/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pirai_1.jpg)
திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் உடல்நலக் குறைவால் காலமானார் அவருக்கு வயது 65. பிறைசூடன் இயற்பெயர் சந்திரசேகர்.அவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர்.அவரதுதந்தை காவல்துறையில் பணியாற்றியவர்.அவருக்குப் பத்து பிள்ளைகள்.
ஆம், பிறைசூடனின், உடன்பிறந்தோர் ஏழு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் .பிரபல ஒளிப்பதிவாளர் மதி பிறைசூடனின் தம்பி. மதி தமிழில் சில படங்கள் பணியாற்றிவிட்டு இப்போது தெலுங்கில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கிறார்.
தனது சொந்த ஊரான நன்னிலத்துக்கு இயக்குநர் சிகரம் கே .பாலச்சந்தர் வந்தபோது, அவரை, பிறைசூடன் போய்ச் சந்தித்திருக்கிறார். பிறைசூடன் தமிழில் மட்டுமல்ல ஜோதிடக் கலையிலும் ஆர்வம் உள்ளவர், ஜோதிடம் பற்றி பாலசந்தரிடம் பேசியபோது பாலச்சந்தரின் மனம் கவர்ந்து விட்டார்.பிறைசூடனின் தமிழ் ஆர்வத்தையும் கவியார் வித்தையும் கண்ட பாலச்சந்தர் திரைப்படத்துறைக்கு வரலாமே என்று அழைத்திருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1-90-1024x664.jpg)
அவர் சென்னைக்கு போவது என்று முடிவெடுத்தபோது கிராம நிர்வாக அலுவலர் என்ற அரசுப் பணி வந்து இருக்கிறது. நான் கவிஞராகவே வாழ்க்கை அமைத்துக் கொள்வேன் என்று அப்படி அரசு வேலையை உதறிவிட்டுச் சென்னை வந்தவர்தான் பிறைசூடன்.
1985ஆம் ஆண்டு வெளியான 'சிறை' திரைப்படத்தில் ராசாத்தி ரோசா பூவே என்ற பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு இதயம், பணக்காரன், அமரன் ,கேப்டன் பிரபாகரன் ,ராசாவின் மனசிலே ,அரண்மனைக்கிளி தாயகம் போன்று சுமார் 400 படங்களுக்கு ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். அது மட்டுமல்ல ஏராளமான பக்திப் பாடல்களும் எழுதியிருக்கிறார்.
தொலைக்காட்சிதொடர்களுக்கும் பாடல் எழுதியுள்ளார்.மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ. ஆர் .ரகுமான், தேனிசைத் தென்றல் தேவா உள்ளிட்ட மூத்த இளைய இசையமைப்பாளர்கள் பலருடனும் பணியாற்றியவர். என் ராசாவின் மனசிலே, தாயகம் படங்களுக்காக தமிழக அரசின் விருதையும் பெற்றவர் .தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் கலைச்செல்வம் விருதையும் பெற்றுள்ளார். மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் இவருக்குக் கவிஞானி என்ற பட்டம் வழங்கினார். தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து பணியாற்றியவர்.
இனிய வரும் பழகுவதற்கு எளியவருமான பிறைசூடன்,சிறையில் ராசாத்தி ரோசாப்பூ என்று எழுதத் தொடங்கியவர்,
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தின் உயிரின் உயிரே ,
' கேளடி கண்மணி ' படத்தின் தென்றல் தான் திங்கள் தான், ' சிறையில் பூத்த சின்ன மலரில் ' எத்தனை பேர் உன்னை நம்பி,
'அரங்கேற்ற வேளை ' யில் ,
குண்டு ஒன்னு வச்சிருக்கேன், 'பணக்காரன் ' காதல் செய்யும் நேரம் இது,
'மாப்பிள்ளை ' யில்
வேறு வேலை உனக்கு இல்லையே,
'ராஜாதி ராஜா 'வில்
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா,
'என் ராசாவின் மனசிலே ' யில் சோலைப் பசுங்கிளியே
'அரண்மனைக்கிளி' யில் நட்டு வச்ச ரோசாச் செடி ,'செம்பருத்தி ' யில் நடந்தால் இரண்டடி,
'மை டியர் மார்த்தாண்டன்' படத்தில் ஆ அழகு நிலவு, என எத்தனையோ படங்களுக்குப் புகழ்பெற்ற பாடல்கள் எழுதினாலும் அவர் எப்போதும் எளிமையானவராக இருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pirai1.jpg)
அவரது எளிமையான தோற்றமே திரை உலகின் தட்ப வெட்ப நிலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவரை மேலே கொண்டு செல்லாமல் தடுத்தது என்று சிலர் கூறுவார்கள். தன்னை வெளிப்படுத்திய அளவிற்கு வியாபாரம் செய்யத் தெரியாதவர் அவர் என்பார்கள் .வாழ்க்கை மீது எந்தப் புகாரும் இல்லாதவர். எளிமையான கவிஞராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
பிறைசூடன் பற்றிய எதிர்மறைக் கருத்துக்கள் எதுவுமே இருந்ததில்லை அப்படி ஒரு நேர்நிலை வாழ்க்கை வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவ்வகையில் இவ்வுலகியல் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
அவர் வாழ்க்கை கூறுவது இந்த சமூக நல்லிணக்கத்தைத்தான்.
பிறைசூடன் மறைவுக்கு சாதாரண திரைக் கலைஞர் முதல் தமிழக முதல்வர் வரை இரங்கல் செய்தியுடன் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.இதுவே அவரது வாழ்க்கையின் பயன் என்று கூறலாம். பிறைசூடன்திரைப்படக் கவிஞர் என்று அறியப்பட்டாலும் ஏராளமான பக்தி பாடல்களும் எழுதியுள்ளார். ஏராளமாக ஆன்மீக சொற்பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளார்.
சங்க இலக்கியத்திலும் பக்தி இலக்கியத்திலும் அவருக்கு ஆழமான ஈடுபாடு உண்டு.சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார். ஆன்மீகம் தத்துவம் பற்றிய புரிதல் இருந்ததால் சினிமாவில் அவர் பணத்தைத் துரத்தும் வேலையைச் செய்யவில்லை. மனிதர்களால் ஆனதுதான் வாழ்வு பணத்தால் ஆனதல்ல என்பதே அவர் வாழ்க்கை கூறும் செய்தியாகும்.
- அபூர்வன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)