Skip to main content

கரும்பு விவசாயி சின்னம் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது...- சீமான்

சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,

 

நாம் தமிழருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் வாக்கு இயந்திரத்தில் விவசாயி சின்னம் மட்டும் மற்ற சின்னங்களை விட தெளிவற்ற நிலையில் சிறியதாக பதிவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் இறுதி கட்டத்தில் எதுவும் செய்யமுடியாது என்று உச்சநீதிமன்றமும் சொல்லிருச்சு.

 

 

seeman

 

கடைசியாக இருப்பது மக்கள் மன்றம்தான் எனவே உங்கள் மூலமாக என் மக்கள்கிட்ட சின்னம் மறைக்கப்பட்டிருக்கிறது ரொம்ப சின்னதாகவும், மங்கலாகவும் உள்ளது என மக்களிடம் எடுத்தும் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

 

மத்திய, மாநில அரசின் அழுத்தத்தால் இது நிகழ்ந்திருக்கிறது என நினைக்கிறீர்களா?

 

வாய்ப்பிருக்கிறது, தென் மாநிலத்தில் போட்டியிடும் எனக்கும், பவன் கல்யாணுக்கும்  மட்டும்தான் இது. தென்மாநிலத்தில் புதிய ஆற்றலாக வளர்ந்து வருகிறோம் எனும்போது அப்படித்தான் யோசிக்க தோணுகிறது. சுயேட்சை வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சின்னங்கள் தெளிவாக அச்சிடப்பட்டுள்ள நிலையில் எங்கள் சின்னம் மட்டும்  மறைக்கப்பட்டிருக்கிறது. காரணம் வளர்த்திட கூடாது அதிக வாக்குகளை பெற்றிடக்கூடாது புதிய ஆற்றல் வந்திற கூடாது என்கிற நோக்கம் தான். 

 

நாங்கள் எடுத்து வைக்கிற, நான் ஒரு தேசிய இனத்தின் மகன், என் இனம் என்கிறேன், என் மலை, என் காடு, என் வளம் என்கிறேன். நாங்கள் வரும்போது உங்கள் இஷ்டத்துக்கெல்லாம் ஓஎன்ஜிசி குழாயை போட்டு மீத்தேன், ஈத்தேன் எடுக்க முடியாது. அப்போ எரிபொருளுக்கு என்ன செய்வேன் என்றெல்லாம் கேட்க கூடாது. சிங்கப்பூர் சின்ன நாடு அதுவும் ஈத்தேன் மீத்தேன் எடுக்கிறது மக்கிய மரக்கழிவு மற்றும் குப்பையிலிருந்து எடுக்கிறது. அவ்வளவு சின்ன நாடு அதை செய்யும்போது இவ்வளவு பெரிய நாடு மண்ணின் வளத்தை அழித்ததுதான் அதை எடுக்கணும்னா என்ன?

 

 

அணுவுலையாலதான் மின்சாரம் தயாரிக்க முடியுமா ஏன் காற்றாலை இல்லையா? மாற்று மின் பெருக்கத்துக்கு வழி இல்லையா? அதையெல்லாம் செய்யாமல் இந்த நாசகார திட்டங்களை இந்த அரசு என் மண்ணில் செய்ய நினைக்கிறது. இவ்வளவு மலைகள் இருக்கிறது ஆனால் நியூட்ரினோ திட்டத்தை  மேற்குத்தொடர்ச்சி மலையில்தான் செய்ய என்ன தேவை வருகிறது. இதிலிருந்தே தெரியவில்லையா தகப்பன் இல்லாத வீடு போல தலைவன் இல்லாத நாடாக தறிகெட்டு நிற்கிறது. வருபவர் போகிறவர் எல்லாம்  நாசகார திட்டங்களை கொண்டுவர நினைக்கிறார்கள். இந்த மண்ணின் பிள்ளைகளாக எங்கள் மண்ணின் வளத்தை பாதுக்காக்க சண்டை போடுவோம் அதனால் எங்களை போன்ற அரசியல் கட்சிகள் வளர்ந்திட கூடாது என நினைக்கிறார்கள்.

 

 

தரகர்களை தேர்ந்தெடுக்க கூடிய தேர்தல் அமைப்புதான் இங்கே இருக்கிறதே தவிர எளிய மக்களில் இருந்து தலைவர்களை தேர்ந்தெடுக்கும் அமைப்பு இல்லையே. எல்லாருமே முதலாளிகள். முதலாளிகள் தான் கோடி கொடுத்து சீட் பெறுகிறார்கள், காசு கொடுத்து ஓட்டு பெறுகிறார்கள் முதலாளிகளுக்கான அதிகாரம்தான் திரும்ப திரும்ப கட்டமைக்கப்படுகிறது. 

 

மக்களுக்கான ஆட்சியோ, அதிகாரமோ இங்கு நிறுவப்படவில்லையே. இவ்வளவு அடக்குமுறையையும் எதிர்கொண்டு நாங்கள் வளர்கிறோம் என்று அனுபவிக்கிற எங்களுக்குத்தான் தெரியும்.  கொடி ஏற்ற விடமாட்டார்கள், நாங்கள் கூட்டம் நடத்த அனுமதி கேட்டால் நாங்கள் கேட்ட இடத்தை விட்டு மக்கள் வரவே முடியாத சந்தில் இடம் தருவார்கள். இப்பொழுது அதிகாரத்தில் உள்ளவர்கள் வெற்றியை பெறவில்லை வெற்றியை வாங்குகிறார்கள்.

 

 

ஒரு இளம்தலைமுறை எப்படி நம்பிக்கையோடு எழுந்துவரும். ஒரு ஜனநாயகத்தின் மேல எவ்வளவு வெறுப்பு வரும். எதுவுமே சரியில்லை என்ற உணர்வு வராதா, அந்த சிந்தனை வராமல் இருக்க மயக்குவதற்கு சாதிய போதையை தூண்டுவது, மத போதையை தூண்டுவது, சாராயத்தை ஊற்றி கொடுப்பது, திரைக்கவர்ச்சியை வைத்து மயக்கிபோடுவது சிந்திக்கவே விடாமல் செய்வதுதான் இந்த அதிகாரமும், ஆட்சியாளர்களும் செய்யும் வேலை.

 

 

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நீட் தேர்வுக்கு அதிமுக விலக்கு கோரவில்லை அதேபோல் மத்திய  அமைச்சர் நிதின் கட்கரி எட்டுவழி சாலை முறைப்படி கொண்டுவரப்படும், என கூறியுள்ளனர் அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

 

எட்டுவழி சாலைபோடுவதை இவர்கள் தீர்மானிக்க முடியாது. இது சாகர்மாலா திட்டத்தினுடைய கிளை திட்டம். பீம்ஸ் ஸ்டெக் என்ற அமைப்பு செயல்படுத்துகிறது. நமது நாட்டின் வளத்தை கொள்ளையடிக்கத்தான் சாலை போக்குவரத்து, தொடர்வண்டி போக்குவரத்து, வானூர்தி போக்குவரத்து எல்லாத்தையும் கடல் போக்குவரத்தில் இணைக்க இந்த முயற்சி. எட்டுவழி சாலை போடுவேன் என்பது அவர்களின் முடிவு. ஆனால் அது நடக்கவே நடக்காது என்பது மக்களின் முடிவு என்று கூறினார்.

 

 

நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னம் வாக்குப்பதிவு  இயந்திரத்தில் தெளிவாக இல்லை, எனவே வாக்குபதிவு இயந்திரத்தில் தெளிவாக சின்னத்தைப்  பதியக்கோரி உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மனு தாக்கல் செய்திருந்தது குறிப்படத்தக்கது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்