ADVERTISEMENT

அம்பேத்கர், இளவரசன் மற்றும் பலர் இருக்கும்... - பரியேறும் பெருமாள் விமர்சனம் 

01:47 PM Sep 29, 2018 | vasanthbalakrishnan


"எங்கப்பா செருப்பு தைக்கிறவரு, அதை சொல்லிச் சொல்லியே என்னை மேல வர விடாம மிதிச்சாய்ங்க... எல்லா வலியையும் சேர்த்து பேய் மாதிரி படிச்சேன். இன்னைக்கு நான் உனக்கு பிரின்சிபால். இப்போ அவுங்க எல்லோரும் எனக்கு வணக்கம் வைக்கிறாய்ங்க..." - பரியேறும் பெருமாள் படத்தில் சட்டக் கல்லூரி முதல்வர் பாத்திரம் பேசும் இந்த வசனம் ஒடுக்கப்பட்டோருக்கான வழிகாட்டல்...

"காலம் இப்படியேவா தம்பி இருக்கும்... நல்லா படிச்சு முடிங்க. ஒரு நாள் எல்லாம் மாறும்ல... அப்போ பார்ப்போம். இப்போதைக்கு என்னால இதுதான் சொல்ல முடியும்" - ஒரு ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த தந்தை தன் மகளின் நண்பனான ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞனிடம் பேசும் இந்த வார்த்தைகள் குற்ற உணர்வுடன், அதே நேரம் மாற்றத்துக்குத் தயாராக இருக்கும் பலரின் வாக்குமூலம்

"இதுக்கு காசெல்லாம் வேணாம். நம்ம குலசாமிக்கு செய்ற கடமையா இதை செய்றேன். ஏதாவது தப்பாப் போனா மட்டும் இதை வச்சு என்னை வெளிய எடுத்து விடு" - ஆணவக் கொலை செய்யப்போகும் ஒருவர் சொல்லும் இந்த வார்த்தைகள் தர்க்கங்களே இல்லாத, வெளியே வரத் தயாராக இல்லாத, காரணத்தை யோசிக்காமல் கெட்டி தட்டிப் போன சாதீய மனங்களின் பிரதிபலிப்பு

"நீங்க நீங்களா இருக்க வரைக்கும், நாங்க நாயா இருக்கணும்னு நினைக்கும் வரைக்கும் எதுவும் மாறாது" - அடிமைத்தனத்தை, வேறுபாட்டை, அவமானத்தை, வலியை சுமந்திருக்கும் ஒடுக்கப்பட்ட முதல் தலைமுறை கல்லூரி மாணவனின் விரக்திக் குரல்

"என்னை போலீஸ் அடிச்சதை ஊருக்குள்ள சொல்லாத. இவன் நமக்காகப் பேசுவான்னு நம்புற நம்ம மக்களுக்கு நம்பிக்கை போயிரும். அப்புறம் ஒருத்தனும் பேசவே துணிய மாட்டாய்ங்க" - ஆர்.கே.ஆர்.ராஜா பாத்திரம் பேசும் இந்த வார்த்தைகள் தன் மக்களுக்காக துணிவை வளர்த்துக் கொண்டு ஆபத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொரு உண்மையான போராளியின் மனஓட்டம்

பரியேறும் பெருமாள், சாதிக் கொடுமைகள் குறித்தும் சாதி வேற்றுமை, சமூக நீதி குறித்தும் பேசிய பல தமிழ்ப் படங்களிலிருந்து வேறுபடுவது இந்த விவாதங்களால்தான். 'என்னை நீ அடக்கினாய், உன்னை நான் அடக்குவேன்' என்ற வன்மம் தவிர்த்து, 'வா ஒன்றாக அமர்ந்து டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்... என்ன வித்தியாசம்? அதை களையலாம்' என்று அழைக்கிறான் இயக்குனர் மாரி செல்வராஜின் 'பரியன்' என்கிற 'பரியேறும் பெருமாள்'. இதற்காகவே மாரியை மலர் கொடுத்து வரவேற்கலாம்.

ADVERTISEMENT



ஒடுக்கப்பட்ட சாதிக்காரர்கள் அதிகம் வசிக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பரியேறும் பெருமாள் B.A., B.L, (மேல ஒரு கோடு) திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். கதிர் படிக்கும் அதே வகுப்புத் தோழி ஜோ (எ) ஜோதி மகாலக்ஷ்மியாக ஆனந்தி. இருவரும் நட்பாகப் பழகி, அவர்களின் அன்பு அடுத்தகட்டத்திற்கு செல்ல முற்படும் சமயத்தில் கதிர் எதிர்கொள்ளும் சாதி ஆணவத் தாக்குதல், கல்லூரி மாணவர்களிடையே ஆழமாக ஊன்றியிருக்கும் சமூக அரசியல் பிளவுகள், இதனால் ஒரு முதல் தலைமுறை மாணவன் அடையும் உளவியல் வலி, எதிர்கொள்ளும் விதம் என இதுவரை தமிழ் சினிமா பேசாத பல பொருள்களை பேசியிருக்கிறது 'பரியேறும் பெருமாள்'.

2005ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையில் திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் சந்திக்கும் ஏற்ற தாழ்வுகளையும், சவால்களையும், அவமானங்களையும் அப்படியே கண்முன் நிறுத்தி, மேடையில் நின்று பேசும் பிரச்சாரமாக இல்லாமல் அருகில் வந்து பேசியிருக்கிறது படம். அடர்த்தியான விஷயங்கள் இருந்தாலும் காட்சிப்படுத்துதலில் அழகு, இயல்பான நகைச்சுவை, சுவாரசியமான வாழ்வியல் என ஒரு திரைப்படமாகவும் திருப்தியளிப்பது பரியேறும் பெருமாளின் வெற்றி. பரியனின் தேவதைகளாக வரும் டீச்சர்கள், ஆனந்தி பாத்திரம், அந்த சூழலிலும் சாதியை மனதில் வைத்துப் பழகாத நண்பன் ஆனந்த்தாக வரும் யோகிபாபு என தன் குருவான இயக்குனர் குரு ராமின் தடங்கள் மாரி செல்வராஜிடம் தெரிகின்றன. ரயில் தண்டவாளக் காட்சி தருமபுரி இளவரசனுக்கு அஞ்சலி. கல்லூரி முதல்வர் பாத்திரம் அம்பேத்கரின் வழித்தோன்றல். படம் முடியும் விதம், திரைப்படக் கலையை சமூகத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதன் உச்சம். ஒவ்வொரு கொலையும் மரணமும் மறுநாள் நாம் செய்தியாகப் படிக்கும்போது எப்படி மாறிப்போகிறது என்பதைக் காட்டியது புத்திசாலித்தனம்.

ADVERTISEMENT



ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனதின் அடையாளமாக 'கருப்பி' நாயின் பாத்திரப் படைப்பு திரை மொழியின் சாத்தியங்களை உணர்த்தியுள்ளது. ஆனால், 'கருப்பி' பாத்திரம் ரசிகர்களுக்கு நெருக்கமாகும் முன்னரே சற்று அவசரமாக முடித்துவைக்கப்பட்டது போல உணர்வு. பரியனின் தந்தையாக கிராமிய கலைக் குழுவில் பெண் வேடமணிபவர் பாத்திரம் இதுவரை நாம் அடைந்திராத அதிர்வை அளிக்கிறது. தன் தந்தை கவுன்சிலர் என்பதை கல்லூரியில் பயன்படுத்த முயன்று தோற்கும் யோகி பாபுவின் காமெடியும், ஒரு காட்சியில் மட்டுமே வந்து அரங்கையே சிரிக்க வைத்த சண்முகராஜனின் காமெடியும் சரியான ஆசுவாசம்.

பிரச்சனை உச்சகட்டத்திற்கு சென்றாலும் அதை உற்ற நண்பனிடம் கூட பகிராத பரியனின் (கதிர்) மனநிலை, தன் குடும்பமும் உறவுகளும் இத்தனை சாதி உணர்வு உள்ளவர்கள் என்பது குறித்த தெளிவில்லாமல் அவர்களிடமே எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசும் ஜோதி மஹாலக்ஷ்மி (ஆனந்தி) பாத்திரம் ஆகியவை சற்று குழப்பமாக இருக்கின்றன.

பரியனாக நடித்திருக்கும் கதிர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவனுடைய கோபத்தையும், அவமானத்தையும், ஏமாற்றத்தையும், எதிர்த்து நிற்கும் திமிரையும் தேவையான இடத்தில் தேவைக்கேற்ப காட்டி தனக்குக் கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளார். குறிப்பாக தோழி வீட்டு திருமணத்தில் அவர் சந்திக்கும் அவமானத்தையும் கல்லூரியில் பெஞ்ச் மாறி உட்காரும் இடத்திலும் நடிப்பில் அசத்தியுள்ளார். கதிரின் தேவதையாக வரும் ஆனந்தி, ஆரம்பத்தில் நமக்கும் தேவதையாகத் தோன்றுகிறார். காட்சிக்குக் காட்சி கள்ளமில்லா நடிப்பில் அழகாய் மிளிர்ந்துள்ளார். இத்தனை நாள் பார்த்த யோகிபாபு, இதில் புதிதாக இருக்கிறார். நடிப்பில் அவரின் எல்லையை அழகாய் விரிவுபடுத்தியுள்ளார் மாரி செல்வராஜ். இவர்களுக்கு அடுத்தபடியாக மறக்க முடியாத பாத்திரத்தில் கராத்தே வெங்கடேசன் 'தாத்தா'வின் மிரட்டலான நடிப்பு நம்மை பயமுறுத்துகிறது. சத்தமில்லாமல் ஆயுதமில்லாமல் நம்மை மிரட்டி மனதில் நிற்கிறது இந்த வில்லன் பாத்திரம். கல்லூரி முதல்வராக 'பூ' ராமு, ஆனந்தியின் தந்தையாக மாரிமுத்து இருவரும் இருவேறு சமூகங்களின் சரியான அடையாளங்களாக பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.



சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரியனின் வலியையும் கோபத்தையும் உரத்த குரலில் பேசுகிறது. ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் படத்தின் பெரும்பகுதி காட்சிகளை கிம்பில் தொழில்நுட்பம் மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். திருநெல்வேலி சட்டக் கல்லூரியில், புளியங்குளத்தில், அந்த ரயில் தண்டவாளத்தில் என அத்தனை இடங்களிலும் நாமும் நேரில் நின்று பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியுள்ளார் ஸ்ரீதர்.

பல நூற்றாண்டு வலியை வெறும் சத்தமாக, யுத்தமாக சொல்லாமல் ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக, உரக்க, அதே நேரம் பொறுமையாகப் பேசியிருக்கிறான் பரியேறும் பெருமாள். ஒரு முக்கியமான திரைப்படத்தை தயாரித்திருக்கிறார் பா.ரஞ்சித்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT