ADVERTISEMENT

கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை நிறைவேற்றிய சூர்யா

10:31 AM Nov 15, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிவருகின்றனர்.

அந்த வகையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். அத்துடன் ராஜாக்கண்ணு மனைவிக்கு உதவி செய்யுமாறு நடிகர் சூர்யாவிடம் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து, கே. பாலகிருஷ்ணன் கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘வணக்கம் தங்களின் வாழ்த்து கடிதம் கிடைக்கப்பெற்றேன். ‘ஜெய் பீம்’ திரைப்படம் குறித்த உளப்பூர்வமான பாராட்டுக்கு மிக்க நன்றிகள். ஏழை எளிய மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது கம்யூனிஸ்ட் இயக்கமும், அந்த தத்துவத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டவர்களும் எப்போதும் துணை நிற்பதைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். இவ்வழக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பை இயன்ற வரையில் திரைப்படத்தில் முதன்மைப் படுத்தியிருக்கிறோம். நீதிபதி கே. சந்துரு மற்றும் நேர்மையான காவல்துறை உயரதிகாரி பெருமாள்சாமி ஆகியோரின் பங்களிப்பையும் பதிவு செய்திருக்கிறோம்.

மேலும் மறைந்த திரு. ராஜாகண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில், திரு. பார்வதி அம்மாள் அவர்களின் பெயரில் ‘பத்து இலட்சம்’ ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதம்தோறும் அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய் சேரும்படி செய்யலாம்.

மேலும் குறவர் பழங்குடி சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்காக உதவுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். கல்விதான் வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்திற்கு நிரந்தர தீர்வு. ஆகவேதான் 'ஜெய் பீம்' திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவி செய்தோம். மக்களின் மீதான தங்கள் இயக்கத்தின் அக்கறை மிகுந்த செயல்பாடுகளுக்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய மக்கள் களப்பணி தொடர மனப்பூர்வமான வாழ்த்துகள் " என குறிப்பிட்டுள்ளார்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT