ADVERTISEMENT

'எல்லா மொழிகளிலும் உள்ள நிறைய பேய் படங்கள் பார்த்தேன்' - இருட்டு பற்றி வி.இசட். துரை

02:35 PM Nov 05, 2018 | santhosh

ADVERTISEMENT

சுந்தர் சி, தன்ஷிகா, ஷாக்ஷி பர்விந்தர் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் 'இருட்டு'. வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தை வி.இசட். துரை இயக்கிவருகிறார். மேலும் இப்படம் குறித்து அவர் பேசும்போது... "இருட்டு’, ஏற்கனவே வெளியான பேய் படம், திகில், த்ரில்லர் போன்றில்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அதாவது கற்பனையாக நமது நிஜ வாழ்வில் ஒரு பேயோ, பிசாசோ இருந்தால் எப்படி இருக்கும் என்பது பற்றி வந்திருக்கும். அல்லது யாரோ ஒருவரால் கொல்லப்பட்டு, இன்னொருவரின் உடம்பில் புகுந்து தன்னைக் கொன்றவர்களை பழி வாங்கும்படியாக அமைந்திருக்கும். ஆனால், இப்படம் முற்றிலும் வித்தியாசமாக இதுவரை வந்த எந்த கதையம்சங்களோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத வகையில் இருக்கும். மேலும், வித்தியாசமான கதை என்றில்லாமல் வித்தியாசமான கருத்தைத் தாங்கி கொண்டு வரவிருப்பதால் இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு அவரவர் தங்கள் நிஜ வாழ்க்கையோடு தொடர்பு ஏற்படுத்தியோ, ஒப்பீடு செய்தோ பார்க்கும் வகையில் இருக்கும். பேய் இருக்கிறதா? இல்லையா? என்றொரு விவாதம் நடந்துக் கொண்டிருந்தாலும், அதைவிட பயங்கரமான சம்பங்கள் நடந்திருக்கிறது என்று ஒரு சாரரும், அது எப்படி நடந்திருக்க முடியும்? என்று ஒரு சாரரும் விவாதம் நடத்தும் அளவிற்கு இப்படமாக இருப்பதே இதன் சிறப்பம்சம்.

ADVERTISEMENT

முதலில் நானும் சுந்தர்.சியும் ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தவுடனேயே, சுந்தர்.சி நீங்கள் ஒரு திகில் படம் தான் இயக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், எனக்கு அது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது. ஏனென்றால், எனக்கு திகில் படம் என்றால் பயம். ஆகையால் நான் இதுவரை ஒரு பேய் படம் கூட பார்த்தது கிடையாது. இருப்பினும், சுந்தர்.சி உங்களுக்கு இயக்கும் திறமை நன்றாக இருக்கிறது. நீங்கள் திகில் படம் இயக்கினால் நிச்சயம் வெற்றிபெறும் என்று ஊக்கப்படுத்தினார். அவர் கொடுத்த ஊக்கத்தினால் தான் நான் ‘இருட்டு’ இயக்க சம்மதித்தேன். அதன்பிறகு, எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும் உள்ள நிறைய பேய் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அனைத்துப் படங்களுமே மக்களை சந்தோஷப்படுத்தும் வகையில்தான் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இதிலிருந்து சற்று வித்தியாசமாகவும், முற்றிலும் வேறுபாடு உள்ளதாகவும் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் காரணமாக யோசிக்கும்போதுதான் இப்படத்தின் கருத்து உதித்தது. அந்தக் கருத்து எல்லோருடைய வாழ்விலும் ஒன்றி போகும் விதமாகவும் இருக்கவே, சுந்தர்.சியிடம் கூறினேன். அவருக்கும் மிகவும் பிடித்து போகவே, ரொம்ப நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அதன்பின் படப்பிடிப்பை ஆரம்பித்தோம்.

சுந்தர்.சி இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வருகிறார். இயக்குநராக இருந்தாலும், இப்படத்தின் கதாபாத்திரத்திற்கேற்ப தன்னுடைய நடை, உடை, உடல்மொழி அனைத்தையும் மாற்றிக் கொள்ள பயிற்சி மேற்கொண்டார். இவருடைய மனைவியாக ஷாக்ஷி பர்விந்தர் நடிக்கிறார். தன்ஷிகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது சினிமா வாழ்க்கையிலே இப்படமும், இப்படத்தில் வரும் தனது கதாபாத்திரமும் யாராலும் மறக்க முடியாததாக அமையும் என்றும் கூறியிருக்கிறார். முழுக்க முழுக்க திகில் படம் என்றாலும் நகைச்சுவையைத் தாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், வி.டி.வி கணேஷும் பயணிப்பார்கள். படத்தின் பெரும்பங்கு காட்சிகள் ஊட்டியில் படபிடிப்பு முடிந்த நிலையில், தன்ஷிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் சூரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில காட்சிகளே மீதம் உள்ளது. அதையும் ஊட்டியிலேயே படமாக்க முடிவு செய்திருக்கிறார்கள்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT