ADVERTISEMENT

ஜி.வி.பிரகாஷ் திருந்திவிட்டாரென்று நினைத்தோம்... ஆனால்?

02:38 PM May 27, 2018 | vasanthbalakrishnan

செம - திரைவிமர்சனம்

பெண் பார்க்கும் படலத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் விபரீதங்களையும் காமெடியாக சொல்ல முயன்றிருக்கும் படம் இயக்குனர் வள்ளிகாந்த்தின் 'செம'.

ADVERTISEMENT



ஜி.வி.பிரகாஷும் அவருடைய நண்பர் யோகி பாபுவும் திருச்சியில் காய்கறி, பழங்கள், மீன் மற்றும் கருவாடு ஆகியவற்றை லோடு வண்டியில் வைத்து விற்று வருகிறார்கள். ஒரு ஜோதிடர் சொல்லும் விஷயத்தால் கலக்கம் அடைந்த ஜி.வி.பிரகாஷின் அம்மா சுஜாதா சிவகுமார் அவருக்குப் பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பிக்கிறார். மன்சூர் அலிகான், கோவை சரளாவின் மகள் அர்த்தனாவை பெண் பார்க்க சென்ற இடத்தில் முதலில் சுமூகமாகவும் பின்னர் மன்சூர் முடிவை மாற்றுவதால் பிரச்சனையாகவும் செல்கிறது. கோபமடைந்த ஜி.வி.பிரகாஷ் மன்சூர் அலிகானிடம் 'உன் பெண்ணை திருமணம் செய்து காட்டுவேன்' என்று சவால் விடுகிறார். சவாலில் ஜெயித்தாரா இல்லையா என்பதை அப்படி இப்படி, கொஞ்சம் சிரிக்க வைத்து, கொஞ்சம் கிறுகிறுக்க வைத்து சொல்லியிருக்கிறது 'செம'.

ADVERTISEMENT



'நாச்சியாரு'க்குப் பிறகு ஜி.வி.பிரகாஷின் பாதை வேறு மாதிரி இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, கொஞ்சம் ஏமாற்றம் கொடுத்து தன் வழக்கமான களத்துக்குத் திரும்பியிருக்கிறார். இந்த முறை பெண்களைத் திட்டும் 'வெர்ஜின் பையன்' ரக வசனங்கள் இல்லை என்பது ஆறுதல். கிராமத்துப் பையனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், கச்சிதமாக இருக்கிறார். நடிப்பு, வழக்கம் போல இருக்கிறது. நாயகி அர்த்தனாவிற்குக் கலையான முகம். படம் கேட்கும் நடிப்பைத் தந்துள்ளார். யோகி பாபு, கோவை சரளா இருவரும் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார்கள். முழுநீள காமெடிப் படம் என்பதால் இருவருக்கும் நல்ல ஸ்பேஸ் கிடைத்துள்ளது. முடிந்த அளவு சிரிக்க வைக்கிறார்கள். மன்சூர் அலிகான், சுஜாதா இருவரும் தங்கள் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் பார்த்து உங்களுக்கு சிரிப்பு வரவில்லையென்றால், வில்லனாக வரும் ஜனாவைப் பார்த்தவுடன் வந்துவிடுகிறது. அப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது அவரது பாத்திரம்.



'மிகப் புதிய கதையெல்லாம் இல்லை, காமெடியில் ஈடுகட்டிக்கொள்ளலாமெ'ன்று இயக்குனர் வள்ளிகாந்த் களத்தில் இறங்கியிருக்கிறார் போல. காமெடியும் ஓரளவுதான் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஒரு பாத்திரம் எத்தகையது என்ற சஸ்பென்ஸை ஆரம்பத்தில் வைக்கலாம், அல்லது படம் முழுவதும் ஒரு தன்மையில் காட்டி, இறுதியில் உண்மை வேறு என்று ட்விஸ்ட் வைக்கலாம். இரண்டுமில்லாமல் குழப்பத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன சில பாத்திரங்கள். இயக்குனர் பாண்டிராஜின் வசனங்கள் அவருக்கேயுரிய பாணியில் ஆங்காங்கே சுவாரசியம் சேர்ந்திருக்கின்றன. ஆனால், தோற்றத்தின் அடிப்படையில் கிண்டல்கள் இனியும் தேவைதானா? ஜி.வி.பிரகாஷ் முன்பு நடித்த 'ப்ரூஸ்லீ' படத்தை இயக்கியது பாண்டிராஜின் உதவி இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜ். வள்ளிகாந்த்தும் அவரது சீடராம். என்ன கோபமோ ஜி.வி.பிரகாஷ் மேல்? ஜி.வி.பிரகாஷின் இசையில் 'சண்டாளி' பாடல் கேட்கும் ரகம். ஒளிப்பதிவாளர் விவேகானந்தன், கிராமத்தையும் கலர்ஃபுல்லாகவே காட்டியுள்ளார். படத்தில் யதார்த்தமென்று பெரிதாக எதுவுமில்லாததால் ஒளிப்பதிவிலும் அப்படியெதையும் முயற்சிக்கவில்லை போல.


இதற்கு முன்பு வந்த படங்கள் பற்றியெல்லாம் தெரியாது. லாஜிக், தரம் எதுவும் கவலையில்லை. அந்த நொடியை சிரித்துக் கொண்டாடுவோம் என்பவர்களுக்கு 'செம' ஒரு சிரிப்புப் படம். வின்னர், சக்ஸஸ், வேகம் போன்ற டைட்டில்களுடன் சில படங்கள் வந்தன. 'செம' என்ற டைட்டிலும் அவற்றை நினைவுபடுத்துகிறது.




ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT