ADVERTISEMENT

இரட்டை வேடத்தில் சிம்பு - வெளியான லேட்டஸ்ட் தகவல்

06:24 PM Apr 16, 2024 | kavidhasan@nak…

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தச் சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

ADVERTISEMENT

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தேர்தல் முடிந்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் லேட்டஸ்ட் தகவலின்படி, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சிம்பு வேறொரு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படத்தின் நடிகர்கள் விலகவும் இணையவுமாக தகவல் வெளியாகி வரும் நிலையில் விரைவில் தெளிவான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கமல் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT