ADVERTISEMENT

“பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர்” - சிவகார்த்திகேயன்

03:49 PM Dec 28, 2023 | kavidhasan@nak…

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் சிம்பு, “செய்தியைக் கேட்டு மனம் உடைந்தது. ரீல் மற்றும் ரியல் ஹீரோ. அவர் எப்போதும் ஒரு சகோதரனாகவே பார்க்கப்படுவார்” என அவரது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், “தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் மறைவு குறித்த செய்தி என்னை ஆழ்ந்த துயருக்குள் ஆழ்த்திவிட்டது. எத்தனையோ கோடி உள்ளங்களின் அன்புக்குச் சொந்தக்காரர், அள்ளித்தரும் பண்புக்கும், அரவணைப்பும், தலைமைப்பண்பும் தனக்கே உரிய பாணியில் கொண்ட மேம்பட்ட மனிதர். பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர், அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர். அவரது மறைவு திரை உலகம் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் ஓர் மிகப்பெரிய இழப்பு. புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் மறைவால் வாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT