ADVERTISEMENT

பஸ் ட்ரைவரின் மகன்... இந்தியாவே கொண்டாடும் ராக்கி பாய்!

11:02 AM Jan 08, 2021 | santhoshkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒரு தனியார் விருது வழங்கும் மேடையில் கன்னட நடிகர் யஷ், “கன்னட சினிமாவும் ஒருநாள் இந்தியாவில் பெரிதாக பேசப்படும்” என்று உரக்க பேசினார். அவர் பேசியபோது அங்கிருந்த பல திரைத்துறை பிரபலங்களுக்கும், பல இந்திய மொழி பேசும் சினிமா ரசிகர்களுக்கும் யஷ் என்பவர் யாரென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி யஷ் பேசிய பிறகு அவரது நடிப்பில் உருவான ‘கே.ஜி.எஃப்’ படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. வெளியான அனைத்து மொழிகளிலும் யஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’ படத்தைப் பார்த்தவர்கள் ரசித்தனர். ‘பாகுபலி’க்குப் பிறகு இந்தியா முழுவதும் வெற்றியைக் கண்ட ஒரு படமாக ‘கே.ஜி.எஃப் சாப்டர் 1’ மாறியது. கன்னட சினிமாவின் பிஸினஸ் என்பது ‘கே.ஜி.எஃப்’ படம் வெளியாகுவதற்கு முன்பாக 50 கோடியாக இருந்தது. ஆனால், ‘கே.ஜி.எஃப்’ படம் வெளியாகி கிட்டத்தட்ட 250 கோடி வரை வசூல் ஈட்டியது. தற்போது உருவாகி வரும் ‘கே.ஜி.எஃப் 2’-வின் பிஸினஸ் 500 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை நிரூபணம் செய்யும் வகையில், யஷ்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு திடீரென வெளியான டீஸரை இந்தியா முழுவதிலுமுள்ள பல மொழி பேசும் ‘கே.ஜி.எஃப்’ ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கன்னட சினிமா ரசிகர்களுக்கு மட்டும் ‘ராக்கிங் ஸ்டார்’ என்று அறியப்பட்டு கொண்டாடப்பட்ட யஷ், தற்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதற்குப் பின்னால் பத்து வருடத்திற்கு மேலான உழைப்பு இருக்கிறது. ஹஸன் மாவட்டத்திலுள்ள நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் நவீன் குமார் கௌடா என்னும் யஷ். இவருடைய தந்தை கர்நாடகா அரசு பஸ் ட்ரைவர், தாய் குடும்பத் தலைவி. மைசூரில் பியூசி படிப்பை முடித்த பின்னர், நடிப்பின் மீது ஆர்வத்தின் காரணமாக பெங்களூருவிலுள்ள ட்ராமா ட்ரூப் ஒன்றில் இணைந்துகொண்டு நடிப்பைக் கற்றுக்கொண்டார். ஒரு நேர்காணலில் எப்படி நீங்கள் சாதாரணமாக இருக்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “என்னுடைய அப்பா ஒரு பஸ் ட்ரைவர். நான் இவ்வளவு சம்பாதித்தும் இன்றும் அவர் பஸ் ட்ரைவராக பணிபுரிகிறார். இதுதான்...” என்று பதிலளித்தார். ‘கே.ஜி.எஃப்’ ரிலீஸ் சமயத்தில் ராஜமௌலி இந்த பட விழாவில் கலந்துகொண்டபோது, “நான் கேள்விபட்டேன் இன்றும் யஷ்ஷின் தந்தை பஸ் ட்ரைவராக பணிபுரிகிறார். என்னைப் பொறுத்தவரை யஷ் ஹீரோ அல்ல, அவரது தந்தைதான் ஹீரோ” என்றார்.

யஷ் ஒரே இரவில் நடிகராக நடிக்கத் தொடங்கி கன்னட சினிமாவின் உட்சநட்சத்திரமாக மாறவில்லை. தொடக்கத்தில் டிவி சீரியலில் நடித்தார். அதன் மூலம் கவனம் பெற்றவர். அதன்பின் சினிமாவில் துணை நடிகராக பல படங்களில் நடித்து, பின்னர் ஹீரோவாகி கன்னட சினிமாவில் தனக்கான சாம்ராஜ்யத்தைப் பிடித்தார். விவசாயிகளுக்கு, உதவி தேவை என்பவர்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை யஷோ மார்கோ அறக்கட்டளையின் மூலம் செய்து வருகிறார். கொப்பல் மாவட்டத்தில் வறட்சியினால் கஷ்டப்பட்டு வந்த விவசாயிகளின் கஷ்டத்தைப் போக்க, சுமார் நான்கு கோடி செலவில் ஏரியை தூர்வாரி கொடுத்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் கர்நாடகா - தமிழ்நாடு என்றாலே காவிரி பிரச்சனை, மொழி பிரச்சனை போன்றவை நினைவுக்கு வரும். யஷ் தமிழ்நாட்டிற்கு ‘கே.ஜி.எஃப்’ பட புரோமோஷனுக்காக வந்த சமயத்தில் அவர் தெளிவான தமிழில் பேசி தமிழ் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். இரண்டு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனை குறித்து பேசியவர், “இதெல்லாம் பழைய ஆட்களுடைய அரசியல், நாம எல்லாரும் இளைஞர்கள், அதையெல்லாம் மறந்து நாம ஒன்னாகணும்”என்று தைரியமாக பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT