ADVERTISEMENT

விஜய் ஆண்டனி இதை கன்சிடர் செய்வாரா? - 'கோடியில் ஒருவன்' விமர்சனம் 

04:22 PM Sep 18, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘பிச்சைக்காரன்’ தந்த மிகப்பெரிய வெற்றி நடிகர் விஜய் ஆண்டனியை முன்னணி நடிகர்களில் ஒருவராக அடையாளம் காட்டியது. அதன்பிறகு அப்படியொரு வெற்றி படத்தை மீண்டும் கொடுக்க வேண்டும் என விஜய் ஆண்டனி முயற்சி செய்தாலும், அதற்கான பலன் இதுவரை பெரிதாக கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். தற்போது மீண்டும் அதேபோல் ஒரு முயற்சியையே 'கோடியில் ஒருவன்' படத்திலும் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. எடுத்த முயற்சி வெற்றியா..? தோல்வியா..?

ஒரு மலைக் கிராமத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. பெரிய லோக்கல் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குகிறார். வந்த இடத்தில் சரியாக படிக்காமல் ரவுடிசம் செய்துகொண்டிருக்கும் டீனேஜ் சிறுவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார். இது அங்கிருக்கும் கீழ்மட்ட தாதாக்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் பிடிக்காமல் போக, விஜய் ஆன்டனிக்கும், அங்குள்ள கவுன்சிலருக்கும் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் விஜய் ஆண்டனியின் ஐ.ஏ.எஸ். ஆகும் கனவை கவுன்சிலர் தகர்கிறார். அம்மாவின் ஆசைப்படி கலெக்டர் ஆக முடியாமல் போகும் விஜய் ஆண்டனி வில்லன்களைக் காலி செய்ய அடுத்தடுத்து எடுக்கும் அதிரடி முடிவுகள் என்ன..? என்பதே 'கோடியில் ஒருவன்' படத்தின் மீதி கதை.

ஒரு பக்கா கமர்ஷியல் ஃபார்முலாவில் அதிரடி ஆக்சன் நிறைந்த திரைக்கதை மூலம் முதல் பாதியை ஜெட் வேகத்தில் நகர்த்தியுள்ளார் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன். சரியான கலவையில் அமைந்த அம்மா சென்டிமென்ட் காட்சிகள், ஜனரஞ்சகமான ஆக்சன் காட்சிகள், விளிம்புநிலை மக்களின் எதார்த்த வாழ்வியலின் அழுத்தமான பிரதிபலிப்பு, அங்கிருக்கும் மக்களின் அவல நிலை, அதிலிருக்கும் அபாயகரமான அரசியல், அதை அமைதியாகவும், நேர்த்தியாகவும் சமாளிக்கும் நாயகன் என எந்த இடத்திலும் கொஞ்சம் கூட அயர்ச்சி ஏற்படாதவாறு சாமர்த்தியமாக காட்சிகள் அமைத்து ரசிக்கவைத்துள்ளார் இயக்குநர். ஆனால் இதே வேகமும், நேர்த்தியும் இரண்டாம் பாதியில் தொடராதது சோகமே! இரண்டாம் பாதி முழுவதும் அரசியல், பிரச்சாரம், மக்கள் பணி, பதவிப் போட்டி என முழுக்க முழுக்க ஓட்டு அரசியலுக்குள்ளேயே கதை பயணிக்கிறது. இதனால் முதல் பாதி திரைக்கதையில் இருந்த வேகமும், நேர்த்தியும் இரண்டாம் பாதியில் இல்லாமல் படம் தடுமாறியுள்ளது. ஒரு எதிர்பார்ப்பை முதல் பாதியில் சிறப்பாக ஏற்படுத்தி அதை இரண்டாம் பாதியில் பூர்த்திசெய்ய முடியாமல் தடுமாறியுள்ளது படம். இருந்தும், இறுதிக்கட்ட காட்சிகள் சற்று நிமிர்ந்து உட்காரவைக்கும் விதமாக அமைந்திருப்பது ஆறுதல்.

விஜய் ஆண்டனி எப்போதும் போல் அமைதியாக இருந்தே காரியத்தை சாதிக்கிறார். நடிப்பில் அதிகம் அலட்டல் இல்லாத அவரின் பழைய பாணியையே இப்படத்திலும் தொடர்ந்துள்ளார். இவருக்கும் அம்மாவுக்குமான நெகிழ்ச்சியான காட்சிகளிலும் சரி, வில்லன்களுடன் மோதும் காட்சிகளிலும் சரி அளவான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிக்கவைத்துள்ளார். ஆனால் இன்னும் எத்தனை காலத்திற்குதான் இதே பாணி அவருக்கு கைகொடுக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதை விஜய் ஆண்டனி சற்று கன்சிடர் செய்ய இதுவே சிறந்த நேரம் என தோன்றுகிறது!

கடமைக்கு வைக்கப்பட்டுள்ள ஹீரோயின் கதாபாத்திரத்தில் கடமைக்கு வந்து தன் கடமையை செய்துள்ளார் நாயகி ஆத்மிகா. படத்தில் இந்தக் கேரக்டர் அவசியமா..? என்ற எண்ணமே அதிகமாக தோன்றுகிறது! மிரட்டல் வில்லன்களாக வரும் ‘பூ’ ராம், கே.ஜி.எஃப். ராமச்சந்திர ராஜு, சூப்பர் சுப்புராயன், பாகுபலி பிரபாகர், சூரஜ் போப்ஸ் ஆகியோர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேஸில் புகுந்து விளையாடி இருக்கின்றனர். அவரவருக்கு சரியான முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரம். அதை அனைவரும் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அதேபோல் இப்படத்தில் வரும் சிறுவர்களும் தேர்ந்த நடிகர்களுக்கு நிகராக மண்மணம் மாறாமல் சிறப்பாக நடித்துள்ளனர். அம்மா கதாபாத்திரத்தில் வரும் திவ்ய பிரபா அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிந்துள்ளார். இவரின் கதாபாத்திரமே படத்தின் ஆணிவேராக அமைந்து படத்தின் வெற்றியை ஓரளவு உறுதிசெய்ய உதவியுள்ளது.

படத்துக்கு மிகப்பெரிய பலமாக ஒளிப்பதிவாளர் என்.எஸ். உதயகுமாரின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது. ஏழைகளின் குடியிருப்பு பகுதிகளின் சின்னச் சின்ன ஏரியாக்களைக் கூட சிறப்பான ஒளிப்பதிவின் மூலம் அழகாகவும், அழுத்தமாகவும் காட்சிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் கேமரா கோணங்களை சுழற்றியடித்து மிரட்டியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கேட்கும்போது இனிமையாக இருக்கிறது. கேட்ட பின் மனதில் பதிய மறுக்கிறது. பின்னணி இசை சொல்லிக்கொள்ளும் அளவு படத்துக்கு வேகம் கூட்டியுள்ளது.

நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று முனைப்புடன் இருக்கும் ஒரு படித்த இளைஞன், கவுன்சிலர் ஆகும் பட்சத்தில் எந்த அளவு சமூகத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்ற விழிப்புணர்வை சிறப்பாகவும், மிதமான வேகத்துடனும் கூறியுள்ள இப்படத்தில், முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியிலும் தொடர்ந்திருந்தால் பிளாக்பஸ்டர் ஹிட் வரிசையில் இணைந்திருக்கலாம்.

‘கோடியில் ஒருவன்’ - தரமான முயற்சி!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT