்திரங்களே நடிப்பவர்களின் இமேஜ் ஆக நினைக்கப்படக்கூடிய சூழலில் இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்க கண்டிப்பாக ஒரு தைரியம் வேண்டும். தன் கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து நடித்துள்ளார். கணவன் குப்பை தொழிலாளி என தெரிந்ததும் கொடுக்கும் வெறுப்பு, சமூகத்தை மீறிய ஆசை என பக்குவமான நடிப்பு. இந்தப் படத்திலும் யோகிபாபு இருக்கிறார், சிரிக்க வைக்கிறார். தமிழ் சினிமாவில் இப்பொழுது அவரது அலை. ஜார்ஜ், ஆதிரா, கோவை பானு, செந்தில், லலிதா, சுஜோ மாத்யூஸ், கிரன் ஆர்யன் ஆகியோர் அவரவர் கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப உறுத்தலில்லாமல் இருக்கிறார்கள்.



அனைத்தையும் மறந்து ஆசைகளின் பின்னே செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி திசைமாறிப் போகும் என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் காளி ரெங்கசாமி. ரொம்ப ஆர்ப்பாட்டமில்லாமல் நாம் தினசரி செய்திகளில் படித்துக் கடந்து போகும் 'முறை தவறிய உறவு' விவகாரத்துக்குப் பின்னால் இருக்கும் பாதிப்புகளையும், பிரச்சனைகளையும், எந்த சினிமாத்தனமும் இல்லாமல் யதார்த்தமாக சொல்லி இருக்கிறார். ஒரு பெண், தன் ஆசைகளுக்காக கணவனை விட்டுப் பிரிந்து சென்றாலும், அதை ஆண்களின் கண்ணோட்டத்திலேயே கூறாமல் அவளுக்கு இருக்கும் உரிமையையும் நியாயமாகக் கூறி இருக்கும் விதம் நன்று.



கதையோட்டத்தை எளிதாக யூகிக்க முடியும் வகையில் அமைந்திருக்கும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி ஒரு எளிமையான படத்தில், வலிமையான விஷயம். அதை வாங்கி விநியோகித்திருக்கும் ரெட் ஜெயண்ட் மூவீஸ்க்கு 'மைனா'விற்குப் பின் ஒரு நல்ல பெயர். 'காதல்' ஜோஷ்வா ஸ்ரீதரின் பாடல்கள் கதையோடு ஒட்டியுள்ளன, ஆனால் நம் மனதோடு ஒட்டவில்லை. தீபன் சக்ரவர்த்தியின் பின்னணி இசை சில இடங்களில் அதீதம், பெரும்பாலும் அருமை. நா.முத்துக்குமாரின் வரிகள் பாடல்களுக்கு உயிரூட்டி இருக்கின்றன. மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு சென்னை குப்பத்தின் அழகையும், அருவருப்பையும் நேர்த்தியாக காட்சிபடுத்தியிருக்கிறது.

இந்த 'குப்பைக் கதை' வீண் அல்ல, நமக்கு அவசியமானது.





ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT