ADVERTISEMENT

ரஜினி தலைவர் என்றால் அப்போ இவர்களெல்லாம் யார்..? - சீமான் ஆவேசம் !

12:51 PM Jan 31, 2019 | santhosh

ADVERTISEMENT

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலபரணி ஒளிபதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது...

ADVERTISEMENT

"பொதுவாகவே காவலர்கள் பற்றிய ஒரு வெறுப்பு அனைவருமே இருக்கிறது. காவல்துறையில் சில குறைகள் இருக்கிறது உண்மைதான். குற்றவாளிகளை தண்டிப்பதைவிட, குற்றம் நடக்காமல் பார்த்துக்கொள்வது தான் காவல்துறையின் கடமையாக இருக்க வேண்டும். அதேசமயம் அதிகப்படியான பணிச்சுமை அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது அவர்களுக்கு பண்டிகை விழா என எந்த கொண்டாட்டங்களும் கிடையாது. ஆண் காவலர்களுக்கு நிறைய சிரமங்கள் இருந்தாலும் அவர்களை விட பெண்களுக்கு அதிகம் சங்கடங்கள் இருக்கவே செய்கின்றன. அதனால்தான் ஆண் காவலர்களுக்கு 8 மணி நேரம், பெண் காவலர்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே பணி செய்ய ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகிறோம். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது அங்கு இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது அவர்களிடம் பேசி போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்காக நானும் அமீர் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தோம். அப்போது அங்கே பாதுகாப்புக்காக வந்திருந்த பெண் காவலர்கள் எங்களைப் பார்த்து அழுதபடி நாங்கள் வீட்டை விட்டு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது மாற்றுத் துணி கூட கொண்டு வரவில்லை. எங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதுகூட எங்களுக்கு தெரியவில்லை. தயவுசெய்து இந்த போராட்டத்தை சீக்கிரம் முடியுங்கள். அப்போதுதான் நாங்கள் வீடு திரும்ப முடியும் என கெஞ்சியதை பார்த்ததும் பெண் காவலர்களின் நிலை என்னவென்று தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

காவலர்களுக்கு பணிச்சுமையைக் குறைத்து, நல்ல ஊதியம், நல்ல வீடு என அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும்போதுதான் அவர்களால் நேர்மையாக பணியாற்ற முடியும். தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி மூலம்தான் லஞ்சம் ஊழலை ஒழித்து நல்லாட்சி கொடுக்க முடியும். இந்த படம் பார்த்துவிட்டு நீங்கள் சாலையில் போகும்போது பாதுகாவலுக்கு நிற்கும் பெண் போலீசாரை பார்த்தால் உங்களுக்கு அவர்கள் மீது மிகப்பெரிய மரியாதை ஏற்படும். ஜெகன் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு இந்த படம் பார்த்துவிட்டு அது இன்னும் அதிகமானது. இவ்வளவு நல்ல கதைகளை வைத்து இருக்கும்போது, எதற்காக என் ஆளோட செருப்ப காணோம் என்கிற படங்களை எடுக்கிறாய் என்று நான் திட்டியது உண்மைதான். இந்த படத்தை சிறந்த சமூக பார்வையாளனாக பெண் காவலர்களை பற்றி ஜெகன் உருவாக்கி இருப்பதும் அதை சுரேஷ் காமாட்சி படமாக இயக்கி இருப்பதும் எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த படத்தில் பிரியங்கா நடிக்காமல் ஒரு பெரிய நடிகை நடித்திருந்தால் தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் மிகப்பெரிய மார்கெட் இந்த படத்திற்கு கிடைத்திருக்கும். ஆனால் படத்தில் அந்த கதாபாத்திரத்தை பார்க்கும்போது அந்த நடிகை தான் தெரிவார் ஆனால் அவ்வளவாக அறிமுகம் இல்லாத பிரியங்கா நடித்திருப்பதால் தான் அந்த கதாபாத்திரம் நம் மனதில் ஆழமாகப் பதிகிறது அதுதான் இந்த படத்திற்கு பலம். சினிமா ஒரு சாக்கடை என பேசிப்பேசியே தமிழ் பெண்கள் சினிமாவுக்கு வருவதை தடுத்துவிட்டார்கள்.. சீரியலில் நடிக்க வரும் பெண்கள் கூட சினிமா பக்கம் வருவதற்கு யோசிக்கிற மாதிரி சூழலை உருவாக்கி விட்டார்கள். பிரியங்காவை போன்ற பெண்களைப் பார்த்து இனி பலரும் சினிமாவிற்கு வர ஆரம்பிப்பார்கள். இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பார்த்தால் அதில் பேசும் அனைவரும் ரஜினி பற்றி பேசும்போது, தலைவருடன் நடித்தேன்.. தலைவருடன் பேசினேன்.. தலைவருக்காக கதையை தயார் செய்தேன் என அவரை எப்போதுமே தலைவர் என்றுதான் கூறுகிறார்கள்.. அவர் தலைவர் என்றால் பிரபாகரன், காமராஜர், கக்கன் போன்றவர்களெல்லாம் யார்..? சினிமாவில் நடிப்பதால் மட்டுமே தலைவன் ஆக முடியாது அவர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT