ADVERTISEMENT

"அந்த உயிரிழப்பு காரணமாக தனது ஸ்டூடியோவையே ஏ.ஆர்.ரஹ்மான் மூடிவிட்டார்" - ஆர்.கே.செல்வமணி

11:55 AM Feb 27, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக விபத்து நடந்து ஊழியர்கள் உயிர்பலியாவது அவ்வப்போது நடந்தேறி வருகிறது. இறந்தவர்களுக்கு கதாநாயகர்கள் சார்பில் இழப்பீடு கொடுக்கப்பட்டாலும் அவர்களின் மறைவு அப்படக்குழுவையும் சினிமா துறையையும் சற்று பாதிக்கிறது. சமீபத்தில் வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பு தளத்தில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் கயிறு அறுந்து இறந்தார். தொடர்ந்து ஐயர்கண்டிகையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் லைட் மேன் குமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இப்படி தொடர் விபத்து நடந்து வரும் நிலையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அவர் பேசுகையில், "படப்பிடிப்பு தளத்தில் உயிரிழக்கும் சம்பவம் மூன்று நாட்களுக்கு பிறகு ஒரு சாதாரண செய்தியாக அமைந்து விடுகிறது. ஆனால் அதன் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி செய்ய எந்த ஒரு வகையிலும் வழி இல்லாமல் போய்விடுகிறது. ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் உயிர் சேதம் ஏற்பட்டால் அவர்கள் உதவி செய்துவிடுகிறார்கள். ஆனால் சிறிய படங்களில் இறந்து போகிறவர்களுக்கு அவர்கள் உடலை கூட பணம் கொடுத்து எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. அந்த தயாரிப்பாளர்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை.

ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிற இடத்தில் ஒரு தொழிலாளி இறந்துவிட்டால், எப்படி மத்திய மாநில அரசுகள் உதவி செய்கிறதோ, அதுபோன்று திரைப்படங்களில் பணிபுரிகின்ற தொழிலாளர்களுக்கு உதவ முன்வர வேண்டும். பணியின்போது இறப்பவர்கள் அல்லது காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் அந்த குடும்பத்துக்காக நிதி உதவி வழங்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறோம். திரைப்படத்துறையில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவி செய்யுமாறு மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்‌. வருகின்ற நிதியாண்டு பட்ஜெட்டில்‌ திரைப்படத் தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவிகள்‌ வழங்குகின்ற திட்டத்தை அறிவிக்குமாறு தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்களை பணிவன்புடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌" என்றார்.

மேலும், "ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் லைட் மேன் இறந்த சம்பவம் ஏ.ஆர்.ரஹ்மானை பெரிதும் பாதித்துள்ளது. அதன் காரணமாக அந்த ஸ்டூடியோவையே அவர் இழுத்து மூடிவிட்டார். பின்பு அவர் எங்களை தொடர்பு கொண்டு கடிதம் எழுதியிருந்தார். அதில் லைட் மேன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் படப்பிடிப்பு தளத்தில் மரணம் அடைந்தால் அவர்களை காப்பாற்ற நாம் ஏதாவது உதவி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் அவர்களுக்கு உதவி செய்யம் நோக்கில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி வருகிற மார்ச் 19ஆம் தேதி நடத்த முடிவெடுத்துள்ளோம். அந்த நிகழ்ச்சியில் திரட்டப்படுகின்ற நிதி, அதன் மூலம் வருகிற நன்கொடை அனைத்தும் பாதிக்கப்படுவோரின் குடும்பத்திற்கு உதவி செய்ய பயன்படுத்தப்படும். இது சிறிய பட்ஜெட் படங்கள் உட்பட அனைத்து படங்களில் பணிபுரிவோருக்கும் பொருந்தும்" எனப் பேசினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT