ADVERTISEMENT

டாப் இந்தியத் திரைப்படப் பட்டியல் - சூர்யா நிறுவனம் மகிழ்ச்சி

06:45 PM Dec 21, 2023 | kavidhasan@nak…

ஐ.எம்.டி.பி என்ற இணையதளம் உலகத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு பிரபலமான இணையதளம். மேலும், ஆன்லைன் மூலம் மக்கள் அளிக்கும் புள்ளிகளை வைத்து சிறந்த படம் குறித்த பட்டியலை மக்களுக்குத் தொகுத்து வழங்குகிறது. இந்த இணையதளத்தில் டாப் இடத்தில் இடம்பெறுவது ஒரு அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதில் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளையும் ரேட்டிங்கையும் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்த இணையதளம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில், மக்களின் பெரும் கவனங்களைப் பெற்ற படங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாதம் வரை டாப் 250 இந்தியத் திரைப்படங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 12 மற்றும் 13 இடங்களில் சூர்யா நடித்த ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் இடம்பிடித்துள்ளன. இதனை இந்த இரு படங்களைத் தயாரித்த 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அவர்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர்.

ADVERTISEMENT

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘ஜெய்பீம்’. இப்படத்தில் சந்துரு என்கிற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருந்தார் சூர்யா. மேலும் மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் சிறப்பாகத் தங்களது கதாபாத்திரங்களில் நேர்த்தியான நடிப்பினைக் கொடுத்திருந்தார்கள். இசைப் பணிகளை ஷான் ரோல்டன் மேற்கொண்டிருந்தார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான படம் 'சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் 68வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் ஐந்து விருதுகளை வென்றது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT