ADVERTISEMENT

"கரோனாவுக்கு என் உடன்பிறவா சகோதரா உன்னை பறிகொடுத்துவிட்டேன்" - டி சிவா உருக்கம்!

02:44 PM May 29, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இதற்கிடையே கரோனா இரண்டாம் அலையால் சில மாதங்களாகவே விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன், பவுன்ராஜ், அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா, நிதீஷ் வீரா உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ச்சியாக உயிரிழந்துவருவது மக்களிடையே கவலையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகரும், பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட், கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர், இன்று (29/05/2021) சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 60. இவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்ற நிலையில், தயாரிப்பாளர் டி சிவா இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

"வெங்கட்.. வெங்கட்.. வெங்கட் என் வாழ்நாளில் நான் அதிகம் அழைத்த நண்பனின் பெயர். 36 வருடங்கள், ஆயிரமாயிரம் நினைவுகள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றியிலும் தோல்வியிலும் உடன் இருந்தவன். அறிவாளி, எழுத்தாளன், படைப்பாளி, நடிகன், விமர்சகன் என ஒரு மினி சகலகலா வல்லவன். யார் சொல்லி கேட்காவிட்டாலும் நான் சொன்னால் கேட்பான். ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளச்சொல்லி நான் சொல்லியும் ஊர் உறவு சொல்லியும் கேட்கவில்லை. அதுதான் ஆஜாணுபாகுவாக ஆரோக்யமாக இருந்த உன்னை கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி எங்களிடமிருந்து பிரித்துவிட்டது மட்டுமல்ல உன் எதிர்கால படைப்புகளை, திட்டங்களை, கனவுகளையும் அழித்துவிட்டது.

சினிமா மீதுதான் எத்தனை காதல் உனக்கு. ஆதாயமே இல்லாமல் இதையே சுற்றி சுற்றி வந்து சேவை செய்தாய். நட்பே வாழ்க்கை என நண்பர்களை சுற்றியே வாழ்ந்தாய். நட்பும் தமிழ் சினிமாவும் என்றும் உன்னை மறவாது நண்பனே. கரோனாவுக்கு என் உடன்பிறந்த சகோதரணை பறிகொடுத்தேன். இன்று உடன்பிறவா சகோதரன் உன்னையும் பறிகொடுத்துவிட்டேன். வெங்கட், மறக்க முடியாதடா உன்னை. மன்னித்துவிடு வெங்கட்டா. இந்த கரோனாவை எதிர்த்து உன்னை காப்பாற்ற உன் மனைவியும், உறவுகளும் நண்பர்களும், நீ நேசித்த மொத்த தமிழ் சினிமாவும் உனக்காக அப்போலோ மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு போராடியது. ஆனாலும் உன்னை மீட்க முடியவில்லையடா வெங்கட். கரோனா காலத்திலும் கடுமையாக உழைத்துவிட்டாய் வெங்கட். தெய்வத்தின் திருவடியில் நீ இளைப்பாரு. உன்னை தினம் தொட்டு வணங்கிக்கொள்கிறேன்.

டி சிவா " என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT