Skip to main content

“அதில் எந்தவொரு பிரச்சனையுமே இல்லை; ஆனால்...”- தயாரிப்பாளர் டி.சிவா!

Published on 14/09/2020 | Edited on 14/09/2020
t siva

 

 

ஏற்கனவே செயல்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ஒருசில பிரச்சனைகளால் செயல்படாமல் இருக்கிறது. இதனால் தற்போது படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து 'தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர். படம் தயாரிப்பு, பட வெளியீடு, பைனான்ஸ் சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கவே இந்த புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. 

 

இந்த சங்கத்தின் தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அண்மையில் இச்சங்கம் சார்பாக தலைவர் பாரதிராகா அறிக்கைகள் மற்றும் கோரிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

 

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலக திறப்பு விழா சென்னையில் இன்று (செப்டம்பர் 14) நடைபெற்றது. இதில் பாரதிராஜா, டி.சிவா, தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு, தனஞ்ஜெயன், சுரேஷ் காமாட்சி, லலித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

இதனை தொடர்ந்து இச்சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இச்சங்கத்தின் செயலாளர் டி.சிவா பேசுகையில், “தற்போது படம் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளைச் சரிசெய்யவே இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இயக்குனர் பாரதிராஜா தலைமையில் சிறப்பாக செயல்படுவோம். திரையரங்க உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மிகத்தெளிவான கடிதமொன்றைக் கொடுத்துள்ளார். அதற்கு தெளிவான பதில் இன்னும் வரவில்லை. அதற்கு பதில் வந்தவுடன், முறையான பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாகக் கொண்டு செல்லத்தான் நாங்களும் விரும்புகிறோம்.

 

பேச்சுவார்த்தைக்கு வரமாட்டேன் என்று சொன்னால், ஒன்றும் செய்ய முடியாது. இதை சுமுகமாகக் கொண்டுசெல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இதற்கும் ஓடிடிக்கும் சம்பந்தமில்லை. முன்பு இருந்த பிரச்சினைகளைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஓடிடிக்குப் படங்கள் கொடுப்பது எங்களுடைய உரிமை. அதற்காக ஓடிடிக்கே அனைத்து படங்களையும் கொடுப்பதாக இல்லை. எங்கள் நிலைப்பாடு இதுதான்.

 

சின்ன படங்களுக்கு திரையரங்குகளில் முன்னுரிமையே தருவதில்லை. திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சின்ன படங்களுக்கு வெள்ளிக்கிழமை ஒரு காட்சி, 2 காட்சி கொடுப்போம். ஞாயிற்றுகிழமை தூக்கிப் போட்டுவிடுவோம் என்கிறார். இப்படித்தான் பல தயாரிப்பாளர்களுடைய வாழ்க்கை பறிபோய் கொண்டிருக்கிறது. இப்படி நடக்கக் கூடாது, அனைவருக்கும் ஒரே மாதிரியான திரையரங்குகள் கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலையைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

 

இங்கும் உறுப்பினராக இருக்கலாம், தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருக்கலாம். அதில் எந்தவொரு பிரச்சனையுமே இல்லை. ஆனால், இங்கு நிர்வாகத்தில் இருப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இங்குள்ளவர்கள் யாருமே தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியே வரவில்லை. தயாரிப்பாளர் சங்கம் என்பது தாய்ச் சங்கம். அதில் எந்தவொரு மாற்றமுமில்லை. எங்கள் மரியாதை அதிலிருந்து விலகாது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்