
சென்னை தி.நகர் பகுதியில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம் தனது வீட்டில் தங்கப் பரிசுப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஞானவேல் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் வீட்டுப் பணிப்பெண் லட்சுமி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் லட்சுமியிடம் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, நகைகளைத் திருடவில்லை எனப் பணிப்பெண் சொன்னதாக கூறப்படும் நிலையில் மீண்டும் விசாரணைக்கு இன்று வருமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையின் அடுத்தடுத்த விசாரணை காரணமாக லட்சுமி மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் லட்சுமி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதைக் கண்ட லட்சுமியின் குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகைச்சைப் பிரிவில் சிகைச்சை நடந்து வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பணிப்பெண் லட்சுமியின் மகள் மாம்பலம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் மீதும், தனது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் கொடுத்துள்ளார்.