ADVERTISEMENT

படத்தில் கூஸ்பம்ப் மொமண்ட்ஸ் இருக்கும்... ஆனால், படமே கூஸ்பம்ப் மொமண்ட்ஸ் ஆக இருந்தால்! கேஜிஎஃப் 2 - விமர்சனம்

05:57 PM Apr 14, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

முதல் பாகத்தில் தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற கே ஜி எஃப்-க்குள் நுழைந்து தலைவன் கருடனை போட்டுத் தள்ளி தலைமையையும், அதிகாரத்தையும் கைப்பற்றுகிறார் ராக்கி யஷ். அதன் பின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய அவருக்கு மீண்டும் புதிய எதிரிகளால் ஆபத்து ஏற்படுகிறது. அதேசமயம் இந்திய அரசும் அவருக்கு எதிராக மாறுகிறது. இதையெல்லாம் ராக்கி யஷ் எப்படி சமாளிக்கிறார் என்பதே கேஜிஎப் சேப்டர் 2 படத்தின் கதை.

தெலுங்கு திரையுலகில் இருந்து வெளியான பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் எப்படி ஹாலிவுட்டுக்கே சவால்விடும் வகையில் இருந்தனவோ, அதேபோல கன்னட திரையுலகிலிருந்து வெளிவந்துள்ள படம்தான் இந்த கேஜிஎப் சேப்டர் 2. அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும், மெய் சிலிர்ப்பூட்டும் விஷுவல்சும், பரவசமூட்டும் திரைக்கதையும் சேர்ந்து திரையில் ஒரு மேஜிக்கை நிகழ்த்தியுள்ளது. முதல் பாகத்தில் கேஜிஎப் -ஐ கைப்பற்ற ராக்கி போராடுகிறார். இரண்டாம் பாகத்தில் கைப்பற்றிய கேஜிஎப் -ஐ தக்கவைத்துக்கொள்ள போராடுகிறார். இதுவே இந்த படத்தின் ஒன்லைன்.

ஒரு ஆக்ஷன் படம் என்றால் எப்படி இருக்கவேண்டும் என இந்திய சினிமாவுக்கே கற்றுக்கொடுத்து ட்ரெண்ட் செட் செய்து காட்டியுள்ளார் இயக்குநர் பிரசாந்த் நில். அதுவும் முதல் பாகத்தில் கொடுக்கப்பட்ட அதிகமான ஹைப்பையும், அது ஏற்படுத்திய எதிர்பார்ப்பையும் எந்த விதத்திலும் ஏமாற்றாமல் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளார். சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடக்கூடிய இந்த படம், ஒரு இடத்தில் கூட அயர்ச்சியை ஏற்படுத்தாதவாறு காட்சிக்கு காட்சி கூஸ்பம்ப் மொமன்ட்ஸ்களை அள்ளி தெளித்து திரையரங்கை கைதட்டல்களால் அதிர செய்துள்ளார் இயக்குநர். என்னதான் ஆக்சன் படமாக இருந்தாலும் செண்டிமெண்ட் காட்சிகளையும், காதல் காட்சிகளையும் படத்தின் கதையோடே பயணிப்பது போல அமைத்தது பல இடங்களில் ஒர்க்அவுட் ஆகியிருந்தது. சில இடங்களில் செண்டிமெண்ட் காட்சிகள் கண்கலங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது கூடுதல் பலம்.

ஒரு படத்துக்கு கதை எந்த அளவு முக்கியமோ அதே அளவு நல்ல திரைக்கதையும், வசனமும் முக்கியம். இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பாக படத்தின் இசையும் அதற்கு கை கொடுத்தால் பிரம்மாண்ட வெற்றியை அந்த படம் பெரும். அந்த வகையில் இவை அனைத்தும் ஒருசேர கைகொடுத்து இந்தப்படத்தை ஒரு பிளாக்பஸ்டர் படமாக மாற்றியுள்ளது.

இந்த படத்திற்காக இயக்குநர் எந்த அளவுக்கு மெனக்கெட்டிருக்கிறாரோ, நடிகர் யஷ்ஷும் அதேயளவு உழைப்பை போட்டுள்ளார். ராக்கி பாய் ஆக அவர் திரையில் தோன்றும் பல இடங்களில், சலாம் ராக்கி பாய் என்ற கோஷம் திரையிலும் நமது மனதிற்குள்ளும் ஒருங்கே வருகின்றது. அந்த அளவு கதையோடும் கதாபாத்திரத்தோடும் ஒன்றி ராக்கி ஆகவே மாரி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார் யஷ். இவரது உடல் மொழியும் வசன உச்சரிப்பும் படத்துக்கு மிகப்பெரிய பலம். இந்தப் படத்துக்காக இவர் மேற்கொண்ட எட்டு வருட உழைப்பிற்கு சரியான பலன் கிடைத்துள்ளது என்று கட்டாயம் சொல்லலாம்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு படத்தில் அதிகம் காட்சிகள் இல்லாவிட்டாலும் தனக்கு கொடுத்த ஸ்க்ரீன் ஸ்பேஸை சரியாக பயன்படுத்தி அதில் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார். சதுரங்க ஆட்டத்தில் எப்படி ஒரே ஒரு ராணி இருக்குமோ அதே போல் ஆண்கள் சூழ்ந்த இந்த படத்தில் ஒரே ஒரு ராணியாக பயணித்து பார்ப்பவர் மனதில் இடம் பிடித்துள்ளார்.

வில்லன்களாக வரும் சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டன் இருவரும் நடிப்பில் மிரட்டி உள்ளனர். சஞ்சய் தத் எண்ட்ரி கொடுக்கும் காட்சியில் தியேட்டர் அதிர்கிறது. அந்த அளவு மாஸ் காட்டி எண்ட்ரி கொடுக்கும் அவர் அதே மாசை படம் முடியும் வரை மெய்ண்டெயின் செய்து மிரட்டி உள்ளார். அதேபோல் பிரதமராக நடித்திருக்கும் ரவீனா டாண்டன் கம்பீரமான நடிப்பில் பல உணர்ச்சிகளை ஒருசேர சிறப்பாக வெளிப்படுத்தி வில்லத்தனம் செய்துள்ளார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதியும்படி நடித்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ். சென்ற பாகத்தில் கேஜிஎப் கதையை சொல்லும் நபரின் மகனாக நடித்திருக்கும் இவர் தனக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேசில் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார். அதேபோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் ஈஸ்வரி ராவ், சரண் ஆகியோர் கொடுத்த வேலையை நிறைவாக செய்து மனதில் பதிகின்றனர்.

ஹாலிவுட்டுக்கு நிகரான உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் புவன் கவுடா. குறிப்பாக பல காட்சிகளில் படம் இருட்டாகவே இருந்தாலும் அங்கு ஏற்கனவே இருக்கும் இயற்கையான வெளிச்சத்திலேயே காட்சிகளை படமாக்கி உலகத் தரத்தில் வெளிக்கொண்டு வந்துள்ளார். இவரது சீரான ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாய் அமைந்துள்ளது. ரவி பஸ்ரூட் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மேலும் பிரம்மாண்டத்தை கூட்டி வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன. காட்சிக்கு காட்சி இவரது இசையை ரசிகர்களுக்கு கூஸ் பம்ப்பை ஏற்படுத்துகிறது. தமிழ் வசனங்கள் எழுதி அசோக் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து உள்ளார். இவரது பஞ்ச் வசனங்கள் இந்த படத்திற்கு ஒரு மிகப் பெரிய பிராண்ட் ஆகவே மாறியுள்ளது.

ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ள அன்பு அறிவு ஆகியோர் ஹாலிவுட் தரத்தில் ஸ்டண்ட் காட்சிகளை கொடுத்துள்ளனர். எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி ஏற்படாத அளவு மெய் சிலிர்ப்பூட்டும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளனர். படம் 2 மணி நேரம் 48 மணி நிமிடங்கள் ஓடினாலும் அது எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி ஏற்படாதவாறு தன் கத்திரியை சிறப்பாக பயன்படுத்தி காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் எடிட்டர் உஜ்வல் குல்கர்னி. இப்படத்தின் இன்னொரு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுவது கலை இயக்கம். தனது தேர்ந்த வேலைப்பாடுகள் மூலம் கே ஜி எஃப் இடத்தை அப்படியே தத்ரூபமாக அமைத்து அதில் சில மாற்றங்களையும் செய்து படத்திற்கு ஏற்றாற்போல் சரியாக அமைத்துக் கொடுத்து கவனம் பெற்றுள்ளார். இவரது கலை இயக்கம் படத்தில் பல இடங்களில் நன்றாக பளிச்சென்று உள்ளது.

மொத்தத்தில் பாகுபலி, ஆர் ஆர் ஆர் படங்களுக்கு பிறகு ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவிற்கு உருவாகியுள்ள இன்னுமொரு பான் இந்தியா திரைப்படம் கேஜிஎப் 2.

கேஜிஎப் 2 - டபுள் ட்ரீட்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT