ADVERTISEMENT

பழச மறக்காத பாரதிராஜா... மருத்துவமனைக்கு பெயரைச் சூட்டி பெருமைப்படுத்திய தயாரிப்பாளர் 

03:55 PM Jan 29, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பாரதிராஜா குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய கடலோரக்கவிதைகள் திரைப்படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது. சத்யராஜ் நாயகனாக நடித்த அந்தப் படத்தில்தான் ரேகா கதாநாயகியாக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கிய மிகச்சிறந்த படங்களில் ஒன்று கடலோரக்கவிதைகள். வடுகநாதன் என்பவரும் பாரதிராஜாவின் மைத்துனர் ஜெயக்குமாரும் இந்தப் படத்தை முதலில் தயாரித்தார்கள். படத்தின் பணிகள் பாதி முடிந்த நிலையில், டாக்டர் நடேசன் என்பவரையும் தயாரிப்பாளராக சேர்த்துக்கொள்கிறார் பாரதிராஜா. தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவரான டாக்டர் நடேசனுக்கு பாரதிராஜா நல்ல பழக்கம். திடீரென டாக்டர் நடேசனையும் படத்தில் தயாரிப்பாளராகச் சேர்த்துக்கொண்டது ஏன்?

பாரதிராஜா தன்னுடைய ஆரம்பக்காலங்களில் நிறம் மாறாத பூக்கள் என்று ஒரு படத்தை இயக்கினார். அந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருந்த சமயத்தில் டாக்டர் நடேசன், தான் தயாரிப்பாளராக விரும்புவதாகவும் எனக்கு நீங்கள் ஒரு படம் இயக்க வேண்டும் என்றும் பாரதிராஜாவிடம் கூறியுள்ளார். அப்போது ஒரு லட்ச ரூபாயை அட்வான்ஸாகவும் கொடுத்துள்ளார். இது 80களில் நடக்கிறது. அப்படியே காலங்கள் ஓடுகின்றன. ஆனால் அவருடைய தயாரிப்பில் படம் இயக்குவதற்கான சந்தர்ப்பம் பாரதிராஜாக்கு அமையவேயில்லை. அவரிடம் ஒரு லட்சம் அட்வான்ஸ் வாங்கியிருக்கோம், ஆனால் படம் எதுவும் எடுத்துக்கொடுக்கவில்லையே என்று பாரதிராஜா நினைத்துக்கொண்டே இருந்தார்.

நடேசனின் தங்கைக்கு திருமண ஏற்பாடு நடந்தது. அப்போது அவரிடம் சென்று இரண்டு லட்ச ரூபாயை பாரதிராஜா கொடுத்துள்ளார். நான் உங்களிடம் ஏற்கனவே ஒரு லட்சம் அட்வான்ஸ் வாங்கியிருந்தேன், ஆனால், படம் எடுத்துக் கொடுக்கவேயில்லை. இப்போது கூடுதலாக ஒரு லட்சம் சேர்த்து இரண்டு லட்சமாகத் தருகிறேன். உங்கள் தங்கை திருமணத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று பாரதிராஜா கூறினாராம். அதோடு மட்டுமில்லாமல், கடலோரக்கவிதைகள் படத்தில் அவரை ஒரு பார்ட்னராகவும் சேர்த்துக்கொண்டார். அந்தப் படத்தில் கிடைத்த லாபத்தில் இருந்து அவருக்கு ஏழு லட்ச ரூபாய் ஷேர் கொடுத்தாராம்.

அந்த ஏழு லட்சத்தை வாங்கிக்கொண்ட டாக்டர் நடேசன், அந்தப் பணத்தில் இடம் வாங்கி ஒரு மருத்துவமனையை உருவாக்குகிறார். அப்படி உருவான மருத்துவமனைதான் பி.ஆர். ஹாஸ்பிட்டல் என்று அறியப்படும் பாரதிராஜா மருத்துவமனை. பாரதிராஜா மருத்துவமனை என்றவுடன் அதற்கு பாரதிராஜாதான் உரிமையாளர், அவர்தான் சொந்தமாக நடத்துகிறார் போல என்று பலர் நினைக்கிறார்கள். முதலில் நானும்கூட அப்படித்தான் நினைத்தேன். தயாரிப்பாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டு தனக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்த ஒருவரை நினைவு வைத்து பின்னாளில் கடலோர கவிதைகள் படத்தை இயக்கும்போது அவரைத் தயாரிப்பாளராக்கி அவருக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை ஷேராக பாரதிராஜா கொடுத்தது பெரிய விஷயம். அதேபோல, அதை வாங்கிய டாக்டர் நடேசன் தன்னுடைய பெயரில் மருத்துவமனை ஆரம்பிக்காமல் பாரதிராஜா பெயரில் மருத்துவமனை ஆரம்பித்தது அதைவிட பெரிய விஷயம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT