ADVERTISEMENT

பவர் ஸ்டாருக்கு முன்னோடி, அழகிரிக்குத் தம்பி, சுதாகரனுக்கு.... - ஜே.கே.ரித்திஷ் கதை

06:33 PM Apr 13, 2019 | vasanthbalakrishnan

2008ஆம் ஆண்டு... நாயகன் என்ற பெயரில் ஒரு படத்தின் போஸ்டர் தமிழக மக்களை நின்று கவனிக்க வைத்தது. இரண்டு காரணங்கள்... ஒன்று 'நாயகன்', கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தமிழின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆல் டைம் பெஸ்ட் மூவி. அந்தப் பெயரில் வந்திருக்கும் திரைப்படம். இன்னொரு காரணம், 'யார்ரா இது...' என்று கேட்கும் அளவுக்கு உடையிலும் நடையிலும் கவனிக்கவைத்த அந்த ஹீரோ. அதற்கு முன்பே ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் 'நாயகன்' படம்தான் ஜே.கே.ரித்தீஷை அனைவரும் கவனிக்க வைத்தது. ஓப்பனிங் சாங், ஹீரோ பில்ட்-அப் என அத்தனை அட்டகாசங்களையும் அந்தப் படத்தில் செய்திருந்தார் ரித்திஷ். அந்தப் படம் வெளிவந்த போதே ஊர் ஊருக்கு ரசிகர் மன்ற பேனர்கள் எல்லாம் வைக்கப்பட்திருந்தன. 'யாருய்யா இது... யாருன்னே தெரியாது, ஆனா ரசிகர் மன்றமெல்லாம் இருக்கு' என்று அனைவருக்கும் கேள்வி எழுந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அந்தப் படம் வெளிவரும் முன்பே, 'சின்னப்புள்ள', 'கானல் நீர்' போன்ற படங்களில் நடித்திருந்தார் ரித்திஷ். அப்பொழுதே தனக்கென ரசிகர் மன்றங்களை அமைத்துக்கொண்டார். அந்த சமயத்தில் வடபழனியில் ஓடிய பல ஆட்டோக்களில் இவரது படம் இருந்தது. வடபழனியில் தலைமை ரசிகர் மன்றமும் இருந்தது. ஊர் ஊருக்கு மன்றங்கள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு உதவி, முதியோருக்கு உதவி என அவ்வப்போது ரித்திஷ் குறித்து செய்திகள் வெளிவந்தன. 'நாலு பேர் சேர்ந்து சென்னைக்குப் போய் உங்களுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்குறோம்னு சொன்னா காசு தாறாராம்' என்று ஊர் ஊருக்குப் பலர் கிளம்பினார்கள். அந்த அளவுக்கு வாழும் வள்ளலாய் கொஞ்ச நாட்கள் இருந்தார் ரித்திஷ். 'நாயகன்' படத்தை ஓரிரு அரங்குகளில் நூறு நாட்கள் ஓட்டினார். இவர் செய்வது வெட்டிச் செலவு என்று அப்போது பலர் கூறினார்கள். ஆனால், 'நட்சத்திர ஜன்னலில்', 'வெற்றிக்கொடி கட்டு' போன்ற பாடல்களில் ஒரே பாட்டில் முன்னேறும் ஹீரோ போல, முதலில் சினிமா, அப்புறம் அரசியல், நேரே நாடாளுமன்றம் என்று முன்னேறினார் ரித்திஷ்.

எங்கிருந்து ஒருவருக்கு இவ்வளவு பணம் என்ற கேள்வியும் அதன் பின் பல யூகங்களும் தொடர்ந்து வந்தன. ரித்திஷ், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனான சுதாகரனின் பினாமி எனவும் சுதாகரனின் பணம்தான் இப்படி விளையாடுகிறது என்றும் சிலர் கூறினார்கள். அது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை ரித்திஷ். தான் திமுக முக்கியஸ்தர் சுப.தங்கவேலனின் உறவினர் எனவும், தனக்கு பல தொழில்கள் இருப்பதாகவும் பதில் கூறினார் ரித்திஷ். பிறகு ராமநாதபுரத்தில் இவருக்கும் இவரது தாத்தா என சொல்லப்பட்ட தங்கவேலனுக்கும் மோதல் உண்டானது. திமுகவில் அழகிரி அணியின் முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்தார் ரித்திஷ். திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட போதும் சில நாட்கள் அவருடன் தொடர்ந்தார். பின்னர், அங்கு தனக்கு எதிர்காலம் இல்லையென உணர்ந்து அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலில் தினகரனை ஆதரித்த இவர் பிறகு எடப்பாடி பழனிச்சாமி பக்கம் வந்தார்.

தன்னை டாக்டர் என்று சொல்லிக்கொண்டு சினிமாவுக்குள் வந்த 'பவர்ஸ்டார்' சீனிவாசனின் முன்னோடி இவர் என்று சொல்லலாம். ரித்திஷைப் போலவே சினிமாவில் அதிரடி ஹீரோவாக நடித்து, சென்னையில் ஒரு திரையரங்கை கான்டராக்ட் எடுத்து தனது 'லத்திகா', 'ஆனந்தத்தொல்லை' படங்களை நூறு நாட்களுக்கு மேல் ஓட்டி, மெல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கலந்தார் சீனிவாசன். பிறகு, அங்கு கண்டுகொள்ளப்படாமல் போக சினிமாவில் வாய்ப்புகள் வந்து பிஸியானார். இப்போது தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால், ஜே.கே.ரித்திஷ் அளவுக்கு பவர்ஸ்டார் அரசியலில் வெற்றி பெறவில்லை. எப்படி வந்தார், எப்படி வளர்ந்தார் என பலரையும் புருவம் உயர்த்த வைத்த வகையில் ரித்திஷ் வாழ்க்கை தனித்துவம் வாய்ந்ததுதான்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT