ADVERTISEMENT

அனுமதி பெறாமல் அரசு வளாகங்களில் படப்பிடிப்பு - விஜய் ஆண்டனி படக்குழுவினரை கைது செய்த போலீசார்

08:01 PM Dec 13, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி அனைத்துத் தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி விஜய் ஆண்டனி இயக்கியும் நடித்தும் இசையமைத்தும் வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் கேமரா மூலம் 'பிச்சைக்காரன் 2' படக்குழுவைச் சேர்ந்த மூவர் அனுமதியின்றி படம் பிடித்துள்ளதாக, அந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பிற்காக சென்னை ரிப்பன் மாளிகை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கட்டடத்தை ட்ரோன் கேமரா மூலம் படம்பிடிக்க முறையாக போலீசாரிடம் அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால் அனுமதி பெறாமல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் கேமரா மூலம் படம்பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

அவர்கள் பயன்படுத்திய ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு காவல் நிலைய ஜாமீனில் விடுவித்துள்ளனர். மேலும் அரசுக்குச் சொந்தமான எல்லா இடங்களிலும் அனுமதி பெறாமல் படம்பிடித்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT