ADVERTISEMENT

“நமது காலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம்” - சசிகுமார்

03:36 PM Mar 29, 2024 | kavidhasan@nak…

மலையாள இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடு ஜீவிதம்’ நாவல் அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஒருவரால் கடத்தப்பட்டு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு தள்ளப்படுகிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலி மற்றும் அதிலிருந்து அவர் எப்படி தப்பித்து இந்தியா வந்தார் என்பதை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது.

ADVERTISEMENT

இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் 10 வருடங்கள் கதை உருவாக்கத்திலிருந்து 6 வருடங்கள் படப்பிடிப்பிலிருந்து மொத்தம் 16 வருடங்கள் கழித்து இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக பிரித்விராஜ் தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக பிரித்விராஜின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். முன்னதாகவே இப்படத்தின் சிறப்பு காட்சியின் போது, கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். அந்த வகையில் தற்போது, இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் இப்படத்தின் இயக்குநர் குறித்தும் ஆடு ஜீவிதம் படம் குறித்தும் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “பிளெஸ்சி சாரும் பின்னே நானும். சுப்ரமணியபுரம் மலையாளத் திரைக்கதை வெளியீட்டு விழாவில் அவருடைய நட்பு கிடைத்தது. திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் எனது ஈசன் திரைப்படத்தில் நட்புக்காக நடித்துக் கொடுத்தார். அப்பொழுதிருந்தே ஆடு ஜீவிதத்தின் கதையை மனதில் சுமந்து கொண்டிருந்தார்.

பெரும் பாரமென அக்கதை அவரது இதயத்தை அழுத்திக் கொண்டிருப்பதை அவர் பேச்சில் உணர முடிந்தது. இத்தனை வருடம் கழித்து தனது பாரத்தை நமது இதயத்தில் ஏற்றி வைத்திருக்கிறார். திரைப்படத்தின் ஒற்றை வரியாக பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற குரல் எனக்குள் ஒலிப்பதைப் போல இருந்தது. பிருத்விராஜ் அக்குரலைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். மனதையும் உடலையும் ஒப்புக் கொடுத்திருக்கிறார். பின்னணியில் முன்னணியாக ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்த்தியிருப்பது மாபெரும் பேரிசை. எவரும் மறக்க முடியாத மறுக்க முடியாத பெருவெள்ளம். பிளெஸ்சி சாருக்கு எனது அன்பும் வாழ்த்துகளும். கோட் லைப் நமது காலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம்” எனப் பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT