ADVERTISEMENT

தமிழ்ப்படம் சிவா... மொட்டை ராஜேந்திரன்... விதார்த்... டுட்டு... போதுமா இன்னும் வேணுமா? வண்டி - விமர்சனம் 

11:22 AM Nov 24, 2018 | santhosh

ADVERTISEMENT

போலீஸ் ஸ்டேஷனில் நிற்கும் அழகான RX100 வண்டி... அதன் பெயர் டுட்டு. அதற்குப் பின் மூன்று கதைகள். மூன்று கதைகளும் இணைவது ஒரு புள்ளி. முதல் கதை, விதார்த் மற்றும் அவரது இரண்டு நண்பர்களுக்குமானது. விதார்த்துக்குத் தன் காதலி சாந்தினி தமிழரசன் மூலமாக ஒரு வேலை கிடைக்கிறது. அந்த வேலைக்குத் தேவையான வண்டி, ரயில் நிலைய பார்க்கிங் செண்டரில் வேலை பார்க்கும் நண்பர் மூலமாகக் கிடைக்கிறது. அந்த வண்டியால், விதார்த்துக்கு நேரும் பிரச்சனைகள் ஒரு புறம். அடுத்து, தீபக் - ப்ரீத்தா பாத்திரங்களின் காதலும் அந்த வண்டியும் இன்னொரு கதை. மூன்றாவதாக செயின் ஸ்னாட்சிங் பசங்க மூன்று பேரும் அந்த வண்டியும் இன்னொரு கதை. இதைக் கேட்க, கொஞ்சம் சுவாரஸியமாக இருக்குல்ல? அப்படித்தான் விதார்த்தும் நம்பி உள்ளே வந்திருப்பார் போல...

ADVERTISEMENT

வேலையில்லா விதார்த் பெட்ரோல் பங்க் பணியாளர் சாந்தினியை காதல் செய்கிறார், நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கிறார்... அவர்கள் வேலைக்காரப் பெண்ணை கிண்டல் செய்கிறார்கள், டபுள் மீனிங் பேசுகிறார்கள்... ஆனால் கதையை மட்டும் நகர்த்தவே மாட்டேன் என்கிறார்கள். முதல் பாதி முழுக்க சேர்ந்து அர்த்தமுள்ளதாக இருப்பது ஓரிரு காட்சிகளே. முக்கிய பாத்திரமான விதார்த் வரும் கதையை விட மற்ற இரண்டு கதைகள் பரவாயில்லை. அதற்குக் காரணம் தேவையில்லாமல் நீண்டு கொண்டே போகாமல் அளவோடு முடிந்ததே. இதே அணுகுமுறையை விதார்த் கதைக்கும் பின்பற்றியிருக்கலாம். தமிழ்ப்படம் சிவாவின் குரலில் கதை சொன்னது, வண்டிக்கு ’டுட்டு’ என பெயர் வைத்தது, மூன்று கதைகள் ஒரு புள்ளியில் இணைவது, வண்டிக்கு ஒரு வாய்ஸ் (மொட்டை ராஜேந்திரன் மாதிரி இருக்கு) கொடுத்தது என இயக்குனர் ரஜீஷ் பாலா பல நல்ல ஐடியாக்களை படத்தில் வைத்திருந்தாலும் காட்சிகளாக்கியிருக்கும் விதம் பொறுமையை சோதிக்கிறது. இது போன்ற ஹைப்பர் லின்க் வகை கதைகள் கட்சிதமான படத்தொகுப்பு, அளவான நேரம் ஆகியவற்றில்தான் வெற்றி பெறும். அவை இரண்டுமே வீக். தேவையைத்தாண்டி ’போதும் போதும்’ என்றாலும் ’போதுமா இன்னும் வேணுமா’ என்று கேட்டு இரண்டரை மணி நேரம் ஓடுகிறது படம். ’தமிழ்ழ பேசுங்க’, ‘தமிழன்தான நீ?’ இப்படியெல்லாம் வசனங்கள் வைத்தால் கை தட்டுவார்கள் என யாரோ இயக்குனரை ஸ்ட்ராங்காக நம்ப வைத்திருக்கிறார்கள். இஸ்டத்துக்கு வருகின்றன இப்படிப்பட்ட வசனங்கள். இவர்கள் சொன்னதை இவர்களே இரண்டாம் பாதியில் மீறுகிறார்கள்.

விதார்த், சாந்தினி இருவரும் தங்கள் பங்கில் எந்தக் குறையும் வைக்கவில்லை. அந்தக் காதல் ஜோடியில் தீபக்காக வரும் விஜித் கவனம் ஈர்க்கிறார். ஜான் விஜய், அருள்தாஸ் இருவரும் தங்கள் வழக்கமான பாணியைத் தாண்டவில்லை. ’சோலோ’புகழ் சூரஜ் குருப்பின் இசை பரவாயில்லை ரகம். படத்தில் சிறப்பாக இருக்கும் சில விசயங்களில் ஒன்று ராகேஷ் நாராயணனின் கேமரா. ஒன் லைனாக சிறப்பாக இருக்கும் ஒரு கதை சிறந்த படமாக உருவாக நேர்த்தியான திரைக்கதை, அழுத்தமான காட்சிகள், அளவான ஆழமான வசனங்கள் என பல விசயங்கள் தேவை, வண்டிக்கு பெட்ரோல் மட்டுமல்லாமல் ஆயில், காத்து எல்லாம் தேவை என்பதுபோல... ரஜீஷ் பாலா, அடுத்த படத்தில் இதை கவனத்தில் கொள்வாராக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT