'என் இனிய தமிழ் மக்களே...' என்று தமிழ் திரைப்பட ரசிகர்களின் பாசத்திற்குரிய பாரதிராஜாவின் குரலை கேட்கும்போதே ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. அத்தகைய ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனர் பாரதிராஜாவின் சமீபத்திய படம் 'மீண்டும் ஒரு மரியாதை'.

barathiraja

நடந்துவரும்போதே பல்வேறு பாவனைகள் காட்டும் நாயகி, திடீர் திடீரென உறைந்து நிற்கும் காட்சிகள், ஆணின் தொப்பியும் பெண்ணின் குடையும் இணைந்து காற்றில் பறப்பது... இன்னும் இன்னும் பல பல பாரதிராஜா டச்சுகள் நிறைந்த படம் இது. ஆனால் இது அத்தனையும் நடப்பது முட்டத்திலோ தேனியிலோ அல்ல, லண்டனில். விவசாயமும் தமிழும் தன் மூச்சென கருதி வாழும் எழுத்தாளர் ஓம் (எ)பால்பாண்டி (பாரதிராஜா), மகனின் வற்புறுத்தலால் மனைவியுடன் லண்டன் செல்கிறார். அங்கு சென்ற சில நாட்களிலேயே நடக்கும் எதிர்பாராத விபரீதத்தில் மனைவியை இழக்கும் பால்பாண்டியை மகன், வயதானோரை பாதுகாக்கும் இல்லமொன்றில் சேர்க்க, அங்கிருந்து ஒரு நாள் வெளியேறுகிறார். அக்கா வீட்டில் நடக்கும் கொடுமையால் தற்கொலை எண்ணத்தில் இருக்கும் வெண்பா (ராசி நக்ஷத்திரா), பால்பாண்டியை சந்திக்கிறாள். தன் நண்பருக்கான ஒரு கடமையை முடிக்கும் பயணத்தில் அவளையும் இணைத்துக்கொள்ளும் ஓம், அந்தப் பயணத்தின் இறுதியில் வெண்பாவுக்கு வாழ்வில் பிடிப்பு ஏற்படாவிட்டால் தானே அவளை கொன்றுவிடுவதாக உறுதியளித்து அழைத்துச் செல்கிறார். அந்த இனிய பயணமும்பயணத்தின் முடிவும்தான் பாரதிராஜாவின் 'மீண்டும் ஒரு மரியாதை'.

rasi nakshathra

Advertisment

பத்து நாட்கள் பயணத்தில் சிலஅனுபவங்கள் சுவையானவை. லண்டன் வந்தவுடன் அங்கு மௌனிகாவுக்கு நேரும் சம்பவம் உண்மையில் அதிர்ச்சி தருகிறது. பாரதிராஜா - மௌனிகா உறவும், அவர்கள் இருவரது நடிப்பும் மிக சிறப்பு. நாயகியின் பாத்திரத்துக்கு தன் ஸ்டைலில் பன்முகத்தன்மை சேர்த்திருக்கிறார் பாரதிராஜா. 'Life is beautiful, suicide is not a solution' என்ற பாசிட்டிவ் கருத்தை படமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். பாரதிராஜா - ராசி நக்ஷத்திரா இருவருக்கும் இடையிலான பேச்சும் குறும்பும் ஆங்காங்கே இனிப்பு, சில இடங்களில் அலுப்பு. படம் பயணிக்கும் இடங்கள் அழகு. படம் உருவாக்கப்பட்டதில் இருக்கும் பழைய தன்மையும் திடீர் திடீரென காட்சி உறைந்து பறவைகள் பறப்பது, வேறு வசனம் வருவது போன்ற டெக்னிக்குகளும் சோதிக்கின்றன. வெளிவந்த காலத்தில் 'வேற லெவல்' என்று கொண்டாடப்பட்ட சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக் படங்களின் நினைவு வருகிறது. முக்கிய பாத்திரங்கள் மூன்றை தவிர வேறு எந்த பாத்திரமும் கருதத்தக்க வகையில் இல்லாதது பெரும் குறை. வசனங்களிலும் நடிப்பிலும் இருக்கும் 'அதீத'த் தன்மையும் படத்தை தொந்தரவு செய்கிறது. ஓம் - வெண்பா இருவருக்குமான உறவை காட்சிப்படுத்தியதில்ஒரு சிறிய குழப்பத்தை, வேறு ஏதேனும் இருக்குமோ என்ற உணர்வை மெயின்டெய்ன் செய்திருக்கிறார்கள். ஆனால், அத்தனை வயது வித்தியாசத்தில் அது தேவைதானா என்ற கேள்வியும் எழுகிறது. எல்லாவற்றையும் தாண்டி அந்த இருவருக்குமான உறவும், மௌனிகாவின் நடிப்பும் முடிவும் படத்தை தாங்குகின்றன.

barathiraja with nakshathra

Advertisment

பாரதிராஜா, மாடர்ன் உடைகளில் செம்ம ஸ்மார்ட்டாக இருக்கிறார், சிறப்பாக நடிக்கிறார். சில இடங்களில் மிக மெதுவாக வசனங்கள்பேசும்அந்த ஸ்டைல்தான்சற்று அயர்ச்சியை தருகின்றது.நாயகி ராசி நக்ஷத்ராவுக்கு இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது. சில காட்சிகளில் கவரும் அவர் சில காட்சிகளில் செயற்கையாகத் தெரிகிறார். மௌனிகா, முதிர்ச்சியான நடிப்பால் அதிர்ச்சியை உணர வைக்கிறார். மற்ற நடிகர்களின்பாத்திரங்கள் பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை.சாலை சகாதேவனின் ஒளிப்பதிவில்லண்டன் அழகு எளிமையாகவும் நெருக்கமாகவும் உணர வைக்கிறது. நம்மையும் அந்தப் பயணத்தில் இணைக்கிறது. பழனிவேல், என்ன நோக்கத்தில் இந்தப் படத்தொகுப்பு நுட்பங்களை பயன்படுத்தினார் என்று தெரியவில்லை. படத்தை பழையதாகக் காட்டுவதில் இந்த எடிட்டிங் டெக்னிக்குகள் முதலில் நிற்கின்றன. ரகுநந்தனின் இசையில் 'அன்புள்ள காதலா' பாடல் மட்டும் இனிமை.

நாம் முன்பு வாழ்ந்த ஒரு ஊரின் நினைவுகள் மிக இனிமையாக நம் மனதில் பதிந்திருக்கும். ஆண்டுகள் கழித்து அந்த ஊருக்குப் போனால் அதே இனிமை இருக்காது. ஊரே மாறியிருக்கும். ஊர் அப்படியே இருந்தாலும் நமக்கானவர்கள் அங்கு இருக்க மாட்டார்கள். அந்த ஊரை சுற்றுவதில் ஒரு சுகமிருக்கும்.ஆனால் ஏதோ ஒரு வகையில் ஊர் நம்மிடம் இருந்து அந்நியப்பட்டிருக்கும். அப்படி ஒரு உணர்வை தருகிறது நாம் ரசித்த பாரதிராஜாவின்'மீண்டும் ஒரு மரியாதை'.