ADVERTISEMENT

ஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா? துப்பாக்கி முனை - விமர்சனம் 

08:20 AM Dec 14, 2018 | santhosh

ADVERTISEMENT

இன்றைய சூழலில் பாலியல் வன்கொடுமை என்பது வயது வந்த பெண்களுக்கு மட்டும் அல்லாமல் சிறு குழந்தைகளிடமும் நிகழ்த்தப்படுகிறது. அப்படி குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை என்ன என்ற கேள்விக்கு பதில் சொல்லும்படியாக வந்துள்ளது 'துப்பாக்கி முனை'.

ADVERTISEMENT

படத்தில் என்கவுண்டருக்கு பேர்போன போலீஸ் அதிகாரியாக வருகிறார் விக்ரம் பிரபு. இவர் போகுமிடமெல்லாம் குற்றவாளிகளை சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளுகிறார். இதனாலேயே இவர் இந்தியாவின் நம்பர் ஒன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக உருவெடுக்கிறார். இப்படி தினம் தினம் என்கவுண்டர் என்ற பெயரில் கொலைகள் கொலை செய்வதால் தாய், காதலி என அனைவரும் இவரைப் பிரிய, அதே நேரம் வேலையிலும் ஒரு பிரச்னை ஏற்படுகிறது. விரக்தியில் இருக்கும் விக்ரம் பிரபுவிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக புதிய கேஸ் ஒன்று வருகிறது. அந்த கேஸில் குற்றம் என்ன, குற்றவாளி யார், தண்டனை என்ன என்பதை இயக்குனர் தினேஷ் செல்வராஜ் நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைத்து சொல்ல முயன்றிருக்கும் படம் கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் 'துப்பாக்கி முனை'.

அவரது உயரம், இயல்பான முகபாவனை, வசன உச்சரிப்பு என போலீசுக்கு உரித்தான நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார் நாயகன் விக்ரம் பிரபு. படம் முழுவதும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்திருக்கிறார். இருந்தும் உடல் மொழியில் ஏதோ குறைவது போன்ற உணர்வு. ரிடர்ன் ஆஃப் ஹன்சிகா... குறைவாக வருவதால் நிறைவாக இல்லை. பாதிக்கப்பட்ட தந்தையாக வாழ்ந்துள்ளார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். போரூர் குழந்தை ஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த்தின் மீது நமக்கு ஏற்பட்ட கோபம் மீண்டும் ஏற்படுகிறது. '8 தோட்டாக்களு'க்குப் பிறகு மீண்டும் ஒரு நிறைவான படம் அவருக்கு. படம் முழுவதும் நடிப்பில் அனுதாபத்தையும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அப்ளாஸ்களையும் அள்ளி படத்தின் முக்கிய பலமாக இருக்கிறார். மிரட்டல் வில்லன் வேல ராமமூர்த்தி, மிர்ச்சி ஷா, பரத் ரெட்டி, சங்கிலி முருகன், ஆடுகளம் நரேன் ஆகியோர் கொடுத்த வேலையை நன்றாகச் செய்துள்ளனர்.

முதல் பாதி சற்று வேகமாகவும் இரண்டாம் பாதி சற்று உணர்ச்சிப்பூர்வமாகவும் என கலந்துகட்டி கொடுத்துள்ளார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ். முதலில் இந்தக் கதை தேர்வுக்கும், கதையில் வரும் பிரச்சினைக்கு ரசிகர்கள் ஏற்கும்படி தீர்வு சொன்னதற்கும் தினேஷ் செல்வராஜிற்குப் பாராட்டுகள். கதை தேர்வை சரியாக செய்த இயக்குனர் திரைக்கதையின் வேகத்தை இன்னும் கூட்டி இருக்கலாம். சில இடங்கள் யூகிக்கக்கூடியதாக இருப்பது குறை.

படத்திற்கு மிகப்பெரிய பலம் இசையும் ஒளிப்பதிவும். இசையமைப்பாளார் எல்.வி.முத்துகணேஷ் தன் பின்னணி இசையில் காட்சிக்குக் காட்சி பிரம்மாண்டத்தைக் கூட்டி திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளார். ஒளிப்பதிவாளர் ராசாமதியின் கேமராவில் ராமேஸ்வரம் அழகாகப் பளிச்சிட்டுள்ளது, தேடல், துரத்தல் காட்சிகள் பரபரப்பாகப் பயணிக்கின்றன.

விக்ரம் பிரபுவிற்கு ஒரளவு நல்ல கம்-பேக் இந்தத் 'துப்பாக்கி முனை'.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT