ADVERTISEMENT

"இதே மைக்கோட வாங்க... ஷூட்டிங் விளங்கிடும்" - விழாவில் விஜய் சேதுபதி டென்சன்

04:08 PM Aug 03, 2019 | vasanthbalakrishnan

விஜய் சேதுபதி... ரசிகர்களுக்கும் சக நடிகர்களுக்கும் செல்ல நாயகன். படப்பிடிப்பிலோ விழாக்களிலோ ரசிகர்கள் அணுகினால் அவர்களுடன் பொறுமையாகப் பேசி, கட்டி அணைத்து செல்ஃபீ எடுத்துக்கொள்வார். உடன் நடிக்கும் சீனியர் ஜுனியர் நடிகர்கள் மீது பேரன்பைப் பொழிவார். பேட்டிகளில் செய்தியாளர்கள் எப்படி கேள்வி கேட்டாலும் பொறுமையாகப் பதில் சொல்லும் குணம் உடையவர் விஜய் சேதுபதி. அப்படிப்பட்ட இவர் ஓரிரு தருணங்களில் சற்றே பொறுமை இழக்கும் சூழ்நிலையும் நேர்ந்துள்ளது.

ADVERTISEMENT



டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் வயாகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'துக்ளக் தர்பார்'. விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதரி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்துக்கு '96' புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை 03 ஆகஸ்ட் 2019 அன்று சென்னையில் நடைபெற்றது.

ADVERTISEMENT


நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளனை அனைவர்க்கும் அறிமுகம் செய்யும் வகையில், "டெல்லியை நான் முதலில் பார்த்தது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் காஸ்டிங் டைரக்ட்டராகத்தான். அப்போதிருந்தே டெல்லியின் வேலை மேல் எனக்கு மதிப்பு உண்டு. அவரிடம் பல கதைகள் இருக்கின்றன. எல்லாமே ரொம்ப சுவாரசியமாக இருக்கும். அதில் இந்தக் கதைதான் தயாரிப்பாளருக்கு பிடித்தது" என்று சிரித்துக்கொண்டே கூறினார். பிறகு நடிகை அதிதி குறித்தும் அவர் முன்பு ஏ.ஆர்.ரஹ்மானின் மேடையில் 'வான் வருவான்' பாடல் பாடியது குறித்தும் பாராட்டிப் பேசினார். அப்போது விஜய் சேதுபதி பயன்படுத்திய மைக் சரியாக வேலை செய்யவில்லை. அவரது பேச்சு ஒலிபெருக்கம் செய்யப்படுவதில் தடங்கல் ஏற்பட்டது. தொடர்ந்து இப்படி நடந்ததால் சற்றே பொறுமை இழந்த அவர் "இதே மைக்கை ஷூட்டிங்கிற்கும் கொண்டு வாங்க, ஷூட்டிங் விளங்கிடும்" என்று விழா ஏற்பாட்டாளர்களிடம் கிண்டலாகக் கூறினார்.

தொடர்ந்து பார்த்திபன், தயாரிப்பாளர் உள்ளிட்டவர்கள் பற்றி பேசிவிட்டு இறுதியாக "நான் வரும்போது பட்டாசு வெடிச்சாங்க. அந்த ஐடியா யார் கொடுத்ததுன்னு தெரில. அவுங்க மேல எனக்கு ரொம்ப வருத்தம்" என்று கூறி முடித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT