ADVERTISEMENT

கரோனா இரண்டாவது அலை... தமிழக திரையரங்க உரிமையாளர்கள் எடுத்த முடிவு!

11:08 AM Apr 21, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகம் முழுவதும் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா பரவல் கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அந்த வகையில், தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நேர ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தவிர்த்து பூங்காக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, வரும் நாட்களில் வெளியாக இருந்த சில படங்களின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு காலமாக மூடியிருந்த திரையரங்குகள் சமீபத்தில் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் வேளையில், இது தொடர்பான அறிவிப்புகள் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதத்தில் வெளியாகவுள்ள டாக்டர், கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் குறித்தும் உறுதியான தகவல்கள் இல்லாததால், திரையரங்குகளை இயக்குவது குறித்து முடிவெடுக்க திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் இணையவழி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

நீண்ட நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் திரையரங்குகளை தொடர்ந்து இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிய படங்களின் வருகை இல்லாத போது ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் கர்ணன், சுல்தான் உள்ளிட்ட படங்கள் மற்றும் பழைய வெற்றிப்படங்களையும், பிற மொழி படங்களை மொழிமாற்றம் செய்து வெளியிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT