Skip to main content

“தமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது”- நடிகர் ராஜ்கிரண் காட்டம்!

Published on 30/06/2020 | Edited on 30/06/2020

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளைத் திறந்ததாகக்கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

 

கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாகவும், அரசின் விதிமுறைகளின்படி, குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது இந்தச் சம்பவத்திற்குப் பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசியல் செல்வாக்கு மிக்கவர்களிடம் பவ்யம் காட்டி, சலாம் போடும் காவல் துறையினரில் ஒரு பகுதியினர், சாமானிய மக்களிடம், அத்துமீறி, அராஜகத்தின் உச்சத்துக்கே சென்று விடுகின்றனர்.

 

இவர்களுக்கு பக்கபலமாக, சான்றிதழ் கொடுக்க வேண்டிய மருத்துவர்களும், சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டிய நீதிபதிகளும், சிறையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய சிறைத்துறை அதிகாரிகளும், தங்களின் கடமைகளை மறந்து, உடந்தையாகி விடுகிறார்கள்.

 

இதற்கு, அவர்களுக்குச் சட்டம் தெரியாதது மட்டுமல்ல, அப்படியே ஏதாவதொன்று ஆனாலும், அரசியல்வாதிகளின் தயவால், சட்டத்தை தம் போக்குக்கு வளைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணமும் தான், இம்மாதிரியான கயமைத்தனங்களுக்கு மூல காரணம்.

 

சாத்தான் குளம் சம்பவத்துக்கும் இதுதான் அடிப்படை. இதைப் போன்ற பல சம்பவங்கள் நடந்திருந்தாலும், எதிலும் அவர்கள் தண்டிக்கப்படாததால் ஏற்பட்ட குருட்டுத் தைரியம்தான்,  அவர்களை எல்லை மீறி போக வைக்கிறது.

 

அதனால்தான், "குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் அடிப்படையில் கைது செய்து, அவர்களை நீதி மன்றத்தில் நிறுத்துவதுதான் நம் வேலை" என்பதை இவர்கள் மறந்து பல காலங்களாகிவிட்டன.

 

சாத்தான் குளம் படுகொலைகளுக்குப் பின்பு, காவல்துறையின் மிக உயர்ந்த பொறுப்புக்களில் இருக்கும், பல நேர்மையான அதிகாரிகள், இவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, "காவல் துறையினரின் வேலை என்ன, அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்" என்பதைத் தெள்ளத்தெளிவாக அறிவுறுத்தி, பேட்டிகள் கொடுத்த பின்பும், கீழ்மட்டத்திலுள்ளவர்கள் அதை மதிக்காமல், சமூக வலைத்தளங்களில் மீண்டும் திமிர்த்தனமாக பதிவுகள் இடுவதைப் பார்க்கும் பொழுது, தமிழக காவல் துறை, யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதை, ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.

 

http://onelink.to/nknapp

 

சாத்தான் குளத்தில் படுகொலை செய்யப்பட்ட, தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரின் ஆத்மாவும், கருணை மிகுந்த இயேசுபிரானின் நிழலில் இளைப்பாறி அமைதியடையவும் அவர்களை அநியாயமாக இழந்து தவிக்கும், அவர்களின் குடும்பத்தினரும், சொந்தபந்தங்களும், நண்பர்களும், மீள முடியாத வேதனையிலிருந்து மீண்டு வரவும், இந்தப் படுகொலைகளுக்கு நீதி வேண்டியும், எல்லாம் வல்ல இறைவனிடம் கண்ணீர் மல்க பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"என்னுடன் போராட்டத்துக்கு வந்தாரா?" - ராஜ்கிரண் கருத்துக்கு சீமான் பதில்

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

seeman about rajkiran

 

மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியது வைரலானது. அவர் பேசியது, "பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரிலிருந்து யாரும் நமக்கு ஓட்டு போடப் போவதில்லை. இங்கே இருக்கிற கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்லை. நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று, அது சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாட்டில் நடந்த அநீதி அக்கிரமத்துக்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய கிறித்துவ மக்கள் தான்" என்றிருந்தார். 

 

இது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாற நடிகர் ராஜ்கிரண் பதிவு வைரலானது. அந்தப் பதிவு, "இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளைப் பிற சமுதாயத்தினருக்கும் செய்துகொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...

 

இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம் என்ற கொள்கையினால்., பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையை விட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்... இந்தப் பொறுமையை, தவறாகப் புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்நிலையில் ராஜ்கிரண் கருத்து குறித்து சீமான் பேசியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியது, "என்னுடைய வலி அவருக்கு இருக்கிறதா. அது பற்றி பேச தேவையில்லை. சிஐஏ போராட்டத்துக்கு என்னுடன் உடன் வந்தாரா. முத்தலாக் தடை சட்டத்திற்கு வீதியில் நின்றாரா. அவர் வயதில் பெரியவர், நான் மதத்தை பற்றி பேசிவிட்டதாக நினைக்கிறார். ஆனால் என்னுடைய முழு பேச்சை கேட்டாரா என தெரியவில்லை. சிறிய காணொளியை மட்டும் பார்த்துவிட்டு முடிவெடுக்க கூடாது. அவருக்கு என்னை திட்டுவதற்கோ, கோபப்படுவதற்கோ உரிமை இருக்கிறது" என்றார்.  

 

 

Next Story

"விளைவு மிக மோசமாயிருக்கும்" - எச்சரித்த ராஜ்கிரண்

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

rajkiran viral post

 

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இந்த சூழலில் மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான், "பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரிலிருந்து யாரும் நமக்கு ஓட்டு போடப் போவதில்லை. இங்கே இருக்கிற கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்லை. நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று., அது சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாட்டில் நடந்த அநீதி அக்கிரமத்துக்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய கிறித்துவ மக்கள் தான்" எனப் பேசியிருந்தார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

 

மேலும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, "அருவருப்பான வார்த்தையை கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியதற்காக சீமான், மன்னிப்பு கேட்க வேண்டும்" எனக் கூறியிருந்தார். 

 

இதனிடையே நடிகர் ராஜ்கிரண் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவு, "இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளைப் பிற சமுதாயத்தினருக்கும் செய்துகொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...

 

இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம் என்ற கொள்கையினால்., பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்... இந்தப் பொறுமையை, தவறாகப் புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.